×

கடன் கொடுத்தவர்கள் மிரட்டுவதாக கூறி கலெக்டர் அலுவலகத்தில் தாய், மகன் தீக்குளிக்க முயற்சி

*போலீசார் தடுத்து நிறுத்தினர்

ராணிப்பேட்டை : ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்வு கூட்டம் நேற்று நடந்தது. இக்கூட்டத்திற்கு கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று விசாரணை நடத்தினார்.அதேபோல், டிஆர்ஓ சுரேஷ், திட்ட இயக்குனர் லோகநாயகி, சமூக பாதுகாப்பு திட்ட துணை ஆட்சியர் ஸ்ரீ வள்ளி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் முரளி, மாவட்ட வழங்கல் அலுவலர் சத்யபிரசாத், உதவி ஆணையர் (கலால்) வரதராஜ், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சரவணகுமார் ஆகியோரும் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றனர்.

ராணிப்பேட்டை மாவட்ட நாடகம் மற்றும் நாட்டுப்புற கலைஞர்கள் நல அறக்கட்டளை சார்பில் அளித்த மனுவில், `ராணிப்பேட்டை மாவட்டத்தில் கலை பண்பாட்டு துறையில் பதிவு செய்துள்ள நாடகம் மற்றும் நாட்டுப்புற கலைஞர்கள் சொற்பமாகவே வசித்து வருகிறோம். எங்களுக்கு நிலம், வீடு எதுவும் சொந்தமாக இல்லை. எனவே, நாடகம் மற்றும் நாட்டுப்புற கலைஞர்களாகிய எங்களுக்கு தமிழ்நாடு அரசு வழங்கும் இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

அரக்கோணம் வட்டம், அம்மனூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி தனபால் என்பவர் அளித்த மனுவில் கூறியிருந்ததாவது:அம்மனூர் கிராமம் விவசாயம் செய்யும் பகுதியாக உள்ளது. சுமார் 350 ஏக்கர் பரப்பளவில் ஏரி பாசனம் வாயிலாகவும், மின் மோட்டார் வாயிலாகவும் விவசாயம் செய்து வருகிறோம். இப்பகுதியில் சுமார் 50 ஆண்டுகளாக நெற்களம் பயன்படுத்தி வருகிறோம். 2003-2004ம் ஆண்டு கான்கிரீட் நெற்களம் அமைக்கப்பட்டது. நெற்களம் இருந்த பகுதியில் தற்போது சேதமடைந்து விட்டது.

தொடர்ந்து, விவசாயிகளின் நலன் கருதி அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் 2023-2024ம் ஆண்டுக்கான நிதியில் திட்ட அலுவலர் மூலமாக புதிய நெற்களம் அமைக்க பணியாணை வழங்கப்பட்டது. தற்போது பணி நிலுவையில் உள்ளது. விவசாயிகளின் நலன் கருதி நெற்களத்தினை விரைவில் அமைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

நெமிலி வட்டம், அவளுர் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில் கூறியிருந்ததாவது:அவளுர் கிராமத்தில் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள், மருத்துவமனைக்கு செல்லும் கர்ப்பிணிகள், முதியோர், கால்நடைகளை தீவனத்திற்கும் மற்றும் விவசாய இடுபொருட்கள் கொண்டு செல்லவும், இறந்தவர்களின் சடலத்தை சுடுகாட்டிற்கு எடுத்து செல்லவும் என அனைத்திற்குமே சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை கடந்து தான் செல்ல வேண்டியுள்ளது.

