×

நிவேதிதா சதிஷ் ஃபிட்னஸ்

நன்றி குங்குமம் டாக்டர்

2017-இல் ஜோதிகா, சரண்யா பொன்வண்ணன், பானுப்ரியா, ஊர்வசி ஆகியோரது நடிப்பில் வெளிவந்த மகளிர்மட்டும் படத்தில் சரண்யாவின் இளவயது கேரக்டரின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் நிவேதிதா சதிஷ். அதன்பிறகு 2019-இல் சில்லுக்கருப்பட்டி படத்தின் மூலம் நாயகியாக களமிறங்கியவர் தொடர்ந்து தமிழ், தெலுங்கு மொழிகளில் நடித்து வருகிறார். தற்போது, தனுஷின் கேப்டன் மில்லர் படத்தின் இரண்டாவது நாயகி இவரே. சிறுவயது முதலே சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற கனவுடனே வளர்ந்தவர் நிவேதிதா. அதற்காகவே, விஸ்காம் மாணவியாகி கொஞ்சம் கொஞ்சமாக மாடலிங், ஷார்ட் ஃபிலிம்கள் என பெரியத்திரைக்குள் வந்திருப்பவர். நிவேதிதா தனது ஃபிட்னஸ் ரகசியத்தை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார்.

ஒர்க்கவுட்ஸ்: என்னுடைய ஃபிட்னெஸின் ரகசியம் நான் ஒரு ஸ்போர்ட்ஸ் பெர்சன். கராத்தேவில் தேசிய சாம்பியன்ஷிப்பை வென்றுள்ளேன். கதக் கற்றுக் கொண்டேன், தொடர்ந்து நடனமாடுகிறேன். அதற்காக, ஜிம்மிற்கு சென்று கடுமையான உடற்பயிற்சிகள் செய்வேன் என்று நினைத்தால் அது தவறு. ஏனென்றால், நான் தினசரி ஜிம்முக்கு செல்லும் நபர் அல்ல. அவ்வப்போது நேரம் கிடைத்தால் செல்வேன் அவ்வளவுதான். ஆனால் தினமும் யோகா செய்கிறேன். தினமும் குறைந்தது 30 நிமிடங்கள் நடைப்பயிற்சி செய்வதை வழக்கமாக வைத்திருக்கிறேன். நடைபயிற்சி இதயத்தையும் நுரையீரலையும் நல்லபடியாக வைத்திருக்க உதவுகிறது. எனவே, ஜிம்முக்கு செல்ல முடியாவிட்டாலும், தினசரி நடைப்பயிற்சியை கட்டாயம் தவிர்க்க மாட்டேன். என்னுடைய பெரிய ஒர்க்கவுட்ஸ் இவ்வுளவுதான்.

டயட்: நடிப்பு, நடனத்தில் எனக்கு எவ்வளவு நாட்டம் உள்ளதோ அதே அளவு நான் அதிகமாக விரும்பும் மற்றொரு விஷயம் சரியாக சாப்பிடுவது மற்றும் ஊட்டச்சத்தை சரியாக எடுத்துக் கொள்வது. சரியான உணவை சரியான அளவில் சாப்பிடுவதன் மூலம் நல்ல ஆரோக்கியம் என்பதை காக்க முடியும். இதுவே எனது ஹெல்த் மந்திரம். இந்த ஆரோக்கியமான உணவுப் பழக்கம் குழந்தை பருவத்திலிருந்தே என்னுள் ஊடுருவியுள்ளது. இதற்கு முக்கிய காரணம் என் அம்மாதான்.

அவர் ஒரு ஊட்டச்சத்து நிபுணர். எனவே, எனது சிறு வயது முதலே நாங்கள் என்ன சாப்பிட வேண்டும், எதை சாப்பிடக்கூடாது என்பதில் ரொம்பவே கவனமாக இருப்பார். கண்டிப்பாகவும் இருப்பார். எனவே, ஆரோக்கியமற்ற உணவுகளை நான் இதுவரை சாப்பிட்டதே கிடையாது. ஆரோக்கியமற்ற உணவுகளை விரும்பியதும் இல்லை. நான் இன்று வரை கூல் ட்ரிங்கிங்ஸ் குடித்ததே இல்லை. அவற்றின் சுவை எப்படி இருக்கும் என்றுகூட எனக்கு தெரியாது.

