×

நல்ல வாழ்க்கை அமைய நந்தியை நாடுங்கள்!

பிரதோஷ காலங்களில், கோயில் பிராகாரத்தில் வலம் வருவதற்காக அமைந்துள்ள உற்சவ மூர்த்தியே பிரதோஷ நாயகர் என்று அழைக்கப்படுகின்றார். இவர் அளவால் சிறிய மூர்த்தியாவார். ஏறத்தாழ ஒன்றறை அடி உயரத்திற்கு உட்பட்டதாகவே இவர் வடிவம் அமைக்கப்பட வேண்டும் என்பது மரபாகும். இந்த மூர்த்தி சந்திரசேகரரைப் போலவே தோற்றமுடையவர்.

பின்னிரு கரங்களில் மான் மழுவும்; முன்னிரு கைகளில் அபய வரத முத்திரை தாங்கியவரால், நின்ற நிலையில் விளங்குகின்றார். தலையில் ஜடாமகுடம் விளங்க அதில் வெண்பிறை, கங்கை, ஊமத்தை மலர், கொக்கிற்கு ஆகியவற்றைத் தரித்தவராய் மூன்று கண்ணும் கருத்த கண்ட முடையவராய் எல்லையில்லா மகிழ்ச்சி பொங்கும் முகத்துடன் அமைந்துள்ளார். அவரது இடப்புறத்தில் அம்பிகை தனது வலக்கரத்தில் நீலோற்பலமலர் ஏந்தி இடது கரத்தைத் தொங்கவிட்ட நிலையில் நின்றவாறு காட்சியளிக்கின்றாள்.

பிரதோஷ வேளை என்றால் என்ன?

இரவும் பகலும் சந்திக்கின்ற நேரத்திற்கு, ‘‘உஷத்காலம்’’ என்று பெயர். உஷத்காலத்தைப் பகற்பொழுதின் முகம் என்பர். இந்த வேளையின் அதிதேவதை சூரியனின் மனைவியாகிய உஷா என்பவளாவான். அவள் பெயராலேயே இது உஷத்காலம் என அழைக்கப்படுகின்றது. இதற்கு நேர் எதிராக பகலும் இரவும் சந்திக்கும் நேரம் பிரத்யுஷத்காலம் எனப்படும். சூரியனின் இன்னொரு மனைவியாகிய பிரத்யுஷா இக்காலத்திற்கு அதிதேவதையாதலின் அவள் பெயரால் இது ‘‘பிரத்யுஷத் காலம்’’ என்று அழைக்கப்பட்டு, இப்போது பேச்சு வழக்கில் ‘பிரதோஷகாலம்’ என அழைக்கப்படுகிற தென்பர். பிரதோஷ வேளையை ‘ரஜ்ஜி முகவேளை’ எனவும் அழைப்பர். இதற்கு இரவின் முகம் என்பது பொருளாகும்.

நிகண்டுகள் பிரதோஷ காலத்தை இரவின் முகம் என்றே குறிப்பிடுகின்றன. இந்தப் பொழுது சாயும் நேரத்திற்கு அதிதேவதையான, பிரத்யுஷாவிற்குச் ‘‘சாயா’’ என்பது ஒரு பெயராகும். இந்த வேளையில் பகல் முழுவதும் உழைத்துக்களைத்த உயிர்கள் அவளால் ரட்சிக்கப்படுகிற காலம் என்ற பொருள்பட இந்த நேரம் ‘‘சாயரட்சை’’ எனவும் அழைக்கப்படுகிறது. தோஷம் என்றால் குற்றமுடையது என்பது பொருள். பிரதோஷம் என்றால் குற்றமில்லாதது. எனவே குற்றமற்ற இந்தப் பொழுதில் இறைவனை வழிபடுவதால் நம்முடைய தோஷங்கள் நீங்கும்.

