×

நீண்டகாலமாக சிறையில் உள்ள இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டும்: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேண்டுகோள்

சென்னை: நீண்டகாலமாக சிறையில் உள்ள இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது, நீண்ட நெடுங்காலமாக சிறை தண்டனை அனுபவிக்கும் ஆயுள் சிறைவாசிகளை கருணை அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும்; அவ்வாறு விடுதலை செய்கின்ற போது அதில் மதபேதமோ, வழக்கு வித்தியாசமோ பார்க்கக்கூடாது என்பதை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட பல தரப்பட்டோரின் தொடர் முயற்சிகளின் பயனாக ஆயுள் சிறைவாசிகள் விடுதலை குறித்து பரிசீலிக்க சென்னை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதியரசர் என். ஆதிநாதன் தலைமையில் 6 பேர் அடங்கிய குழுவை அமைப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் 22.12.2021ல் அறிவித்தார். இந்த குழு அரசுக்கு 28.10.2022ல் அளித்த அறிக்கையில் 264 ஆயுள் சிறைவாசிகளை முன் விடுதலை செய்யலாம் என பரிந்துரைத்தது.

அதன் அடிப்படையில் பேரறிஞர் அண்ணா அவர்களால் 115வது பிறந்த நாளையொட்டி முதற்கட்டமாக 49 ஆயுள் சிறைவாசிகள் விடுதலைக்கான கோப்பினை ஆளுநருக்கு 24.08.2023 அன்று தமிழக அரசு அனுப்பியது. இதில் 20 பேர் முஸ்லிம்களாவர். தற்போது 2024 பிப்ரவரி 5 மற்றும் 6 தேதிகள் 17பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இதில் 10 பேர் முஸ்லிம்கள். ஆயுள் சிறைவாசிகளில் 36 முஸ்லிம்கள் உள்ளனர். இவர்களில் 35 பேர் பரோல் விடுப்பில் உள்ளனர்.

கடலூர் மத்திய சிறையில் உள்ள ரியாஸுர் ரஹ்மான் பரோல் விடுப்பு வேண்டாம், விடுதலையே வேண்டும் என கூறி சிறையிலையே உள்ளார். பரோல் விடுப்பில் உள்ள 21பேரில் 10 பேர் தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ளனர். மற்றவர்களின் பரோல் விடுப்பு காலம் வரும் 21ம் தேதியுடன் முடிவடைகிறது. இவர்கள் விடுதலை குறித்த அறிவிப்பு வரும் வரை அவர்களை தொடர்ந்து பரோல் விடுப்பில் விட வலியுறுத்துகிறோம். வெடிகுண்டு வழக்கில் தண்டனை அனுபவிக்கும் கோவை பாஷா, புகாரி, நவாப், தாஜுதீன் ஆகிய நால்வர் விடுதலைக்கு நீதியரசர் ஆதிநாதன் குழு பரிந்துரை செய்திருந்தது. தற்போது விடுதலையானவர்களில் அவர்கள் பெயர் இல்லை.

வெடிகுண்டு வழக்கில் தொடர்புடையவர்கள் நீண்ட நெடுங்காலம் சிறைவாசம் அனுபவித்து விட்டார்கள்.கருணை அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டு திருந்தி வாழ வாய்ப்பு அளிக்க வேண்டும் என்பதே நமது வேண்டுகோள். அந்த வேண்டுகோளை தமிழ்நாடு அரசும், ஆளுநரும் நிறைவேற்றுவார்கள் என நம்புகிறோம். ஆயுள் சிறைவாசிகள் விடுதலைக்கு துணை நின்ற தமிழக அரசு, ஆளுநர் மற்றும் நீதித்துறையினர் உள்ளிட்ட அனைவருக்கும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியை உரித்தாக்குகிறேன். இவ்வாறு பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் குறிப்பிட்டுள்ளார்.

The post நீண்டகாலமாக சிறையில் உள்ள இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டும்: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேண்டுகோள் appeared first on Dinakaran.

Tags : Indian Union Muslim League ,CHENNAI ,Union Muslim League of India ,
× RELATED அவதூறு பேசி ஆட்சிக்கு வர முயற்சி...