×

வருசநாடு அருகே 13ம் நூற்றாண்டை சேர்ந்த சிலைகள் கண்டுபிடிப்பு

வருசநாடு : வருசநாடு அருகே 13ம் நூற்றாண்டை சேர்ந்த சிவன் கோயிலில் வைத்து வழிபாடு நடத்தப்பட்ட சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.தேனி மாவட்டம், கடமலைக்குண்டுவில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர் செல்வம், கிருஷ்ணகிரி மாவட்டம், காமன்தொட்டி உயர்நிலைப்பள்ளி தமிழாசிரியை ஜெயலட்சுமி ஆகியோர், தங்கம்மாள்புரத்தில் இருந்து வருசநாடு செல்லும் வழியில் உச்சிப்பிள்ளையார் கோயில் பகுதியில் கள ஆய்வு மேற்கொண்டனர். அப்போது கிபி 13ம் நூற்றாண்டைச் சேர்ந்த பேச்சியம்மன், அய்யனார், தட்சிணாமூர்த்தி, சிவலிங்கம் சிலைகளை கண்டுபிடித்தனர்.

இதுகுறித்து ஆய்வாளர்கள் கூறியதாவது:பேச்சியம்மன் சிலையானது, தலையில் ஜூவால கிரீடம், இடது கையில் ஒரு பெண்ணை பிடித்து வயிற்றை கீறிய நிலையிலும், வலது கையில் ஒரு குழந்தையை ஏந்திய நிலையிலும் அகன்ற மூக்கு, நீளமான வாய் என பார்ப்போரை அச்சுறுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பேச்சு அம்மன் என்பதே பேச்சியம்மன் என்று பிற்காலத்தில் மருவியுள்ளது. கல்விக் கடவுளான சரஸ்வதியின் மறுதோற்றமாக கருதப்படும் இந்த அம்மனை வழிபட்டால், மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்கலாம் என்ற நம்பிக்கை உள்ளது.

பொதுவாக அய்யனார் சிலை மண்டல அமர்வு என்னும் உத்குடி ஆசனத்தில் வடிவமைக்கப்படும். ஆனால், இங்கு மகாராஜா லீலாசனத்தில் வடிக்கப்பட்டுள்ளது. வலது கரத்தில் சாட்டை போன்ற செண்டையும், இடது கரம் முழங்கால் முட்டி மீதமைந்து பக்கவாட்டில் நீண்டு தொங்கும் நிலையில் உள்ளது. தலையில் விரித்த அலங்கார ஜடாபாரம் மற்றும் முத்துப்பட்டம், வட்டமான பத்திர குண்டலம், கண்டசரம், இடைக்கச்சை போன்ற அணிகலன்கள் அணிந்து அழகாக அமர்ந்திருக்கிறார்.

தட்சிணாமூர்த்தி இடது காலை மடக்கி வலது காலை தொங்கவிட்ட சுகாசன நிலையில், கரந்தை மகுடம், கால்களில் வீர கழல், அபய வரத முத்திரையுடன் உள்ளார். வலது கையில் மழு, இடது கையில் மான் உருவம் சிதைந்த நிலையில் சாந்த சொரூபமாக உள்ளது. தெக்கினான் என்றும், தென்முக கடவுள் என்றும் அழைக்கப்படும் தட்சிணாமூர்த்தி, சிவனின் அம்சமாக கருதப்படுகிறார். இந்த சிலைகள் பாண்டியர் காலத்துக்கே உரிய கலைநயத்துடன் செதுக்கப்பட்டுள்ளன. சிவலிங்கத்தின் பத்ம பீடம் (பிரம்மா பகுதி) தாமரைப்பூ கவிழ்ந்த நிலையில், அதற்கு மேல் ஆவுடை உள்ளது. பெருவுடையார் (லிங்கபாணம்) இல்லாமல் உள்ளது. இவ்வாறு தெரிவித்தனர்.

17ம் நூற்றாண்டு கல்வெட்டு

‘‘சிலைகளுக்கு அருகில் கிபி 17ம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு ஒன்று காணப்படுகிறது. அதில், மதுரை சொக்கநாதருக்கும், பார்வதி அம்மனுக்கும் நெய்விளக்கு தானமாக வழங்கப்பட்ட தகவல் கூறப்பட்டுள்ளது. சிலைகள் மற்றும் கல்வெட்டு மூலம் இந்த இடத்தில் சிவன் கோயில் இருந்தது உறுதி செய்யப்படுகிறது. பாண்டியர் காலத்திலிருந்து நாயக்கர் காலம் வரை இக்கோயில் வழிபாட்டில் இருந்திருக்கலாம் என்பதை அறிய முடிகிறது’’ என்றனர்.

The post வருசநாடு அருகே 13ம் நூற்றாண்டை சேர்ந்த சிலைகள் கண்டுபிடிப்பு appeared first on Dinakaran.

Tags : Varusanadu ,Selvam ,Government Higher Secondary School ,Kadamalaikundu, Theni district ,Jayalakshmi ,Kamanthotti High School ,Krishnagiri district ,Thangammalpuram ,
× RELATED கடமலைக்குண்டுவில் உலக பூமி தின விழிப்புணர்வு நிகழ்ச்சி