×

தனது வீட்டை காலி செய்யும்படி அடியாட்களை வைத்து கொலை மிரட்டல் விடுப்பதாக கூறி கலெக்டர் அலுவலகத்துக்கு பெட்ரோல் கேனுடன் வந்த கூலிதொழிலாளி

*திருப்பத்தூர் மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் பரபரப்பு

திருப்பத்தூர் : அடியாட்களை வைத்து வீட்டை காலி செய்ய கொலை மிரட்டல் விடுகின்றனர். இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்வு கூட்டத்திற்கு கூலிதொழிலாளி பெட்ரோல் கேனுடன் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்வு கூட்டம் கலெக்டர் தர்ப்பகராஜ் தலைமையில் நேற்று நடந்தது.

இந்த கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டது.
அதில் தமிழ்நாடு முதலமைச்சர் முதன்மை திட்டமான உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் வரபெற்ற மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட வேண்டும் என அனைத்து துறை அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

மேலும் வேளாண்மைத்துறை, காவல்துறை, ஊரக வளர்ச்சித்துறை, நகராட்சி நிர்வாகங்கள், பேரூராட்சித்துறை, வனத்துறை, நிலப்பட்டா குறைகள், பட்டாமாறுதல், இலவச வீட்டுமனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை, கூட்டுறவு கடனுதவி, தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பாக வீடுகள் வேண்டி, மின்துறை சார்பான குறைகள், மாற்றுத்திறனாளிகள் நலத்திட்ட உதவிகள், மருத்துவத்துறை, கிராம பொதுப்பிரச்சனைகள், குடிநீர் வசதி மற்றும் பொதுநலன் குறித்த மனுக்கள் 233என மொத்தம் மனுக்களை கலெக்டர் பாஸ்கர தர்ப்பகராஜ் பொதுமக்களிடமிருந்து பெற்றுக்கொண்டு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு தகுதியானதாக இருப்பின் உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
தொடர்ந்து பொதுமக்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

ஆம்பூர் பெரிய ஆஞ்சநேயர் கோயில் பகுதியை சேர்ந்த மணிகண்டன் பெட்ரோல் கேனுடன் கலெக்டரிடம் மனு அளிக்க வந்தார். அப்போது அங்கு சோதனையில் இருந்த போலீசார் அவரிடம் இருந்த பெட்ரோல் கேனை மீட்டனர். பின்னர் விசாரணைக்காக திருப்பத்தூர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். பின்னர் அவரிடம் விசாரணை செய்ததில், ‘எனக்கு சொந்தமான வீடு ஆம்பூர் பெரிய ஆஞ்சநேயர் கோயில் தெருவில் உள்ளது. நான் கூலிதொழிலாளி. நான் வசிக்கும் வீட்டை காலி செய்யும்படி அடியாட்களை வைத்து என்னை மிரட்டி கொலை மிரட்டல் விடுகின்றனர்.

இது சம்பந்தமாக நீதிமன்றத்தில் வழக்கும் உள்ளது. அந்த குண்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் தற்போது தீயிட்டு கொளுத்திக் கொள்ளலாம் என்று வந்தேன் என குறிப்பிடப்பட்டிருந்தது. ஆம்பூர் அடுத்த மின்னூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சந்திரன் கொடுத்த மனுவில், ‘மாதனூர் அருகே உள்ள ராமர் கோயில் பகுதியில் குழந்தைகள் ஒருங்கிணைந்த வளர்ச்சி மையத்தில் அல்லிராணி பணியாற்றி வருகிறார். அவர் போலியான படிப்பு சான்றிதழ் கொடுத்து இந்த பணிக்கு வந்து நியமன ஆணையை வாங்கியுள்ளார். எனவே அதனை உரிய விசாரணை செய்து அவரை பணியில் இருந்து நீக்கி நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கூறப்பட்டிருந்தது.

திருப்பத்தூர் அடுத்த கொட்டாவூர் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில், ‘எங்கள் கிராமத்தில் உள்ள மக்களுக்கு சுடுகாடு வசதி இல்லாமல் நாங்கள் அவதிப்பட்டு வருகிறோம். மலையடி வாரத்தில் உள்ள ஆற்று நீர் ஓடையில் அங்கு பிணங்களை புதைத்து வருகிறோம். எங்கள் பகுதிக்கு என தனி சுடுகாடு இல்லை இதனால் எங்கள் பகுதியில் யாராவது இறந்தால், அவர்களை மலையடிவாரம் உள்ள ஆற்றுப்படுக்கை அருகே புதைக்கின்றனர். இதனால் சடலங்கள் தண்ணீரில் அடித்துச் செல்கிறது. மேலும் எலும்புக்கூடுகள் அனைத்தும் வெளியே தெரிகின்றது. எனவே எங்களுக்கு புதிய சுடுகாடு அமைத்து தர வேண்டும்’ என குறிப்பிடப்பட்டிருந்தது.