அதுபோன்று, தேநீர் அல்லது காபியும் இதுவரை குடித்ததில்லை. இவை எனது குழந்தைப் பருவத்திலிருந்தே நான் பின்பற்றி வரும் விஷயங்களில் ஒன்று. சத்தான உணவுகளை சாப்பிடுவதினால் கடினமான காலங்களில், அதாவது கொரோனா போன்று இப்பொழுது இருக்கும் சூழலில் நோய் எதிர்ப்புச் சக்தி இருக்க முடிகிறது.ஆரோக்கியமான உணவுப்பழக்கம் என்பது ஒவ்வொருவரும் கடைப்பிடிக்க வேண்டிய முக்கியமான ஒன்று. ஏனென்றால், இன்றைய சூழலில் உயர்நிலைப் பள்ளியில் பயிலும் பள்ளிக் குழந்தைகள் பலரும் சரியான நேரத்தில் சாப்பிடாததால் அல்சர் போன்ற பல பிரச்சினைகளை சந்திப்பதாக மருத்துவர்கள் சொல்வதை நான் கேள்விப்பட்டிருக்கிறேன்.

அதனால், பள்ளிப் பருவத்தில் எடுத்துக் கொள்ளும் ஆரோக்கியமான உணவே ஆயுளுக்கும் நமது உடலை ஃபிட்டாக வைக்க உதவும். அதற்காக நான் எதையுமே சாப்பிடக்கூடாது என்று சொல்லவில்லை. பிரவுனிகள் அல்லது பீட்சாக்களை விரும்பினால் சாப்பிடலாம். ஆனால் அதை அதிகமாக எடுத்துக்கொள்வதுதான் தவறு. எனவே ஆரோக்கியமான நல்ல உணவுப் பழக்கத்தை கடைப்பிடிப்பது அவசியமாகும்.

பியூட்டி: என்னுடையது டஸ்கி ஸ்கின்தான். இருந்தாலும் அதை நான் எப்போதும் ஒரு பொருட்டாக நினைப்பதில்லை. சிவந்த நிறமோ அல்லது ட்ஸ்கி ஸ்கின்னோ எதுவாக இருந்தாலும், சருமம் பளபளப்பாக இருந்தால் தோற்றமும் அழகாக இருக்கும். நான் மாடலிங் செய்தபோது, இந்த நிறப் பிரச்னையை நிறையவே சந்தித்திருக்கிறேன். ஆனால், அதையெல்லாம் இன்று தாண்டி வந்துவிட்டேன் என்று நினைக்கும்போது மகிழ்ச்சியாகவே இருக்கிறது.

அழகிற்காக நான் எந்தவித கெமிக்கல் கலந்து அழகுசாதனப் பொருட்களையும் பெரும்பாலும் பயன்படுத்துவதில்லை. எனது நிறத்திற்கு ஏற்ற இயற்கையான அழகு பொருட்களையே பெரும்பாலும் வீட்டிலிருக்கும்போது பயன்படுத்துகிறேன். பொதுவாக உடலை நீரேற்றமாக வைத்திருந்தாலே சருமம் பளபளப்பாக இருக்கும். அதற்காக, தினசரி 3-4 லிட்டர் தண்ணீராவது குடித்துவிடுவேன். அதுபோன்று எனது தலை முதல் பாதம் வரை காக்கும் கவசமாக தேங்காய் எண்ணெயை பயன்படுத்துகிறேன். இதுதவிர, மாய்சுரைஸர், லிப்ஸ்டிக், ஐ ஷேடோ போன்றவையே எனது பிரதான மேக்கப் சாதனங்கள் ஆகும்.

தொகுப்பு: ஸ்ரீதேவி குமரேசன்

The post நிவேதிதா சதிஷ் ஃபிட்னஸ் appeared first on Dinakaran.

Tags : Nivedita Satish Fitness ,Nivedita Satish ,Saranya ,Jyothika ,Saranya Ponvannan ,Bhanupriya ,Urvashi ,
× RELATED ராமநாதபுரத்தில் சோகம்!: குடும்பப்...