பிரதோஷ ரிஷப வாகனம்

சிவபெருமான், பிரதோஷ காலங்களில் உலா உருவதற்காக சிறு அளவில் அமைந்த ரிஷப வாகனமே பிரதோஷ ரிஷபம் எனப்படும். இது மரத்தால் செய்யப்பட்டு, பல வண்ணம் தீட்டப்பட்டதாக அமையும். மயிலாப்பூர் முதலிய பல தலங்களில் வெள்ளியால் அமைந்த பிரதோஷ ரிஷப வாகனங்களைக் காணலாம். சென்னை சிவாவிஷ்ணு ஆலயத்தில் பித்தளையால் ஆன பிரதோஷ ரிஷபம் உள்ளது. திருவக்கரை சந்திரமௌலீஸ்வரர் ஆலயத்தில் இடபத்திற்கு பதிலாக அதிகார நந்தியை பிரதோஷ நாயகருக்கு வாகனமாக அமைத்து உலாவரச் செய்யும் வழக்கம் நீண்ட காலத்திற்கு முன்பு இருந்து வந்தது என்பர். இந்நாளிலும் அழகிய சிறு அதிகார நந்தி வாகனம் அக்கோயிலில் உள்ளதைக் காணலாம்.

பிரதோஷ நேரம்

ஒவ்வொரு நாளும் காலை சூரிய உதயாதி முதல் 26.15 நாழிகைக்கு மேலுள்ள ஏழரை நாழிகைப் பொழுதே பிரதோஷ காலம் எனப்படும். இது சுமார் மாலை 4.30 மணிக்கு மேல் 6.00 மணிக்குள்ளாக அமையும் காலமாகும். பகல் முகூர்த்தங்கள் எட்டுப் பிரிவில் எட்டாவது முகூர்த்தமே பிரதோஷம் எனப்படும். தினத்தோறும் மாலையில் வருவது பிரதோஷம் என்றாலும், வழக்கத்தில் வளர்பிறை தேய்பிறைக் காலங்களில் திரயோதசியன்று வரும் மாலைக் காலத்தையே பிரதோஷம் எனச் சிறப்பாக அழைக்கின்றோம்.

திங்கட்கிழமையன்று வரும் பிரதோஷம் சிறப்புடையதாகும். இதனை சோமப் பிரதோஷம் என அழைப்பர். அதனைவிட சனிக்கிழமையன்று வரும் பிரதோஷத்தை அதிகச் சிறப்புடையதாகப் போற்றுகின்றனர். சிவபெருமான் விடமுண்டு சயனித்து எழுந்து ஒரு சனிக்கிழமை மாலையில்தான் முதன் முதலாக சந்தியா தாண்டவத்தை ஆடினார் என்பதால், சனிப் பிரதோஷம் சிறப்புடையதாகின்றது.

தினமும் உள்ள மாலை நேரமான சந்தியா காலத்தை தினப்பிரதோஷமென்றும், வளர்பிறை, தேய்பிறை திரயோதசி நாட்களில் வரும் பிரதோஷத்தை பட்சப் பிரதோஷமென்றும், மகாசிவராத்திரிக்கு முன்தினம் வருகின்ற பிரதோஷத்தை மகாப்பிரதோஷமென்றும், சனிக்கிழமை வரும் பிரதோஷத்தை சனிப்பிரதோஷமென்றும் அழைக்கின்றோம்.

மகாசிவராத்திரிக்கு முன்பு வரும் பிரதோஷம் சனிக் கிழமையன்று வருமாயின், அது சனி மகாப்பிரதோஷம் எனப்படும். இது ஆயிரம் மடங்கு பலனைத் தருவதாகும். பிரதோஷ விரதம் தொடங்குபவர்கள் கார்த்திகை அல்லது ஆவணி மாதத்தில் வரும் பிரதோஷங்களில் தொடங்குவது நல்லதாகும். தொடர்ந்து பதினான்கு ஆண்டு காலம் பிரதோஷ நாளில் சிவாலய தரிசனத்தை முறைப்படி செய்பவர்கள் சாரூப பதவி பெற்று சிவகணங்களாகத் திகழ்வர் என்று புராணங்கள் கூறுகின்றன.

