×

எண்ணூர் உர தொழிற்சாலையை மூடக்கோரி 33 கிராம மக்கள் 42வது நாளாக போராட்டம்: வியாபாரிகள் கடையடைப்பு, மறியல்

திருவொற்றியூர்: எண்ணூர் உரத் தொழிற்சாலையை மூடக் கோரி 42வது நாளாக நேற்று பொதுமக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு ஆதரவு தெரிவித்து வியாபாரிகள் கடையடைப்பு நடத்தியதுடன் மறியலில் ஈடுபட்டனர். எண்ணூரில் உள்ள கோரமண்டல் தனியார் உர தொழிற்சாலையின் குழாய் உடைந்து அமோனியா வாயு கசிவு ஏற்பட்டதால் பெரியகுப்பம், சின்னகுப்பம் மற்றும் எண்ணூர் பகுதி பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து இந்த ஆலையை மாசுகட்டுப்பாடு வாரியம் தற்காலிகமாக மூட உத்தரவிட்டுள்ளது. ஆனாலும், உர ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி பாதிக்கப்பட்ட பொதுமக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பொதுமக்களுக்கு பல்வேறு அரசியல் கட்சிகள், வியாபாரிகள் சங்கம், எண்ணூரில் உள்ள 33 கிராம மற்றும் குடியிருப்போர் நல சங்கங்கள், சமூக நல ஆர்வலர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று 42வது நாளாக அறப்போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுக்கு எண்ணூரில் உள்ள 33 கிராமங்களை சேர்ந்த அனைத்து வியாபாரிகளும் ஆதரவு தெரிவித்து ஒரு நாள் கடையடைப்பு செய்தனர். நேற்று காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை நடந்த கடையடைப்பால் சுமார் 500 கடைகளும் மற்றும் எண்ணூரில் உள்ள அனைத்து மீன் மற்றும் காய்கறி மார்க்கெட்டுகளும் நேற்று செயல்படவில்லை. மேலும் அண்ணா நகர் காட்டுக்குப்பம், சின்னகுப்பம், பெரியகுப்பம் போன்ற 10 இடங்களில் பொதுமக்களுடன் வியாபாரிகளும் சேர்ந்து உர தொழிற்சாலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் முற்றிலுமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மதியம் ஒன்றரை மணி வரை மறியல் போராட்டம் தொடர்ந்தது. அதன் பின்னர் கலைந்து சென்றனர். மாலை 5 மணி வரை கடையடைப்பில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் 300க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

 

The post எண்ணூர் உர தொழிற்சாலையை மூடக்கோரி 33 கிராம மக்கள் 42வது நாளாக போராட்டம்: வியாபாரிகள் கடையடைப்பு, மறியல் appeared first on Dinakaran.

Tags : Ennore ,Tiruvottiyur ,Fertilizer Factory ,Coromandel Private Fertilizer Factory ,Ammonia ,Ennore Fertilizer Factory ,Dinakaran ,
× RELATED மணலி சாலையில் குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்