திருப்பத்தூர் அடுத்த வெலக்கல்நத்தம் கிட்டப்பையனூர் பகுதியைச் சேர்ந்த மாலதி(25), மாற்றுத்திறனாளி. இவர் இவர் எம்எஸ்சி பயோடெக்னாலஜி படிப்பு முடித்துவிட்டு வீட்டில் உள்ளார். இந்நிலையில் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்வு கூட்டத்திற்கு வந்து தேசிய மாற்றுத்திறனாளி அடையாள அட்டை மற்றும் உதவித்தொகை மற்றும் வீல் சேர் வேண்டும் என்று கோரிக்கை மனு அளித்தார். மனுவை பெற்றுகொண்ட கலெக்டர் 10 நிமிடத்திலேயே மாற்றுத்திறனாளி மாணவிக்கு வீல் சேர் வழங்கினார்.

வீல்சேரை பெற்றுக் கொண்ட மாணவி மாவட்ட ஆட்சிக்கு கண்ணீர் மல்க நன்றியை தெரிவித்து சென்றார். பொதுமக்கள் அளித்த அனைத்து மனுக்களையும் பெற்றுக் கொண்டு கலெக்டர் தர்ப்பகராஜ் உரிய அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்து உடனுக்குடன் பொதுமக்கள் அளித்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

நிலுவை மனுக்களுக்கு விளக்கம் கேட்ட கலெக்டர்

மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் கலெக்டர் தர்ப்பகராஜ் பேசுகையில், ‘மக்களின் முகவரி என்ற திட்டம் தமிழக அரசால் தொடங்கப்பட்டுள்ளது. அதில் அதிக அளவில் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாமல் உள்ளது. விசாரணை செய்யாமல் நிலுவையில் இருந்து வருகிறது. இதனை உடனடியாக முடிக்க வேண்டும்’ என்றார்.

மேலும் துறைவாரியாக அதிகாரிகளை அழைத்து மக்களின் முகவரி திட்டத்தில் என்ன காரணம் மனுக்கள் நிலுவையில் உள்ளது என்று விசாரணை செய்தார். இந்த மனுக்களை கலெக்டர் கேட்டுவிட்டார். எனவே முடித்து விடலாம் என்று அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்யக்கூடாது. அதனை உரிய முறையில் விசாரணை செய்ய வேண்டும்.

செய்து அதற்கான அறிக்கையை நாளைக்குள் அனைத்து துறை அதிகாரிகளும் வழங்க வேண்டும். அடுத்த கூட்டத்திற்கு வரும்போது எத்தனை மனுக்கள் மக்களின் முகவரி திட்டத்தில் நிலுவையில் உள்ளது என்ன காரணம் என்று விளக்கத்துடன் வர வேண்டும் என்று கலெக்டர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

ஆதரவற்ற பிளஸ் 1 மாணவியை உடனடியாக விடுதியில் சேர்ப்பு

திருப்பத்தூர் அடுத்த புதுப்பேட்டை பகுதியை சேர்ந்த 11ஆம் வகுப்பு மாணவி கலெக்டர் தர்ப்பகராஜ் இடம் அளித்த மனுவில், ‘எனது தாய், தந்தையர் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக என்னைப் பெற்றெடுத்து விட்டு தனித்தனியாக பிரிந்து வாழ்கின்றனர். இந்த நிலையில் நான் எனது பாட்டியின் அரவணைப்பில் புதுப்பேட்டை உள்ள பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறேன்.
எனது பாட்டிக்கு வயது முதிர்வு ஏற்பட்டுள்ள காரணத்தினால் என்னால் சரிவர படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை.

எனவே எனக்கு விடுதி வழங்கி விடுதியில் தங்கி படிக்க வசதி செய்து தர வேண்டும்’ என குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த மனுவை பெற்றுகொண்ட கலெக்டர் தர்ப்பகராஜ் தாசில்தாரை வரவழைத்து உடனடியாக இந்த மாணவிக்கு திருப்பத்தூர் பகுதியில் உள்ள அரசு மாணவியர் விடுதியில் தங்க வைத்து அவருக்கு தேவையான துணிமணிகள் அனைத்தும் வழங்கி அவரை இன்று முதல் விடுதியில் தங்கி படிக்க உதவி செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.

The post தனது வீட்டை காலி செய்யும்படி அடியாட்களை வைத்து கொலை மிரட்டல் விடுப்பதாக கூறி கலெக்டர் அலுவலகத்துக்கு பெட்ரோல் கேனுடன் வந்த கூலிதொழிலாளி appeared first on Dinakaran.

Tags : Tirupathur ,Tirupattur Collector ,Dinakaran ,
× RELATED குரிசிலப்பட்டு அருகே சாராயம் விற்று...