×

நெல்லையில் கனமழையைத் தொடர்ந்து மானூர் பெரியகுளம் பகுதியில் சாகுபடி பணி தீவிரம்

*பச்சை பசேலாக மாறிய விளைநிலங்கள்

நெல்லை : நெல்லை மாவட்டத்தில் கனமழையைத் தொடர்ந்து 3 ஆண்டுகளுக்குப் பிறகு நிரம்பிய மானூர் பெரிய குளத்து தண்ணீரால் விவசாயிகள் சாகுபடி பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதனால் மானூரில் விவசாய நிலங்கள் பச்சை பசேலன காட்சி அளிக்கின்றன.நெல்லை மாவட்டத்தில் உள்ள மிகப்பெரிய குளங்களில் ஒன்றான மானூர் பெரியகுளம் 1,120 ஏக்கர் பரப்பளவு கொண்டது. ஓர் அணைக்கட்டுக்கு சமமானது. 180 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்டது. இந்த குளம் மூலம் மானூர், மாவடி, மதவக்குறிச்சி, எட்டான்குளம் ஆகிய4 ஊராட்சிகளுக்கு உட்பட்ட 30 கிராமங்களில் 4,000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

மானூர் குளத்துக்கு முன்பாக உள்ள 19 குளங்கள் நிரம்பிய பின்னரே தண்ணீர் மானூர் பெரியகுளத்துக்கு வரும். ஆனால், அதற்குள் பருவமழை முடிந்து விடுவதும் உண்டு. கடந்த 2006, 2011, 2015, 2019ம் ஆண்டுகளில் இந்த குளம் நிரம்பியது. குளம் நிரம்பும் போதெல்லாம் இப்பகுதி விவசாயிகள் பிசானம், முன்கார் ஆகிய இரு பருவ சாகுபடியை வெற்றிகரமாக மேற்கொள்வர். மாவட்டத்தில் கடந்த டிசம்பர் மாதம் நீடித்த மழையால் இந்த குளம் மீண்டும் நிரம்பி மறுகால் பாய்கிறது. இதனால் மகிழ்ச்சியடைந்த விவசாயிகள் பிசான சாகுபடி பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

மானூரில் ஏற்கனவே விவசாயிகள் நிலத்தடி நீரை நம்பி 500 ஏக்கரில் நாற்று நட்டனர். அந்த நாற்றுகள் தற்போது வளர்ந்து அறுவடைக்கு தயாராக உள்ளன. ஆனால் கடந்த 3 ஆண்டுகளாக மானூர் பெரிய குளம் நிரம்பாததால் விவசாயிகள் தண்ணீருக்கு கடும் சிரமமடைந்தனர். இதனால் பெரும்பாலான விவசாயிகள் நாற்று நடத் தயங்கினர்.

இந்நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் பெய்த கனமழையால் மானூர் பெரிய குளத்தின் வரத்து கால்வாயில் உடைப்பு ஏற்பட்டது. உடனடியாக கால்வாய் உடைப்பை பொதுப்பணித்துறை அதிகாரிகள் சீரமைத்தனர். அதேநேரத்தில் மானூர் விவசாய சங்கத்தினர் சார்பில் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் கால்வாயை ஆழப்படுத்த கோரிக்கை விடுத்தனர். விவசாயிகளின் கோரிக்கையை ஏற்ற நெல்லை கலெக்டர் கார்த்திகேயன் கால்வாயை ஆழப்படுத்த உத்தரவிட்டார்.

அதன்படி, பொக்லைன் இயந்திரம் வரவழைக்கப்பட்டு மானூர் வரத்துக்கால்வாய் 10 கிலோ மீட்டருக்கு குப்பைகள் அகற்றப்பட்டு, ஆழப்படுத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து பெய்த மழையால் மானூர் பெரிய குளத்தில் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து நிரம்பியது. இதனால் மானூர் சுற்றுவட்டார பகுதி விவசாயிகள் நாற்று நடத் துவங்கினர். தற்போது 85 சதவீத தண்ணீர் குளத்தில் உள்ள நிலையில் நாற்றுகள் நன்கு வளர்ந்து பச்சை பசெலன காட்சியளிப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

The post நெல்லையில் கனமழையைத் தொடர்ந்து மானூர் பெரியகுளம் பகுதியில் சாகுபடி பணி தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Manur Periyakulam ,Manur Periya Pond ,Nellie district ,Manoor ,Periyakulam ,Dinakaran ,
× RELATED தேர்தல் பரப்புரைக்காக நெல்லை...