×

நேருவின் பேச்சை திரித்து பேசுவது பிரதமர் பதவியில் இருக்கும் மோடிக்கு அழகல்ல : கே.எஸ்.அழகிரி கண்டனம்

சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, ‘இந்திய மக்களின் திறமையை நேரு, இந்திராகாந்தி நம்பவில்லை, நாட்டின் வளர்ச்சிக்கு தடையாக இருந்தனர்’ என்று முழு பூசணிக்காயை இலை சோற்றில் மறைக்கிற வகையில் கோயபல்ஸ் பிரச்சாரத்தை தொடங்கியிருக்கிறார். குஜராத்தின் முதல்வராக இருந்த போது ஆயிரக்கணக்கான அப்பாவி இஸ்லாமியர்கள் படுகொலை செய்யபட்ட போது, நீரோ மன்னன் பிடில் வாசித்ததைப் போல வேடிக்கை பார்த்து, சிறப்பு புலனாய்வு விசாரணையில் இருந்து தப்பி, இன்றைக்கு இந்தியாவின் பிரதமராக 10 ஆண்டுகளை நிறைவு செய்ய இருக்கிறார்.

அதற்கு துணையாக இருந்த அமித்ஷா இன்றைக்கு உள்துறை அமைச்சராக இருக்கிறார். இத்தகைய பொறுப்புகளை இவர்கள் ஏற்றிருப்பது இந்தியாவிற்கே கேடு விளைவிக்கக் கூடியதாகும். அதைத் தான் இந்தியா இன்றைக்கு அனுபவித்துக் கொண்டிருக்கிறது. பிரதமர் மோடி தொடர்ந்து வரலாற்று திரிபு வாதங்களை செய்து வருகிறார். ஆயிரம் மோடிகள் ஒன்று சேர்ந்தாலும் இந்தியாவின் வளர்ச்சியில் பண்டித நேரு, இந்திரா காந்தி ஆகியோர் பங்களிப்பை இத்தகைய அவதூறு பிரசாரங்களினால் மறைத்துவிட முடியாது.

நேருவின் பேச்சை திரித்து பேசுவது பிரதமர் பதவியில் இருக்கும் மோடிக்கு அழகல்ல. இத்தகைய பேச்சுகளின் மூலம் நேருவின் புகழ் குறையாது. மாறாக, மோடியின் தரம் தான் குறையப் போகிறது. இதற்கு காரணம், காங்கிரஸ் கட்சி மீது அவருக்கு இருக்கும் காழ்ப்புணர்ச்சி தான். இந்தியாவை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்ல கடுமையாக உழைத்த பண்டித நேரு மீது இத்தகைய கடுமையான விமர்சனத்தை மேற்கொள்வது மோடியின் கல் நெஞ்சத்தையே காட்டுகிறது. மாட்டு வண்டிகள் நிறைந்திருந்த நாட்டை அணுசக்தி நாடாகவும், விண்கலங்களை ஏவுகின்ற நாடாகவும் மாற்றிக் காட்டியவர் பண்டித நேரு. பஞ்சத்திலும், பட்டினியிலும் உழன்று கொண்டிருந்த நாட்டில் விவசாய உற்பத்திக்கு முன்னுரிமை வழங்கினார்.

குஜராத் மாநிலத்தில் அங்லேஷ்வரில் முதல் முதலாக எண்ணெய் கிணறு தோண்டப்பட்டு அந்த சோதனையை நேரில் பார்த்து அளவற்ற மகிழ்ச்சி அடைந்தவர் பண்டித நேரு. அவரது கண்டுபிடிப்பு தான் ஓ.என்.ஜி.சி., ஆயில் இந்தியா, எரிவாயு உற்பத்திக்கு வழிவகுத்த பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன். அவர் தொடங்கிய ஏர் இந்தியா, இந்தியன் ஏர்லைன்ஸ், ஆயுள் காப்பீட்டு கழகம் போன்ற பொதுத்துறை நிறுவனத்தை தனியார் முதலாளிகளுக்கு அள்ளிக் கொடுத்த மோடி, பிரதமர் நேருவைப் பற்றி பேசுவதற்கு என்ன தகுதி இருக்கிறது ?

நவீன இந்தியாவின் வளர்ச்சிக்காகவும் தங்களை அர்ப்பணித்துக் கொண்ட பண்டித நேரு, இந்திரா பாரம்பரியத்தை சிதைத்து விட்டால் தலைவர் ராகுல்காந்தியின் எழுச்சியை தடுத்து விடலாம் என்று பிரதமர் மோடி கனவு காண்கிறார். ஆனால், ராகுல்காந்தி அவர்கள் மக்களோடு மக்களாக, மக்களுடன் உரையாடி, மக்களின் உணர்வுகளை அறிந்து கொள்கிற மாபெரும் ஒற்றுமை பயணத்தை நீதி கேட்டு மேற்கொண்டு வருகிறார். எனவே, கடந்த 9 ஆண்டுகளில் 117 லட்சம் கோடி கடன் வாங்கி இந்திய பொருளாதாரத்தை திவாலான நிலைக்கு அழைத்து செல்கிற பிரதமர் மோடி, இந்திய மக்களின் வாழ்வாதாரத்தை சீர்குலைப்பதை தடுத்து நிறுத்த முயற்சி செய்யுங்கள். அதள பாதாளத்திற்கு சென்று கொண்டிருக்கிற ரூபாயின் மதிப்பை தடுத்து நிறுத்துங்கள்.

மக்களுக்காக ஆட்சி செய்யாமல் அதானி, அம்பானியை வளர்க்க முயற்சி செய்யாதீர்கள். தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடைகளை குவித்து ஊழலை வளர்க்காதீர்கள், இந்திய பொருளாதார பேரழிவுக்கு வித்திட்ட பிரதமர் மோடிக்கு 2024 பொதுத் தேர்தலில் மக்கள் நிச்சயம் பாடம் புகட்டுவார்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post நேருவின் பேச்சை திரித்து பேசுவது பிரதமர் பதவியில் இருக்கும் மோடிக்கு அழகல்ல : கே.எஸ்.அழகிரி கண்டனம் appeared first on Dinakaran.

Tags : Nehru ,Modi ,K. S. ,Chennai ,Tamil ,Nadu ,Congress ,President ,Parliament ,Narendra Modi ,Indrakhandi ,India ,Neru ,
× RELATED கோத்தகிரி நேரு பூங்கா கோடை சீசனுக்கு தயார்