பிரதோஷம் என்பது வாரத்தில் ஏழு கிழமைகளில் ஏதேனும் ஒவ்வொரு கிழமைகளில்தான் ஒவ்வொரு முறையும் வருகின்றது. எந்த கிழமை பிரதோஷத்தில் சென்று நாம் நந்தியையும், சிவபெருமானையும் வழிபட்டு வருகின்றோமோ அதற்கேற்ப பலன்களை நாம் பெறலாம்.

* ஞாயிற்றுக்கிழமை வரும் பிரதோஷத்தில் நந்தியையும், நாயகனாம் சிவபெருமானையும் வழிபட்டுவந்தால், மங்கல நிகழ்ச்சிகள் மனையில் நடைபெற வழிபிறக்கும். சுபகாரியங்கள் நடைபெறும்.

* திங்கட்கிழமை வரும் பிரதோஷத்தில் வழிபட்டால், மனச் சஞ்சலங்கள் நீங்கி மன அமைதி கிடைக்கும். நல்லெண்ணங்கள் உருவாகும்.

* செவ்வாய்க்கிழமை வரும் பிரதோஷத்தில் வழிபட்டால், உணவுப் பற்றாக்குறை அகலும், உத்யோக வாய்ப்பும், உதிரி வருமானங்களும் கிடைக்கும்.

* புதன்கிழமை வரும் பிரதோஷத்தில் வழிபட்டால், புத்திர விருத்தியும், ஆண் சந்தான பாக்கியமும் கிட்டும்.

* வியாழக்கிழமை வரும் பிரதோஷத்தில் வழிபட்டால், படிப்புத்தடை அகலும், கல்விஞானம் பெருகும். மதிநுட்பத்தினால் மகத்துவம் காண்பீர்கள்.

* வெள்ளிக்கிழமை வரும் பிரதோஷ வழிபாட்டினால், பகைவிலகும். பாசம்கூடும். உறவினர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும்.

* சனிக்கிழமை வரும் பிரதோஷ வழிபாட்டில்னால், சகல பாக்கியங்களும் கிடைக்கும். எல்லா பிரதோஷங்களிலும் வழிபாடும் செய்வதும் இனிமையான வாழ்க்கையை ஏற்படுத்தி தரும்.

பிரதோஷ விரதம்

சிவாகம் நூல்களின் படி பிரதோஷம், உத்தமம், மத்திமம், அதமம் என மூன்று வகைப்படும். சூரியன் உதயம் முதல், மறுநாள் சூரிய உதயம் வரை திரயோதசி திதி இருப்பின், அந்த நாள் உத்தமப் பிரதோஷம் எனப்படும். சூரியன் மறைவது முதல் அடுத்த நாள் சூரியன் மறைவது வரை திரயோதசி இருந்தால், அது மத்திமப் பிரதோஷமெனவும், சூரியன் மறைவுக்கு மேல் திரயோதசி வந்து மறுநாள் 26 நாழிகைக்குள்ளேயே முடிந்து விடுமானால், அது அதமப் பிரதோஷமெனவும் வழங்கப்படும். வளர்பிறை சனிக்கிழமையில் சூரிய அஸ்த மனத்திற்கு முன்னும் பின்னும் மூன்றே முக்கால் நாழிகைக்கு குறைவில்லாமல் திரயோதசி இருக்கும் நாளே, “சனி மகாபிரதோஷம்’’ எனப்படும்.

உத்தம, அதம, மகாபிரதோஷ காலங்களில் அதே நாளிலும், மத்திம பிரதோஷத்திற்கு அடுத்த நாளிலும் பிரதோஷ பூஜை செய்ய வேண்டும். பிரதோஷவிரதம் தொடங்குவோர், மகாபிரதோஷ நாளில் தொடங்குவது நல்லது. பிரதோஷ வேளையில் எண்ணெய் தேய்த்துக் கொள்ளுதல், உண்ணுதல், சிவ சம்பந்தமில்லாத மந்திரங்களைச் ஜெபித்தல், நூல்களைப் படித்தல் முதலியவற்றைச் செய்யக் கூடாது.

