×

டால்பின் நோஸ் காட்சி முனையில் இருந்து 1000 அடி பள்ளத்தில் குதித்து ஐடி இன்ஜினியர் தற்கொலை

*5 மணி நேரத்திற்கு பிறகு உடல் மீட்பு

ஊட்டி : குன்னூர் அருகே டால்பின் நோஸ் காட்சி முனையில் இருந்து 1000 அடி பள்ளத்தில் குதித்து ஐடி இன்ஜினியர் தற்கொலை செய்து கொண்டார். நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே டால்பின் நோஸ் காட்சி முனை உள்ளது. இந்த காட்சி முனை பகுதி வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. கடல் மட்டத்திலிருந்து சுமார் 5,536 அடி உயரத்தில் அமைந்துள்ள இப்பகுதியில் இருந்து இயற்கை காட்சிகள் மற்றும் எதிர் புறமுள்ள கேத்திரின் நீர்வீழ்ச்சி ஆகியவற்றை காண நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். நேற்று காலை வழக்கம் போல டால்பின் நோஸ் காட்சி முனையில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் பார்வையிட்டு கொண்டிருந்தனர்.

11 மணியளவில் அப்பகுதிக்கு வந்த இளைஞர் ஒருவர் காட்சி முனையை சுற்றிலும் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு தடுப்பு வேலியை தாண்டி சென்றார். ஏதோ வீபரீதம் ஏற்படப்போவதை உணர்ந்த அங்கிருந்த சுற்றுலா பயணிகள் தடுப்பு வேலியில் ஏற வேண்டாம் என இளைஞரை பார்த்து சத்தமிட்டனர். ஆனால் அதனை கண்டு கொள்ளாத அந்த இளைஞர் தடுப்பு வேலியை தாண்டி சென்று கண்ணிமைக்கும் நேரத்தில் பாறையில் இருந்து சுமார் 1000 அடி பள்ளத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்த அங்கிருந்த சுற்றுலா பயணிகள் அலறியடித்து ஓடினர்.

இது குறித்து தகவலறிந்தவுடன் வனத்துறை, காவல்துறையினர் மற்றும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் டிரோன் கேமரா உதவியுடன் பள்ளத்தாக்கில் தேடினர். பாறை இடுக்கு ஒன்றில் உடல் கிடப்பதை கண்டுபிடித்தனர். தொடர்ந்து அப்பகுதி பழங்குடி மக்கள் உதவியுடன் வனப்பகுதி வழியாக சென்று 5 மணி நேரம் போராடி தொட்டில் கட்டி உடலை மீட்டு மேலே கொண்டு வந்தனர். பின்னர் அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் பிரேத பரிசோதனைக்காக குன்னூர் அரசு மருத்துவமனைக்கு உடல் கொண்டு வரப்பட்டது.

இது தொடர்பாக அப்பர் குன்னூர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிந்து நடத்திய விசாரணையில் தற்கொலை செய்து கொண்டவர் ஆந்திர மாநிலம் குடலி கோட்டா பகுதியை சேர்ந்த சித்தார்த் (32) என்பதும், ஐதராபாத்தில் உள்ள ஒரு ஐடி நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணியாற்றி வந்ததும், திருமணம் ஆகவில்லை என்பதும் தெரியவந்தது. சித்தார்த் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் டால்பின் நோஸ் காட்சி முனைக்கு நேற்று மாலை வரை சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படவில்லை. இது குறித்து காவல் துறையினர் கூறுகையில், ‘‘சித்தார்த் கடந்த சில நாட்களுக்கு முன்பே குன்னூர் வந்துள்ளார். குன்னூரில் இருந்து வாடகை கார் மூலம் டால்பின் நோஸ் காட்சி முனையை சுற்றி பார்க்க சென்றுள்ளார். என்ன காரணத்தினால் தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து விசாரித்து வருகிறோம்’’ என்றனர்.

The post டால்பின் நோஸ் காட்சி முனையில் இருந்து 1000 அடி பள்ளத்தில் குதித்து ஐடி இன்ஜினியர் தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Dolphin ,Ooty ,Dolphin Nose ,Coonoor ,Coonoor, Nilgiri district ,
× RELATED கோடை சீசனை முன்னிட்டு...