×

திருக்குறளில் அச்சமும் அஞ்சாமையும்…!

நன்றி குங்குமம் ஆன்மிகம்

மனிதர்களின் அச்ச உணர்வைத் திருக்குறள் கண்டிக்கிறது. மனிதர்களுக்கு தைரியம் தேவை, வீரம்தேவை என அது உரத்து முழங்குகிறது. அதே நேரம், தீயவற்றைச் செய்வதற்கு மனிதர் அச்சம் கொள்ளவேண்டும் என்றும் வலியுறுத்துகிறது. இந்தக் கருத்தை உள்ளடக்கிய அதிகாரத் தலைப்பிலேயே `தீவினையச்சம்’ என அச்சம் என்ற சொல்லை வள்ளுவம் முன்னிலைப்படுத்துகிறது. அதுபோலவே, ஒருவரிடமிருந்து தானமாக ஒரு பொருளைப் பெறுவதற்கும் மனிதர்கள் அஞ்சவேண்டும், உழைத்துப் பிழைக்கவே மனிதர் முயலவேண்டும் என்ற கருத்தில் `இரவச்சம்’ என்ற அதிகாரத்தையும் வள்ளுவர் படைத்திருக்கிறார்.

அச்சத்தைப் பற்றிப் பேசுகிற வள்ளுவர், அஞ்சாமை குறித்தும் பேசுகிறார். `அவை அஞ்சாமை’ என அஞ்சாதிருத்தலைத் தலைப்பிலேயே வைத்தும் ஓர் அதிகாரத்தைப் படைக்கிறார். அச்சம் என்ற சொல்லைத் தன்னில் தாங்கிப் பல திருக்குறள்கள் அரிய நீதிக் கருத்துகளைப் பேசுகின்றன.

பகை பாவம் அச்சம் பழியென நான்கும்
இகவாவாம் இல்லிறப்பான் கண்.
(குறள் எண் 146)

அடுத்தவன் மனைவி மேல் ஆசை கொள்பவனைவிட்டுப் பகை, பாவம், பழி, அச்சம் என்னும் நான்கும் நீங்குவதில்லை.

தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர்
தீவினை என்னும் செருக்கு.
(குறள் எண் 201)

தீச்செயலைச் செய்தலாகிய இறுமாப்பைத் தீவினையாளர்கள் அஞ்ச மாட்டார்கள். ஆனால், மேலோர்கள் கெட்ட செயலைச் செய்வதற்கு அஞ்சுவார்கள்.

தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப் படும்.
(குறள் எண் 202)

தீய செயல்கள் கெட்டதையே தரும். ஆகையால், தீய செயல்களைத் தீயை விடக் கொடியதாக நினைத்துச் சான்றோர் அதைச் செய்ய அஞ்சுவார்கள்.

அஞ்சுவது அஞ்சாமை பேதைமை அஞ்சுவது
அஞ்சல் அறிவார் தொழில்.
(குறள் எண் 428)

அஞ்ச வேண்டியவற்றுக்கு அஞ்சாதிருப்பது பேதைமையாகும். அறிவுடையார் அஞ்ச வேண்டியவற்றுக்கு அஞ்சவே செய்வர்.

அச்சம் உடையார்க்கு அரண்இல்லை ஆங்கில்லை
பொச்சாப்பு உடையார்க்கு நன்கு.
(குறள் எண் 534)

உள்ளத்தில் அச்சம் உடையவர்களுக்கு வெளியே அரண் இருந்தாலும் எந்தப் பயனும் இல்லை. அதுபோல், மறதி உடையவர்களுக்கு நல்ல உயர்ந்த நிலை வாய்த்தும் அதனால் பயன் இல்லை.

அச்சமே கீழ்களது ஆசாரம் எச்சம்
அவாவுண்டேல் உண்டாம் சிறிது.
(குறள் எண் 1075)

கயவர்களிடம் சற்றேனும் நல்லொழுக்கம் இருக்குமானால் தண்டனை பற்றிய அச்சமே அதற்குக் காரணமாகும். அதையும் தாண்டி, அவர்கள் ஆசைப்படும் பொருள் கிடைப்பதாக இருந்தால், அதனாலும் சிறிது ஒழுக்கம் அவர்களிடம் இருக்கும். ராமாயணத்தில் கடும் அச்சத்தோடு ஒரு காகம் ஒரே ஒரு புல்லுக்கு பயந்து உலகெங்கும் பறந்து ஓடிய செய்தி வருகிறது.

