×

புதிய தலைமைச் செயலக கட்டிடம் முறைகேடு: அரசாணை ரத்து செய்யப்பட்டதை எதிர்த்த மேல்முறையீடு மனு மீது தீர்ப்பு ஒத்திவைப்பு

சென்னை: புதிய தலைமைச் செயலக கட்டிடம் முறைகேடு தொடர்பான வழக்கு விசாரணை குறித்த அரசாணை ரத்து செய்யப்பட்டதை எதிர்த்த அரசின் மேல்முறையீடு மனுக்கள் மீது தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. லஞ்ச ஒழிப்புத்துறை தொடர்பான விசாரணைக்கு பிறப்பிக்கப்பட்ட அரசாணையை எதிர்த்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துரைமுருகன் வழக்குகளை விசாரித்த நீதிமன்றம் அரசாணையை ரத்து செய்திருந்தது.

புதிய தலைமைச் செயலக கட்டிடம் முறைகேடு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்துவதற்கு அனுமதி அளித்து முந்தைய அதிமுக அரசு ஒரு உத்தரவை பிறப்பித்திருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து அப்போதைய தலைவர் ஸ்டாலின் மற்றும் துரைமுருகன் ஆகியோர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார்கள். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அரசினுடைய உத்தரவை ரத்து செய்து தீர்ப்பளித்திருந்தார்.

இந்த தீர்ப்பை எதிர்த்து அப்போதைய அதிமுக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது. இந்நிலையில் தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்த நிலையில் இந்த மேல்முறையீடு வழக்கில் திரும்பப்பெறுவதற்கு அனுமதி கேட்டு மேல்முறையீடு தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக முன்னாள் எம்.பி.ஜெயவர்தன் எதிர்ப்பு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்குகள் நீதிபதி சுரேஷ்குமார் மற்றும் உமேஷ்குமார் ஆகியோர் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஜெயவர்தன் தரப்பில் பொதுநலன் சம்மந்தப்பட்ட இந்த வழக்கில் வாபஸ் பெறுவதற்கு அரசுக்கு அதிகாரம் இல்லை என்றும் முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்தி அந்த விசாரணையானது முடிவு காண அனுமதிக்க வேண்டுமே தவிர வழக்கை கைவிட முடியாது என்று வாதிடப்பட்டது.

தமிழக அரசு தரப்பில் அரசு தலைமை வழக்கறிஞர் ராமன் ஆஜராகி இந்த மேல்முறையீடு வழக்கில் திரும்பப்பெற்றாலும் மனுதாரருக்கு மாற்று நிவாரண வழிகள் உள்ளது. இந்த வழக்கை வாபஸ் பெறுவது என்பது அரசினுடைய முடிவு என்றும் குறிப்பிட்டிருந்தார். முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் துரைமுருகன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வில்சன் மேல்முறையீடு வழக்கை வாபஸ் பெறுவதற்கு அரசுக்கு அதிகாரம் இருக்கிறது. ஜெயவர்தன் இணைப்பு மனுவை ஏற்கக்கூடாது என்று கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இந்த வழக்கை பொறுத்தவரை அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்ததை அடுத்து தமிழக அரசின் மனுவின் தீர்ப்பை நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் வழக்கை ஒத்திவைத்துள்ளனர்.

The post புதிய தலைமைச் செயலக கட்டிடம் முறைகேடு: அரசாணை ரத்து செய்யப்பட்டதை எதிர்த்த மேல்முறையீடு மனு மீது தீர்ப்பு ஒத்திவைப்பு appeared first on Dinakaran.

Tags : New Secretariat Building ,CHENNAI ,secretariat building ,Chief Minister ,M.K.Stalin ,Duraimurugan ,New Chief Secretariat building ,Dinakaran ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...