×

தமிழ்நாடு முழுவதும் திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து ரூ.2544.19 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள் திறக்கப்பட்டுள்ளது: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தகவல்

சென்னை: தமிழ்நாடு முழுவதும் திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து ரூ.2,544.19 கோடியில் 23,259 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி திறந்து வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் கட்டப்பட்ட கல்யாணபுரம் திட்டப்பகுதிகளில் ரூ.44.91 கோடி மதிப்பீட்டில் 288 புதிய அடுக்குமாடி குடியிருப்புகளையும், அங்கன்வாடி மையம், மகளிர்கான உடற்பயிற்சி கூடத்தையும், சிறுவர் பூங்காவையும் திறந்து வைத்து பயனாளிகளுக்கு குடியிருப்புகளுக்கான ஒதுக்கீடு ஆணைகள் வழங்கினார்.

பின்னர் அவர் பேசியதாவது: கடந்த அக்டோபர் மாதம் சென்னையில் திரு.வி.க.நகர், பெரியார் நகர் போன்ற இடங்களில் நம்முடைய வாரியத்தின் சார்பாக ரூ556.60 கோடி மதிப்பீட்டில் 3,238 குடியிருப்புகளை கட்டுவதற்கு அடிக்கல் நாட்டினேன். இந்த கட்டுமான பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. விரைவில் அந்த பகுதிகளும் திறக்கப்படும். எனது சேப்பாக்கம் – திருவல்லிக்கேணியில் 4 பணிகள் நடைபெற்று வருகிறது. அதையும் விரைந்து மக்களுடைய பயன்பாட்டிற்கு கொடுக்க வேண்டும்.

தமிழ்நாடு முழுவதும் ரூ.2,400 கோடி மதிப்பீட்டில் புதிதாக 15,000 குடியிருப்புகள் கட்டும் பணியை நம்முடைய அரசு மேற்கொண்டு வருகிறது. தேர்தல் அறிக்கையில் முதல்வர் பழுதடைந்த பழைய குடியிருப்புகளை இடித்து விட்டு புதிதாக குடியிருப்புகளை அதே இடத்தில் கட்டித் தருகிறோம் என வாக்குறுதி வழங்கினார். சொன்னதை செய்யும் விதமாக இன்றைக்கு புதிய குடியிருப்புகளை அதே இடத்தில் கட்டி தருகிறோம். புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டி வருகிறோம்.

திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து இதுவரை 72 திட்டப்பகுதிகளில் 2544.19 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட 23,259 அடுக்குமாடி குடியிருப்புகள் வீடற்ற ஏழை எளிய மக்களுக்காகவும், குடிசைப் பகுதிகளில் வாழும் மக்களுக்காகவும் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார். குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசுகையில், “கடந்த அதிமுக ஆட்சியில் ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் ஒப்புதல் பெற்ற சுமார் 31,197 குடியிருப்புகள் கொண்ட 48 திட்டப் பகுதிகளுக்கு திட்ட அனுமதி, வரைபட அனுமதி, சுற்றுச்சூழல் அனுமதி என எந்த அனுமதியும் பெறாமல் ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டு பணிகள் நடைபெற்று வந்துள்ளன. இதில், பல கட்டிட பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டும் இருந்தன.

உதாரணமாக 1,044 குடியிருப்புகள் கொண்ட மூலகொத்தளம், 288 குடியிருப்புகள் கொண்ட கல்யாணபுரம், மணலி புதுநகர் போன்ற திட்டப் பகுதிகளில் கட்டிடப் பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டும், அரசின் பல்வேறு அனுமதிகள் பெறாத காரணத்தால், மின் இணைப்பு குடிநீர் இணைப்பு, கழிவு நீர் இணைப்பு வழங்கப்படாமல் இருந்தது.

திமுக அரசு பொறுப்பேற்றபின், இந்த திட்டங்களுக்கு எல்லாம் அனுமதி பெற்று, குடியுருப்புகள் திறக்கப்பட்டு, ஏழை எளிய மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது” என்றார். நிகழ்ச்சியில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு, மத்திய சென்னை எம்பி தயாநிதி மாறன், எம்எல்ஏ தாயகம் கவி, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை செயலாளர் சமயமூர்த்தி மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

The post தமிழ்நாடு முழுவதும் திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து ரூ.2544.19 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள் திறக்கப்பட்டுள்ளது: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தகவல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,DMK government ,Minister ,Udayanidhi Stalin ,Chennai ,Welfare ,Development ,Udhayanidhi Stalin ,
× RELATED முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்து...