×

மாமல்லபுரம் சிற்பக் கலைஞர்கள் செதுக்கினர் 45 டன் எடைகொண்ட ஒரே கல்லில் 22 அடி ஆஞ்சநேயர் சிலை: தெலங்கானாவுக்கு அனுப்பி வைப்பு

சென்னை, பிப்.6: மாமல்லபுரத்தில் 45 டன் எடையுள்ள ஒரே கல்லில் செதுக்கி வடிவமைக்கப்பட்ட 22 அடி உயர ஆஞ்சநேயர் சிலை தெலங்கானா மாநிலத்தில் கட்டப்படும் கோயிலில் பிரதிஷ்டை செய்வதற்கு அனுப்பப்பட்டுள்ளது.
தெலங்கானா மாநிலம் நலகொண்டா நகரத்தில் 50 அடி உயரம் கொண்ட ஆஞ்சநேயர் கோயில் பிரமாண்டமாக கட்டப்பட உள்ளது. இக்கோயிலில், 22 அடி உயரமுள்ள ஆஞ்சநேயர் சிலை மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரிக்கு அருகே உள்ள சிவகாமி நகரில் உள்ள ஆகம கட்டிடக்கலை மற்றும் சிற்பக்கலைக் கூடத்தில், அரசினர் சிற்பக்கலைக் கல்லூரியில் பட்டம் பெற்ற சிற்பக்கலைஞர் சடகோபன் ஸ்தபதி தலைமையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன்பு 45 டன் எடையுள்ள ஒரே கருங்கல்லில் சிலை வடிக்கும் பணிகள் தொடங்கப்பட்டன. தொடர்ந்து, கடந்த பல மாதங்களாக சிற்பி சடகோபன் ஸ்தபதி தலைமையில், சிற்பிகள் இரவு, பகலாக கண்விழித்து நேர்த்தியான முறையில் வைணவ ஆகம முறைப்படி ஒரு கையில் கெதை, மறுகையை ஆசிர்வதிக்கும் அபய திருக்கோலத்தில் சிலையை அழகுர வடிவமைத்துள்ளனர். இந்த ஆஞ்சநேயர் சிலை நேற்று சிற்பக்கலை கூடத்தில் பல்வேறு பூஜைகள் செய்யப்பட்டு, கண்டெய்னர் லாரி மூலம் தெலங்கானா மாநிலம் நலகொண்டா நகருக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

இதுகுறித்து, சிற்பி சடகோபன் ஸ்தபதி கூறுகையில், ‘இச்சிலையை நேர்த்தியான முறையில் வடிவமைத்து கொடுக்க வேண்டும் என்பதற்காக ஊத்துக்குளி என்ற இடத்தில் இருந்து பிரமாண்ட கருங்கல் கொண்டு வந்து இச்சிலையை உருவாக்கி உள்ளோம். இந்த, ஆஞ்சநேயர் சிலை நாளை (புதன்கிழமை) நலகொண்டா நகரத்தில் உள்ள தெருக்களில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட உள்ளது. 22 அடி உயர ஆஞ்சநேயர் சிலை என்பதால் கோயில் கட்டிய பிறகு சிலையை வைக்க முடியாததால், சிலை பிரதிஷ்டை செய்த பிறகு கோயில் கட்டும் பணிகள் தொடங்க உள்ளது என்றார்.

The post மாமல்லபுரம் சிற்பக் கலைஞர்கள் செதுக்கினர் 45 டன் எடைகொண்ட ஒரே கல்லில் 22 அடி ஆஞ்சநேயர் சிலை: தெலங்கானாவுக்கு அனுப்பி வைப்பு appeared first on Dinakaran.

Tags : Mamallapuram ,Anjaneya ,Telangana ,Chennai ,
× RELATED மாமல்லபுரத்தில் கடல் சீற்றம்; 7 அடி உயரம் எழுந்த அலைகள்: மீனவர்கள் அச்சம்