×

இந்திய அணியுடன் அறிவை பயன்படுத்தி ஆடவில்லை; இங்கிலாந்து வீரர்கள் `பேஸ்பால்’ யுத்தியில் பைத்தியம் ஆகிவிட்டார்கள்: மாஜி கேப்டன் ஜெப்ரி பாய்காட் காட்டம்

மும்பை: இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்டில் இங்கிலாந்து அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்ததற்கு அந்த அணியின் `பேஸ்பால்’ யுத்திதான் காரணம் என்று இங்கி. அணியின் மாஜி கேப்டன் ஜெப்ரி பாய்காட் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:-இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் மெக்குல்லம், கேப்டன் பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் அதிரடியாக ஆடுகிறேன் என்ற யுத்தியில் பைத்தியம் ஆகிவிட்டார்கள். எப்போதுமே அடித்து ஆட வேண்டும் என்ற பித்து அவர்களுக்கு பிடித்து விட்டது. மேலும் பேஸ் பால் திட்டத்தால் இங்கிலாந்து தோல்வியை தழுவினால் எங்களால் தோற்க முடியவில்லை என்றாலும் நாங்கள் போராடி நல்ல முறையில் தோற்கிறோம் என்று சப்பை கட்டு கட்டுகிறார்கள். தோற்பதில் என்ன நல்ல தோல்வி? அதில் என்ன பெருமை இருக்கிறது?

பேஸ்பால் ரசிகர்களுக்கு ஒரு நல்ல பொழுது போக்காக இருக்கிறது. ஆனால் அது சரியாக செயல்பட்டால் மட்டும்தான். ஆனால் இந்த சூழலில் எப்படி செயல்பட வேண்டும் என்ற விஷயம் உங்களுக்கு புரியவில்லை என்றால் நீங்கள் முக்கியமான ஒரு பாடத்தையே தவறவிட்டீர்கள் என்று அர்த்தம். இந்த போட்டியில் இங்கிலாந்து ஆட்டத்தை இந்தியாவுக்கு விட்டுக் கொடுத்துவிட்டார்கள். பேஸ் பால் ஒரு தோல்வியான யுக்தி.ஆசஸ் தொடரில் இங்கிலாந்து அணி இதேபோன்ற ஒரு தவறை தான் செய்தது. வெற்றி பெறும் போட்டியில் அதிரடியாக ஆடி போட்டியை விட்டுக் கொடுத்தது.

எட்ஜ்பாஸ்டன் மற்றும் லார்ட்ஸ் போட்டியிலும் இதே முறையில் தான் ஆசஸ் தொடரில் போட்டியை ஆஸ்திரேலியாவுக்கு தானமாக விட்டு கொடுத்தனர். டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்றால் ரன்கள் தான் முக்கியமே தவிர எப்படி விளையாடுகிறோம் என்பது முக்கியமல்ல. 400 ரன்கள் என்ற இலக்கை எட்ட வேண்டுமென்றால் ஏதேனும் ஒரு பேட்ஸ்மேன் பெரிய சதத்தை அடிக்க வேண்டும். அதுதான் சிறந்த வழி. ஒரு நல்ல பவுலரை எதிர்கொள்ளும்போது அவருடைய பந்தை அடித்து ஆடுகிறேன் என்ற பெயரில் எதற்கு ரிஸ்க் எடுக்க வேண்டும். நேர்மறையான எண்ணத்துடன் ஏன் விளையாட முடியாது. கொஞ்சம் அறிவையும் பயன்படுத்தி ஏன் உங்களால் விளையாட முடியாது.

எந்த அணிக்கு எதிராக விளையாடுகிறோம்? எந்த சூழலில் விளையாடுகிறோம் என்பதை பார்த்து பேட்டிங் செய்ய வேண்டும். எந்த பந்தை அடிக்க வேண்டும். எந்த பந்தை தற்காத்துக் கொள்ள வேண்டும் என்று பேட்ஸ்மேனுக்கு தெரிய வேண்டும். ஒரு பவுலர் நன்றாக பந்து வீசி வருகிறார் என்றால் அவருடைய பந்தை தொடவே கூடாது. இவ்வாறு ஜெப்ரி பாய்காட் கூறி உள்ளார்.

The post இந்திய அணியுடன் அறிவை பயன்படுத்தி ஆடவில்லை; இங்கிலாந்து வீரர்கள் `பேஸ்பால்’ யுத்தியில் பைத்தியம் ஆகிவிட்டார்கள்: மாஜி கேப்டன் ஜெப்ரி பாய்காட் காட்டம் appeared first on Dinakaran.

Tags : England ,Geoffrey Boycott ,Mumbai ,India ,Ingi ,Geoffrey Boycott Gattam ,Dinakaran ,
× RELATED பிரான்சில் இருந்து கடல் வழியாக...