சீதாதேவியின் மடியில் தலைவைத்து உறங்கிக் கொண்டிருக்கிறான், ராமபிரான். காகவடிவில் வந்த காகாசுரன், சீதையின் மேனியை அலகால் தீண்ட, அந்தக் குருதி பட்டு ராமன் உறக்கம் கலைகிறது. தன் காதல் மனைவியைத் துன்புறுத்திய காகாசுரன் மேல் கடும் சீற்றம் கொள்கிறது, ராமன் மனம். கையில் வில்லும் அம்பும் இல்லாத சூழலில் அருகிலிருந்த ஒரு புல்லைப் பறித்து மந்திரம் சொல்லி அந்தப் புல்லையே அஸ்திரமாக்கிக் காகத்தை நோக்கி வீசுகிறான், ராமன்.

புல் காகத்தைத் துரத்த, திகைத்த காகம், அச்சத்தோடு விண்ணில் பறக்கிறது. ஆனால், புல்லோ விடாமல் துரத்துகிறது. சிவன், பிரம்மன் உள்ளிட்ட தெய்வங்களிடமும், அனைத்து தேவர்களிடமும் காகம் அடைக்கலம் கேட்க, ராமனைப் பகைத்துக் கொள்ள இயலாதென எல்லோரும் கைவிரிக்கிறார்கள். காகம் பறந்தோடி வந்து சீதையின் பாதங்களையே தஞ்சமடைகிறது. அன்னை சீதை, கருணையே வடிவானவள் அல்லவா? தன்னைத் துன்புறுத்திய காகத்தை மன்னிக்கிறாள். அவள் காகத்தின் மேல் பரிவு காட்டுமாறு ராமனிடம் பரிந்துரைக்கிறாள்.

எய்த அஸ்திரத்திற்கு ஏதேனும் ஓர் இலக்கு வேண்டும் என்பதால், காகத்தின் ஒரு கண்ணை மட்டும் எடுத்துவிட்டு ராமன் அதை மன்னித்து அனுப்புவதாகச் சொல்கிறது ராமாயணம். இன்றும் காகங்கள் ஒற்றைக் கண்ணோடு தலைசாய்த்துப் பார்க்கக் காரணமாகத் திகழ்வது இந்த ராமாயண நிகழ்வுதான். வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் என்ற பழமொழிக்கு ஆதாரமாக அமைந்ததும் இந்தக் கதைதான்.

காகத்தின் அச்சத்தைப் பற்றி மட்டுமல்ல, சுக்கிரீவனின் அச்சத்தைப் பற்றியும் ராமாயணம் பேசுகிறது. தன்னைக் கொல்லவென்றே துரத்தும் தன் அண்ணன் வாலிக்கு பயந்து அவன் காடுமேடெல்லாம் அலைகிறான். கடைசியில் ஒரு சாபத்தால், தன் அண்ணன் வர இயலாத ரிஷியமுக பர்வதத்தில் தஞ்சமடைகிறான். அதன்பின், ராமபிரானால் வாலிவதம் நடப்பதை ராமாயணம் சொல்கிறது. வாலி வதை நிகழ்வுக்குப் பிறகு, சீதையைத் தேடும் முயற்சிகள் தீவிரமாக மேற்கொள்ளப்படுகின்றன.

அந்த நேரத்தில், வானரப்படைகளிடம் எங்கெங்கே சீதையைத் தேடுவது என்று விவரித்து பல்வேறு நிலப் பரப்புகளின் அடையாளங்களை எல்லாம் எடுத்துச் சொல்லி விளக்குகிறான் சுக்கிரீவன். சுக்கிரீவனின் பேச்சை அருகிருந்து கேட்டுக் கொண்டிருக்கும் ராமபிரானின் மனம், அவனது அபாரமான பூகோள அறிவைப் பார்த்து வியக்கிறது.`உலகின் அத்தனை பிரதேசங்களையும் பற்றிய இத்தனை அறிவு எப்படி உனக்குக் கிடைத்தது?’ என பிரமிப்புடன் சுக்கிரீவனிடம் வினவுகிறான் ராமன்.

