×

ஈக்காட்டு குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகம் முன்பு மத்திய அரசு பட்ஜெட்டின் நகலை எரித்து அங்கன்வாடி பணியாளர்கள் போராட்டம்

திருவள்ளூர், பிப். 6: அங்கன்வாடி மையங்களுக்கான நிதி உதவியை மத்திய நிதி நிலை அறிக்கையில் குறைத்த மத்திய அரசை கண்டித்து, ஈக்காட்டில் உள்ள குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலகம் முன்பு அங்கன்வாடி பணியாளர்கள் மத்திய அரசின் நிதி நிலை அறிக்கை நகலை எரித்து போராட்டம் நடத்தினர். திருவள்ளூர் அடுத்த ஈக்காட்டில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகம் முன்பு அங்கன்வாடி பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அங்கன்வாடி பணியாளர்கள் சங்கத்தின் மாவட்ட தலைவர் மணிமேகலை தலைமை தாங்கினார். நிர்வாகிகள் வாணிஸ்ரீ, பிரபா, நாகராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அப்போது, பால், எரிவாயு, காய்கறி, அரிசி உள்ளிட்ட மளிகை பொருள்கள் உள்பட அத்தியவாசிய பொருட்கள் விலை உயர்ந்து வருகிறது. இந்நிலையில், அங்கன்வாடிக்கு கூடுதலாக நிதி ஒதுக்கப்படும் என எதிர்பார்த்திருந்தனர். ஆனால், மத்திய அரசு 2023 – 2024ம் நிதி ஆண்டில் ₹21,521.13 கோடி ஒதுக்கியது. ஆனால் அண்மையில் 2024 – 2025 ம் நிதியாண்டிற்கான நிதி நிலை அறிக்கையில் ரூ.21,200 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் குழந்தைகளுக்கு தரமான உணவு வழங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கன்வாடி பணியாளர்களின் ஊதியமும் குறைவதற்கான வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மத்திய அரசை கண்டித்து அங்கன்வாடி பணியாளர்கள் கோஷங்களை எழுப்பினர். இதனைத் தொடர்ந்து மத்திய அரசின் நிதி நிலை அறிக்கை நகலையும் எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

The post ஈக்காட்டு குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகம் முன்பு மத்திய அரசு பட்ஜெட்டின் நகலை எரித்து அங்கன்வாடி பணியாளர்கள் போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Anganwadi ,Child Development Scheme ,Ekatu. ,Thiruvallur ,central government ,Child Development Program Office ,Ekkadu ,Dinakaran ,
× RELATED அங்கன்வாடி கட்ட ரூ.26 லட்சம் டெண்டர்...