×

தவறாக சம்பளம் நிர்ணயித்து பின்னர் பிடித்தம் வழக்கு தொடர்ந்த காவலருக்கு பிரச்னை என்றால் நடவடிக்கை: சிறப்பு போலீஸ் பட்டாலியன் அதிகாரிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: தவறுதலாக சம்பளம் நிர்ணயம் செய்துவிட்டு பின்னர் பிடித்தம் செய்ததாக வழக்கு தொடர்ந்த காவலருக்கு ஏதாவது பிரச்னை ஏற்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்கு தொடரப்படும் என்று உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது. சென்னை ஆவடி தமிழ்நாடு சிறப்பு போலீஸ் பட்டாலியனில் கான்ஸ்டபிளாக பணியாற்றும் எஸ்.ராஜாவுக்கு, 6வது சம்பள குழுவின் அடிப்படையில் 2009 முதல் 2012வரை ரூ.11,653 சம்பளம் வழங்கப்பட்டது. இந்நிலையில், 2012 ஜூலை மாதம் சம்பளம் நிறுத்தப்பட்டது. தவறாக சம்பளம் நிர்ணயிக்கப்பட்டதாகவும், அதனால் கூடுதலாக வழங்கப்பட்ட ரூ.56,363 சம்பளத்தை படிப்படியாக பிடித்தம் செய்ய பூந்தமல்லி 13வது பட்டாலியன் கமாண்டென்ட் உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதை எதிர்த்து ராஜா தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், மனுதாரரின் சம்பளம் எப்படி தவறாக நிர்ணயம் செய்யப்பட்டது என அரசு தரப்பு விளக்கம் தரவும், சம்பள பிடித்தம் செய்யும் உத்தரவை பிறப்பித்த 13வது பட்டாலியன் காமாண்டென்ட் ஆஜராகி விளக்கம் அளிக்கவும் உத்தரவிட்டது.

இந்த வழக்கு நீதிபதி ஜெ.சத்யநாராயண பிரசாத் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, 13வது பட்டாலியன் காமாண்டென்ட் அய்யாசாமி ஆஜரானார். அப்போது வழக்கறிஞர் ஜார்ஜ் வில்லியம்ஸ், இந்த வழக்கை மனுதாரர் திரும்ப பெறுவதாக தெரிவித்தார். இதைக்கேட்ட நீதிபதி, மனுதாரர் வழக்கை திரும்ப பெறுவதாக கூறுவதில் இருந்தே அவர் மிரட்டப்பட்டுள்ளதாக ெதரிகிறது. அவருக்கு பிரச்னை ஏற்பட்டால் நீதிமன்றம் அவர்கள் மீது தாமாக முன்வந்து வழக்கு தொடரும் என்று எச்சரித்தார். பின்னர் 13வது பட்டாலியன் காமாண்டென்ட் அய்யாசாமியிடம், சம்மந்தப்பட்ட அதிகாரி மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இதே போன்று வேறு யாருக்காவது பிரச்னை இருந்தால் உடனடியாக கண்டறிந்து தீர்க்க வேண்டும். நேரில் ஆஜராக சம்மன் அனுப்பியதில் எந்த உள்நோக்கமும் இல்லை. சூழல் ஏற்பட்டதால் தான் அனுப்பப்பட்டது என்று தெரிவித்து வழக்கை திரும்ப பெற அனுமதியளித்து உத்தரவிட்டார்.

 

The post தவறாக சம்பளம் நிர்ணயித்து பின்னர் பிடித்தம் வழக்கு தொடர்ந்த காவலருக்கு பிரச்னை என்றால் நடவடிக்கை: சிறப்பு போலீஸ் பட்டாலியன் அதிகாரிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Special Police Battalion ,CHENNAI ,High Court ,Chennai Avadi ,Tamil Nadu Special Police Battalion ,Dinakaran ,
× RELATED அறுவை சிகிச்சை மூலம் பாலினம்...