`அண்ணன் கொல்வான் என அச்சமடைந்து, அவன் துரத்தத் துரத்த எல்லா இடங்களுக்கும் ஓடித்திரிந்தேனே, அந்த அச்சம் நிறைந்த ஓட்டத்திற்குக் கிடைத்த பரிசுதான் எனது இந்த பூகோள அறிவு! என் நிலவியல் சார்ந்த அறிவு பரந்துபட்டதற்குக் காரணம் அறிவுசார்ந்த என் முனைப்பு அல்ல, அச்சம் தானாய்க் கற்றுக் கொடுத்த பாடம் இது!’ என பதில் சொல்கிறான் சுக்கிரீவன்!

ஒருமுறை அம்பரீஷ மகாராஜா, ஏகாதசி விரதமிருக்கும் சூழலில் அவரைச் சந்தித்தார் சீற்றத்திற்குப் பெயர்பெற்ற முனிவர், துர்வாசர். துவாதசியன்று ஏகாதசி விரதத்தை நிறைவுசெய்து, அம்பரீஷர் உணவுண்ணக் காத்திருந்தபோது, விருந்தினரான துர்வாசர் வரத் தாமதமாயிற்று. ஏகாதசி விரத நிபந்தனைப்படி உரிய நேரத்தில் அதை நிறைவு செய்ய வேண்டும் என்பதால், வேறுவழியின்றி அம்பரீஷர் விரதத்தை முடித்துக் கொள்ள எண்ணினார்.

அவர் நீரருந்தி விரதத்தை நிறைவு செய்யும் தருணத்தில் அங்கு தாமதமாக வந்த துர்வாசர், தான் வருவதற்குள் நீரருந்திய அம்பரீஷன்மேல் கடும் சீற்றம் கொண்டார். தன் தலைமுடியிலிருந்து ஓர் அரக்கனைத் தோற்றுவித்து அம்பரீஷனை வதம் செய்யப் பணித்தார் அவர். ஆனால் என்ன ஆச்சரியம்! அங்கே திருமால் அடியவனான அம்பரீஷனைக் காக்க விஷ்ணுவின் சுதர்சன சக்கரம் தோன்றியது! அது துர்வாசர் தோற்றுவித்த அரக்கனை விழுங்கியதோடு, துர்வாசரையும் விழுங்க எத்தனித்தது. கடும் அச்சமடைந்த துர்வாசர், அனைத்து உலகங்களுக்கும் ஓடினார். எல்லா தேவர்களிடமும் அடைக்கலம் வேண்டினார். திருமால் பக்தரை விரோதித்துக் கொள்ள யாரும் தயாராக இல்லை.

ஆனால், திருமாலின் சக்கரமோ விடாமல் துர்வாசரைத் துரத்தியது. ஓடிப் போய் வைகுந்தத்தில் இருந்த திருமாலையே சரணடைந்தார் துர்வாசர். தன் பக்தனுக்கு ஊறு செய்ய நினைத்த அவருக்குத் திருமாலும் அடைக்கலம் அளிக்க மறுக்கவே, மறுபடி வந்து அம்பரீஷனையே சரணடைந்தார் துர்வாசர். அம்பரீஷரின் வேண்டுகோள்படி சுதர்சன சக்கரம், துர்வாசரை ஏதும் செய்யாமல் விலகிச் சென்ற சம்பவத்தைச் சொல்கிறது அம்பரீஷ சரிதம். தலைதெறிக்க ஓடிய துர்வாசரின் மிகத் தீவிரமான அச்ச உணர்வை அந்தக் கதை விறுவிறுப்புடன் விவரிக்கிறது. மகாகவி பாரதியார் அச்சமற்ற தன்மையைப் பெரிதும் போற்றுகிறார். தமக்கு எதிலும் அச்சமில்லை என ஒரு பாடல் முழுவதிலும் உரத்த குரலில் முழங்குகிறார்.

`அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
இச்செகத் துளோர்எலாம் எதிர்த்து நின்ற போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே!
துச்சமாக எண்ணி நம்மைத் தூறு செய்த போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே!
பிச்சைவாங்கி உண்ணும் வாழ்க்கை பெற்றுவிட்ட போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே!

இச்சைகொண்ட பொருளெலாம் இழந்துவிட்ட போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே!
கச்சணிந்த கொங்கைமாதர் கண்கள் வீசுபோதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே!
நச்சை வாயிலே கொணர்ந்து நண்பர்ஊட்டு போதிலும்

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே!
பச்சைஊன் இயைந்தவேற் படைகள்வந்த போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே!
உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே!’

