×

தனியார் ஆன்லைன் நிறுவனத்தில் முதலீடு செய்து ஏமாந்தவர்கள் கலெக்டரிடம் மனு

கோவை, பிப்.6: கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் இன்று மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி தலைமையில் நடந்தது. இதில், பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள், பொதுமக்கள் ஆகியோர் மனுக்களை கலெக்டரிடம் நேரடியாக அளித்தனர். இதில், தமிழ்நாடு நிலமற்றோர், வாடகை வீடுகளில் குடியிருப்போர் வாழ்வுரிமை சங்கத்தை சேர்ந்தவர்கள் அளித்த மனுவில், ‘‘ஆவாரம்பாளையம், ஆர்.எஸ் புரம் பகுதியை சேர்ந்தவர்கள் தினமும் கூலி வேலைக்கு செல்லும் மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும்’’ என வலியுறுத்தி மனு அளித்தனர்.

எஸ்.எஸ். மக்கள் சேவை பணி அமைப்பின் தலைவர் சண்முகம், ‘‘கோவை கோனியம்மன் கோயில் தேரோட்டம் வரும் 28-ம் தேதி நடக்கிறது. உள்ளூரில் நடக்கும் முக்கிய திருவிழா என்பதால் அன்றைய தினம் உள்ளூர் விடுமுறை அளிக்க வேண்டும்’’ என மனு அளித்தார். வீரகேரளம் பகுதியை சேர்ந்தவர் ஆட்டுக்குட்டியை காணவில்லை என கூறி தேசிய கொடியுடன் வந்து கலெக்டரிடம் மனு அளித்தார். மேலும், தனியார் ஆன்லைன் நிறுவனத்தில் முதலீடு செய்து ஏமாந்தவர்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர்.

மனுவில், ‘‘மதுரையை தலைமையிடமாக கொண்டு கோவை காந்திபுரம், கிராஸ்கட் ரோடு 2-வது வீதியில், இயங்கி வந்த நிறுவனத்தின் உரிமையாளர் ஆன்லைன் நிறுவனத்தை நடத்தி அதன் மூலம் மாதம் ரூ.12 ஆயிரம் சம்பளமாக கிடைக்கும் எனவும், பல லட்சம் கமிஷனமாக சம்பாதிக்க முடியும் எனவும் கூறினார். அதற்கு ரூ.18 ஆயிரம் கட்ட வேண்டும் என தெரிவித்தார். அதனை நம்பி அந்த நிறுவனத்தில் பணத்தை கட்டினோம். ஆனால் கூறியபடி சம்பளம், கமிஷன் அளிக்கவில்லை. இந்நிலையில், அந்த நிறுவனத்தை மூடிவிட்டு விளம்பரம் பார்த்தால் பணம் கிடைக்கும் என கூறி மைவி-3 ஆட்ஸ் என்ற வேறு ஒரு ஆன்லைன் நிறுவனத்தை துவங்கி நடத்தி வருவது சமீபத்தில் தெரியவந்தது. அவரிடம் இருந்து எங்களின் பணத்தை மீட்டு தர வேண்டும்’’ என தெரிவிக்கப்பட்டிருந்தது.

The post தனியார் ஆன்லைன் நிறுவனத்தில் முதலீடு செய்து ஏமாந்தவர்கள் கலெக்டரிடம் மனு appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Coimbatore District Collector ,District Collector ,Krantikumar Badi ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED பாமக நிர்வாகிக்கு கொலை மிரட்டல் மைவி3...