×

போதைப்பொருள் பறிமுதல் வழக்குகளை கண்காணிக்க இந்தியாவிலேயே முதன்முறையாக அதிகாரிகள் நியமனம்: தமிழக அரசுக்கு ஐகோர்ட் கிளை பாராட்டு

மதுரை: நெல்லையைச் சேர்ந்த நாகூர் கனி, கஞ்சா கடத்தல் வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட தனது ஜீப்பை தன்னிடம் ஒப்படைக்கக் கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்திருந்தார். இந்த மனு நீதிபதி கே.கே.ராமகிருஷ்ணன் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில், ‘‘போதைப்பொருள் வழக்குகள் மற்றும் பறிமுதல் வாகனங்களை முறைப்படுத்துவது தொடர்பாக இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழ்நாட்டில் மாநில அளவிலான விசாரணை அதிகாரி மற்றும் மாவட்ட அளவில் விசாரணை அதிகாரியும், இவர்களின் கீழ் 7 கூடுதல் எஸ்பிக்கள், 11 உதவி ஆணையர்கள், 30 டிஎஸ்பிக்கள் உள்ளிட்ட 38 அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு, பணியில் உள்ளனர். இவர்கள் காவல் நிலையங்களில் பதிவு செய்யப்படும் கஞ்சா வழக்குகளை கண்காணிப்பர்.

வழக்கு விசாரணை, தண்டனை விபரம் உள்ளிட்டவற்றை கண்காணித்து மாநில அளவிலான அதிகாரிக்கு தகவல் கொடுப்பர். இதுதொடர்பாக தேவையான பயிற்சி, உரிய சுற்றறிக்கை கொடுக்கப்பட்டுள்ளது’’ என தெரிவிக்கப்பட்டது.இதையடுத்து நீதிபதி, ‘‘தமிழக அரசின் இந்த முயற்சிக்கு நீதிமன்றம் பாராட்டுகளை தெரிவிக்கிறது. கடந்த 2013லேயே இதுதொடர்பாக உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், எந்த மாநிலமும் இதை பின்பற்றவில்லை. தமிழ்நாட்டில் தான் முதன்முறையாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக அரசையும், அதிகாரிகளுக்கும் பாராட்டுக்கள். வழக்கை கையாள்வது குறித்து பயிற்சியளிப்பது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்’’ என கூறிய நீதிபதி விசாரணையை பிப். 12க்கு தள்ளி வைத்தார்.

The post போதைப்பொருள் பறிமுதல் வழக்குகளை கண்காணிக்க இந்தியாவிலேயே முதன்முறையாக அதிகாரிகள் நியமனம்: தமிழக அரசுக்கு ஐகோர்ட் கிளை பாராட்டு appeared first on Dinakaran.

Tags : India ,Tamil Nadu government ,Madurai ,Nagor Gani ,Nellai ,ICourt ,Justice ,KK Ramakrishnan ,Dinakaran ,
× RELATED மதுரை மாநகராட்சியில் கால்நடை...