தாம் வாழ்ந்த சமகாலத்தில், தம்மைச் சுற்றிலும் ஆங்கிலேயர்க்கு அஞ்சி அஞ்சி அடிமை வாழ்க்கை வாழ்ந்த மக்களைப் பற்றி எண்ணிப்பார்க்கிறார் பாரதியார். இவர்களின் அச்சம் என்றுதான் நீங்குமோ எனச் சலித்துக்கொள்கிறார். அப்படிப்பட்ட நிலைகெட்ட மனிதரை நினைத்தால், தன் நெஞ்சு பொறுப்பதில்லை என்கிறார்.நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்அஞ்சியஞ்சிச் சாவார் இவர் அஞ்சாத பொருளில்லை அவனியிலே மகாகவி பாரதியார், அவ்வையாரின் ஆத்திசூடியைப் போல், தாம் ஒரு புதிய ஆத்திசூடியைப் படைத்தார்.

அது காலத்துக்கேற்ற ஆத்திசூடி. அவ்வையின் ஆத்திசூடி `அறம் செய விரும்பு ஆறுவது சினம்’ எனத் தொடங்குகிறது. பாரதியார் எழுதிய ஆத்திசூடியோ, `அச்சம் தவிர் ஆண்மை தவறேல்’ எனத் தொடங்குகிறது. அடிமை இந்தியாவில் வாழும் மனிதர்கள் அச்சம் தவிர்த்து வாழவேண்டும் என்றும், ஆண்மையோடு திகழ வேண்டும் என்றும், பாரதி தமிழ் மக்களுக்கு நீதி புகட்டுகிறார்.

புதிய ஆத்திசூடியில் பாரதியார் சொல்லும் முதல் நீதியே “அச்சம் தவிர்’’ என்பதுதான்.அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு ஆகிய நான்கு குணங்கள் பெண்களுக்கு உரியவை என்று முன்னர் பட்டியலிடப்பட்டன. பயத்தோடிருத்தல், தம் அறிவை வெளிப்படுத்தாதிருத்தல், வெட்கப் படுதல், தாய், தந்தை, கணவன் தவிரப் பிறர் தீண்டினால் உடல் கூசுதல் என்றெல்லாம் அந்த நான்கு குணங்களுக்கு விளக்கங்கள் சொல்லப்பட்டன.

விவேகானந்தரின் சிஷ்யையான நிவேதிதாவின் மூலம் பெண்விடுதலை குறித்த சிந்தனைகளை உள்வாங்கிக் கொண்ட பாரதியார், பெண்களுக்கு இத்தகைய நான்கு குணங்கள் தேவை என்ற பழைய கண்ணோட்டத்தை முற்றிலுமாக எதிர்க்கிறார். பெண்களுக்குத் தேவையான மிக முக்கியமான பண்பு அஞ்சாமை என்கிறார்.

நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும்
நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்
திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால்
செம்மை மாதர் திறம்புவ தில்லையாம்

என அச்சமற்றுப் பெண்கள் வாழவேண்டியதன் அவசியத்தை உரத்து முழங்குகிறார் பாரதியார்.

கண்ணதாசனின் திரைப்பாடல் ஒன்றும் அச்சத்தைப் போக்கி அஞ்சாமையோடு இருக்க வேண்டியதன் அவசியத்தைப் பேசுகிறது. மன்னாதி மன்னன் திரைப்படத்தில், விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையமைப்பில் எம்.எல்.வசந்தகுமாரி, டி.எம்.செளந்தரராஜன் குரல்களில் ஒலிக்கும் அந்தப் பாடல் அச்சத்தை “மடமை’’ என்கிறது.

அச்சம் என்பது மடமையடா….

திருக்குறள் சொல்லும் கருத்தைப் பின்பற்றி, அச்சம் தவிர்த்து வாழ்வோமானால், நாம் வாழ்வில் உச்சத்தைத் தொடமுடியும் என்பதில் சந்தேகமில்லை.

(குறள் உரைக்கும்)

தொகுப்பு: திருப்பூர் கிருஷ்ணன்

The post திருக்குறளில் அச்சமும் அஞ்சாமையும்…! appeared first on Dinakaran.

Tags : Kumkum ,Achham ,Anjaamium ,
× RELATED குதிகால் வலி