×

மார்த்தாண்டம் லாரி பேட்டையில் தற்காலிக காய்கறி மார்க்கெட் அமைக்க எதிர்ப்பு

* மீன் வியாபாரிகள் கேட்டை மூடியதால் பரபரப்பு

மார்த்தாண்டம் : மார்த்தாண்டம் லாரி பேட்டையில் தற்காலிக காய்கறி மார்க்கெட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மீன் வியாபாரிகள் லாரி பேட்டை கேட்டை மூடியதால் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது.மார்த்தாண்டத்தில் காய்கறி மற்றும் மீன் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. தற்போது அதிக மக்கள் கூடுவதால் மார்க்கெட்டில் எப்பொழுதும் நெருக்கடியாக காணப்படுகிறது. அடிப்படை வசதிகள் இன்றி காணப்படுவதால் பொதுமக்கள் கடும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.

எனவே இந்த மார்க்கெட்டை விரிவுபடுத்தி நவீனப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில் தற்போதைய நகர்மன்ற தலைவர் பொன். ஆசைதம்பியின் முயற்சியின் காரணமாக ₹14.60 கோடி செலவில் நவீன மார்க்கெட் அமைக்க திட்டமிடப்பட்டு, கடந்த 3ம் தேதி தமிழக பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் அதற்கான பணியினை தொடங்கி வைத்தார்.

மார்க்கெட்டில் பணி தொடங்குவதற்காக அருகாமையில் உள்ள லாரி பேட்டையில் தற்காலிக காய்கறி மார்க்கெட்டை செயல்படுத்த திட்டமிடப்பட்டது. இந்த லாரி பேட்டையில் கடந்த சில வருடங்களாக மீன் இறக்கு தளமாகவும், மீன் கமிஷன் கடையாகவும் வெளியூரிலிருந்து மீன்களைக் கொண்டு வந்து இறக்கி விற்பனை செய்து வந்தனர். ஆனால் மீன் விற்பனைக்கு விசாலமான இடத்தில் தனி மீன் மார்க்கெட் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நேற்று லாரி பேட்டையில் தற்காலிக காய்கறி கடை அமைக்க பணி தொடங்க சென்றபோது, மீன் வியாபாரிகள் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் ஒன்று திரண்டு லாரி பேட்டை கேட்டுகளை இழுத்து மூடினர்.இதனால் அங்கு தற்காலிக காய்கறி மார்க்கெட் பணி தொடங்க முடியாமல் போனது. இதை அடுத்து அங்கு பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது. உடனடியாக மார்த்தாண்டம் இன்ஸ்பெக்டர் இளவரசு தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டனர். இதனிடையே ஒரு தரப்பினருக்கும் – போலீசாருக்கும் இடையே கடும் வாக்கு வாதம் ஏற்பட்டது. மேலும் வியாபாரிகள் – மீனவர்கள் இடையேயும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனால் அங்கு மோதல் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டது. போலீசார் கடும் எச்சரிக்கையை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.தொடர்ந்து மாலையில் மீன் வியாபாரிகள் லாரி பேட்டை முன்பு உள்ள சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அங்கு வந்த மார்த்தாண்டம் போலீசார் அவர்களை கலைந்து செல்ல கூறினர். ஆனால் அவர்கள் மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து அதிரடிப்படை போலீசார் வரவழைக்கப்பட்டனர். தொடர்ந்து அனைவரும் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

ஒத்துழைப்பு வழங்க வேண்டும்

இது குறித்து குழித்துறை நகர்மன்ற தலைவர் பொன்.ஆசை தம்பி கூறியதாவது: காய்கறி மார்க்கெட் மற்றும் மீன் மார்க்கெட்டில் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் படும் துன்பத்தை தீர்ப்பதற்காக நவீன முறையில் மார்க்கெட் அமைக்க பல்வேறு கட்ட முயற்சிகளுக்கு பின்னர் ₹14.60 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த லாரி பேட்டை காலியாக இருந்ததால் அந்த இடம் நகராட்சி விதிமுறைகளுக்கு உட்பட்டு நிபந்தனையுடன் தற்காலிகமாக மீன் இறங்குதளமாகவும், கமிஷன் விற்பனை இடமாகவும் மீனவர்களுக்கு வழங்கப்பட்டு வந்தது.

தற்போது விரைந்து பணியை தொடங்கி உடனடியாக மார்க்கெட் பணிகளை முடித்து திறக்க வேண்டும் என்ற நல்ல நோக்குடன் இந்தப் பணி தொடங்கப்பட்டுள்ளது.லாரி பேட்டை முழுக்க முழுக்க குழித்துறை நகராட்சிக்கு சம்பந்தப்பட்டது. மீனவர்கள் அனைவரும் ஒத்துழைப்பு தந்து அவர்களுக்கு வசதியாக மாற்றுப் பகுதிகளில் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல், லாரிகளை நிறுத்தி வைத்து மீன்களை இறக்குவது மற்றும் விற்பனை செய்வது என வழக்கம்போல் செயல்படலாம்மீன் மார்க்கெட் வழக்கம்போல் செயல்பட்டு வருகிறது. எனவே வளர்ச்சிப் பணிகளுக்கு எந்த இடையூறும் இன்றி ஒத்துழைப்பு தர வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.என்றார்.

The post மார்த்தாண்டம் லாரி பேட்டையில் தற்காலிக காய்கறி மார்க்கெட் அமைக்க எதிர்ப்பு appeared first on Dinakaran.

Tags : Marthandam ,Lorry Pettah ,Lorry Pit ,Marthandum ,Dinakaran ,
× RELATED மார்த்தாண்டத்தில் கேரளாவில் இருந்து...