எனவே, அவளுர் கிராமத்தில் சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே மேம்பாலம் அமைக்க 4 கிராம சபா கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், மேம்பாலம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி ஊர்மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியபோது கலெக்டர் நேரில் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். ஆனால், தற்போது எங்களது கிராமத்தில் மேம்பாலம் அமைக்கும் திட்டம் இல்லை என ஊராட்சி மன்ற தலைவருக்கு கடிதம் வரப்பெற்றது பெரும் ஏமாற்றம் அளிக்கிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதேபோல், நேற்று நடந்த குறைதீர்வு கூட்டத்தில் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் இருந்து வந்த பொதுமக்களிடம் இருந்து மொத்தம் 329 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது.
இந்நிலையில், ராணிப்பேட்டை அடுத்த சிப்காட் அருகே உள்ள வஉசி நகரை சேர்ந்தவர் அசோக்குமார்(32), முடிதிருத்தும் பணி செய்து வருகிறார். இவரது தாய் இந்திராணி. இவர்கள் இருவரும் நேற்று கலெக்டர் அலுவலக வளாகம் முன்பு திடீரென உடலில் டீசலை ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தனர். இதை பார்த்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி டீசல் கேனை பறிமுதல் செய்தனர்.

விசாரணையில் அவர்கள் தெரிவித்ததாவது: நான்(அசோக்குமார்) கடந்த 2 வருடத்திற்கு முன்பு எம்ஜிஆர் நகரை சேர்ந்த பெண் ஒருவரிடம் ரூ.3 வட்டிக்கு ரூ.2 லட்சத்தை கடனாக வாங்கினேன். 18 மாதங்கள் மாதம் ₹6 ஆயிரம் வட்டி கட்டி வந்தேன். கடன் சுமை காரணமாக வட்டி கட்ட முடியவில்லை. இதற்கிடையே 6 மாதம் அவகாசம் கேட்டேன். எனது வீட்டை விற்பனை செய்து அசலும் வட்டியும் சேர்த்து தருவதாக கடன் கொடுத்தவரிடம் கூறினேன்.

ஆனால், அதற்கு மறுப்பு தெரிவித்து கடனை உடனடியாக செலுத்த வேண்டும் என கடன் கொடுத்தவர்கள் தரப்பினர் தகாத வார்த்தைகளால் பேசி மிரட்டி வருகின்றனர். அதனால் தீக்குளித்து தற்கொலை செய்து கொள்ள முயற்சித்ததாக தெரிவித்தனர். இதையடுத்து போலீசார், தீக்குளிக்க முயன்ற அசோக்குமார், இந்திராணி ஆகியோரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.கலெக்டர் அலுவலகத்தில் தாய், மகன் தீக்குளிக்க முயன்ற சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து, வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் விவசாயி ஒருவர் நெல் அறுவடை இயந்திரம் வாங்குவதற்கு கடன் தொகையில் 30 சதவீதம் இணை மானியம் ரூ.7.56 லட்சம் பெறுவதற்கான ஆணை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் 14 பயனாளிகளுக்கு தலா ரூ.5,500 வீதம் ரூ.77 ஆயிரம் மதிப்பில் இலவச தையல் இயந்திரங்களை கலெக்டர் வளர்மதி வழங்கினார்.

மேலும், இக்கூட்டத்தில் தையல் இயந்திரம் கோரி மனு அளித்த பெண்ணுக்கு உடனடியாக கலெக்டர் வளர்மதி தன் விருப்ப கொடை நிதியில் இருந்து ரூ.7 ஆயிரம் மதிப்பில் மோட்டார் பொருத்திய இயந்திரத்தை வழங்கினார். தொடர்ந்து, யோகா தண்டால், நடனத்துடன் கூடிய மராத்தான், ஸ்டெப்அப் உள்ளிட்ட பல்வேறு உடற்பயிற்சி நிகழ்வுகளில் வெற்றி பெற்ற 4 நபர்கள் கின்னஸ் சாதனை படைத்தமைக்காக பெறப்பட்ட பாராட்டு சான்றிதழை கலெக்டரிடம் காண்பித்து வாழ்த்து பெற்றனர்.

The post கடன் கொடுத்தவர்கள் மிரட்டுவதாக கூறி கலெக்டர் அலுவலகத்தில் தாய், மகன் தீக்குளிக்க முயற்சி appeared first on Dinakaran.

Tags : Ranipet ,Collector ,Varamati ,TRO ,Suresh ,
× RELATED வேலூர், ராணிப்பேட்டை மாவட்ட...