பிரதோஷ பலன்

* மூன்று பிரதோஷங்கள் தொடர்ந்து பார்த்தால், பிரம்மா, விஷ்ணு, சிவன் முதலான மூன்று தெய்வங்களையும் பார்ப்பதற்குச் சமம்.

* ஐந்து பிரதோஷங்கள் தொடர்ந்து பார்த்தால், உடலில் உள்ள அனைத்து நோய்களும் நீங்கும்.

* ஏழு பிரதோஷங்கள் தொடர்ந்து பார்த்தால், திருமணமாகாதவர்களுக்கு திருமணம் நடக்கும்.

* பதினோரு பிரதோஷங்கள் தொடர்ந்து பார்த்தால், உடலும் மனமும் வலிமை பெற்று புதுத்தெம்பு கூடும்.

* பதிமூன்று பிரதோஷங்கள் தொடர்ந்து பார்த்தால், நினைத்த காரியம் தங்கு தடையின்றி நடைபெறும்.

* இருப்பத்தியோரு பிரதோஷங்கள் தொடர்ந்து பார்த்தால், புத்திர பாக்கியம் கிடைக்கும்.

* முப்பத்தி மூன்று பிரதோஷங்கள் தொடர்ந்து பார்த்தால், சிவன் கோயிலுக்கு கும்பாபிஷேகம் செய்த புண்ணியம் கிடைக்கும்.

* ஏழுபத்தி ஏழு பிரதோஷங்கள் தொடர்ந்து பார்த்தால், ஒரு யுத்ரயாகம் செய்த பலன் கிடைக்கும்.

* நூற்றி எட்டு பிரதோஷங்கள் தொடர்ந்து பார்த்தால், ஒரு தேவேந்திர பூஜை நடத்தியதற்குச் சமம்.

* நூற்றி இருபத்தி ஒன்று பிரதோஷங்கள் தொடர்ந்து பார்த்தால், அடுத்த ஜென்மம் கிடையாது.

* ஆயிரத்தெட்டு பிரதோஷங்கள் தொடர்ந்து பார்த்தால், ஒரு அஷ்வமேதயாகம் நடத்தியதற்கு சமம்.

அடுத்தடுத்து இரண்டு சனிப் பிரதோஷங்களை அனுசரித்தால், “அர்த்தநாரி பிரதோஷம்’’ என்பர். பிரதோஷ நாளன்று, கிருத்திகை நட்சத்திரமும் சேர்ந்து வந்தால், “ஸ்கந்தப் பிரதோஷம்’’ என்பர். சோம சூத்திர பிரதட்சிணம் செய்தால், பல அஸ்வமேதயாகம் செய்த பலன் கிடைக்கும். பிரதோஷ காலங்களில், கோமுகம் அருட் சக்தியின் வடிவாக விளங்குவதால், சிவனருளைப் பெற கோமுகங்களை பக்தியுடன் வணங்க வேண்டும்.

சிவபெருமான் ஆடும் சந்தியா தாண்டவத்தில் அம்பிகை, கைத்தாளம் இட்டுப் பாடுகின்றாள். பிரம்மன் தாளம் போட, சரஸ்வதி வீணைமீட்ட, நர நாராயணர்கள் மத்தளம் கொட்ட, இந்திரன் புல்லாங்குழல் வாசிக்க, லட்சுமி கஞ்சிரா தட்ட, கந்தவர்கள் ஏழு கோடி இசைக்கருவிகளை முழக்குகின்றனர். இத்தகைய பிரதோஷ நடன ஓவியங்களை வடநாட்டுக் கோயில்களிலும் காணலாம்.

தொகுப்பு: ஜி.ராகவேந்திரன்

The post நல்ல வாழ்க்கை அமைய நந்தியை நாடுங்கள்! appeared first on Dinakaran.

Tags : Nandi ,Utsava Murthy ,Pradosha ,
× RELATED விஸ்வநாதசுவாமி கோயிலில் பிரதோஷ வழிபாடு