×

கிளாம்பாக்கம் பேருந்து நிலைய வளாகத்தில் ₹14.30 கோடி மதிப்பீட்டில் காவல் நிலையம்: அமைச்சர்கள் அடிக்கல் நாட்டினர்

கூடுவாஞ்சேரி, பிப்.6: கிளாம்பாக்கம் பேருந்து நிலைய வளாகத்தில் ₹14.30 கோடி மதிப்பீட்டில் புதிய காவல் நிலையம் அமைப்பதற்கான பணிகளை அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன் மற்றும் பி.கே.சேகர்பாபு ஆகியோர் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தனர். சென்னை, வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கம் ஜிஎஸ்டி சாலையோரத்தில் ₹394 கோடி மதிப்பீட்டில் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் அமைக்கப்பட்டது. இந்நிலையில், கிளாம்பாக்கம் பேருந்து நிலைய வளாகத்தில் ₹14.30 கோடி மதிப்பீட்டில் புதிய காவல் நிலையம் அமைப்பதற்காக அடிக்கல் நாட்டு விழா நேற்று காலை நடைபெற்றது.

இதில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அரசுச் செயலாளர் சமயமூர்த்தி தலைமை தாங்கினார். சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் உறுப்பினர் அன்சுல் மிஸ்ரா, செங்கல்பட்டு கலெக்டர் அருண்ராஜ், செங்கல்பட்டு தொகுதி எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன், தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ், காட்டங்கொளத்தூர் ஒன்றியக்குழு பெருந்தலைவர் உதயாகருணாகரன், துணைத் தலைவர் வி.எஸ்.ஆராமுதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊரப்பாக்கம் ஊராட்சிமன்ற தலைவர் பவானி கார்த்தி, துணைத் தலைவர் ரேகாகார்த்திக் ஆகியோர் அனைவரையும் வரவேற்றனர்.

சிறப்பு அழைப்பாளர்களாக அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன் மற்றும் பி.கே.சேகர்பாபு ஆகியோர் கலந்துகொண்டு புதிய காவல் நிலையம் அமைப்பதற்காக பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டினர். அப்போது அமைச்சர் சேகர்பாபு நிருபர்களிடம் கூறுகையில், கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறக்கப்பட்டு இன்றுடன் (நேற்றுடன்) 36 நாள் நிறைவு பெற்றுள்ளது. நாளொன்றுக்கு ஒரு லட்சம் பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் தற்போது இங்கு ₹14 கோடியே 35 லட்சம் செலவில் காவல் நிலைய கட்டுமானப் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இந்த காவல் நிலையம் புதிய முறையில் அமைக்கப்பட உள்ளது. காவலர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளுடன் கட்டப்பட உள்ளது. முடிச்சூரில் ஆம்னி பேருந்துகளுக்காக கட்டப்படும் பேருந்து நிறுத்துமிட பணிகள் ஏப்ரல் மாதத்தில் நிறைவு பெறும்.

கோயம்பேடு பேருந்து நிலையம் 2002ம் ஆண்டு தொடங்கியபோது புகார்கள் தொடர்ந்து வந்தன. 7 ஆண்டுகளுக்குப் பிறகு தான் ஆம்னி பேருந்து நிலையம் தொடங்கப்பட்டது. அதிமுக ஆட்சிக் காலத்தில் சரியான திட்டமிடல் இல்லாததால் புகார் கூறியே மாய்ந்து போனார்கள். அப்போது கோயம்பேடு பேருந்து நிலையத்தில் கழிப்பிட வசதி, குடிநீர் வசதி, மருத்துவமனை வசதி, உணவக வசதி, தேநீர் விடுதிகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இல்லாததால் ஒரு ஆண்டுக்கு மேலாக குறைகள் இருந்தன. ஆனால் திமுக ஆட்சியில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறக்கப்பட்ட 35 நாட்களுக்குள் பயணிகளுக்குத் தேவையான 90% அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்துள்ளோம். மேலும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் ரயில் நிலையம் அமைப்பதற்காக ₹20 கோடியும், நடைமேம்பாலம் அமைக்க ₹70 கோடியும் துறை ஒதுக்கீடு செய்து அதற்கான நிலத்தை ஆர்ஜிதம் செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும் தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் அமைக்கவும் கருத்துருக்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது. பேருந்து நிலையம் முன்பு உள்ள ஜிஎஸ்டி சாலையில் பெருமழை காலங்களில் மழைநீர் தேங்குவதை தடுப்பதற்காக தற்போது திமுக ஆட்சிக்கு வந்த பிறகு 2 மாதத்தில் 1,600 மீட்டர் தூரத்தில் மழை நீர் கால்வாய்கள் அமைத்து கொடுத்துள்ளோம். மேலும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் காலநிலை பூங்கா அடிக்கல் நாட்டப்பட்டது. நீரேற்று பூங்கா உருவாக்கி தந்துள்ளோம். அதிமுக ஆட்சி காலத்தை விட திமுக ஆட்சியில் 8 கால் பாய்ச்சலில் பல்வேறு பணிகளை செய்து வருகிறோம். கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் விரைவில் ஏடிஎம் வசதிகள் அமைத்து தரப்படும் என்றார்.

விரைவில் மலிவு விலை உணவகம்
கிளாம்பாக்கத்தில் மிக விரைவில் மலிவு விலை உணவகம் அமைக்கப்படும். இங்கு விலை குறைவான தரமான உணவுகள் வழங்கப்படும். கோயம்பேட்டில் 32 கடைகள் பயன்பாட்டில் இருந்தன. அந்த கடைகளுக்கு மொத்தமாக உரிமையாளர்கள் 11 பேர்தான் இருந்தனர். அவர்களுக்கு கிளாம்பாக்கத்தில் மாற்று இடமாக கடைகளை சலுகை விலைக்கு அளிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆம்னி பேருந்துகள் சென்னை செல்வதற்கு நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. தொடர்ந்து நீதிமன்ற உத்தரவிற்கு ஏற்ப கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. நீதிமன்றத்தில் என்ன முடிவு எடுக்கப்படுகிறதோ? அதன் பிறகு துறை ரீதியாக முடிவு செய்யப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.

The post கிளாம்பாக்கம் பேருந்து நிலைய வளாகத்தில் ₹14.30 கோடி மதிப்பீட்டில் காவல் நிலையம்: அமைச்சர்கள் அடிக்கல் நாட்டினர் appeared first on Dinakaran.

Tags : Clambakkam ,Guduvanchery ,Ministers ,Thamo Anparasan ,PK Shekharbabu ,Klambakkam ,Chennai, Vandalur ,Police station ,Klampakkam ,Dinakaran ,
× RELATED கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில்...