×

தொழில் முதலீடுகளை ஈர்க்க ஸ்பெயின் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை சென்னை திரும்புகிறார்: பிரமாண்ட வரவேற்பு அளிக்க திமுகவினர் ஏற்பாடு

சென்னை: தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஸ்பெயின் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை சென்னை திரும்புகிறார். விமானநிலையத்தில் அவருக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்க திமுகவினர் ஏற்பாடு செய்துள்ளனர். முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக கடந்த மாதம் 27ம்தேதி ஸ்பெயின் நாட்டுக்கு சென்றார். அங்குள்ள பல்வேறு நிறுவனங்களின் நிர்வாகிகளை சந்தித்து தமிழ்நாட்டில் முதலீடுகளை மேற்கொள்ள வலியுறுத்தி வருகிறார். சரக்குகளை கையாளும் பூங்காக்களை அமைப்பதில் உலகளவில் முன்னணி நிறுவனமான ஹபக் லாய்டு நிர்வாக இயக்குநர்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 31ம்தேதி சந்தித்து பேசினார்.

இதன் காரணமாக 2500 கோடி ரூபாய் முதலீட்டில் தூத்துக்குடி மற்றும் தமிழ் நாட்டின் பல்வேறு பகுதிகளில் தளவாட வசதிகள் அமைத்திட இந்த நிறுவனம் முன்வந்துள்ளது. இதேபோல் சாலை கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவனமான அபர்ட்டிஸ் தலைமை அதிகாரிகளையும் சந்தித்து தமிழ்நாட்டின் சாலை கட்டமைப்பில் மேலும் முதலீடு செய்ய கேட்டுக் கொண்டார். இதுதவிர மாட்ரிட் நகரில் முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தி பல்வேறு நிறுவனங்களின் அதிகாரிகளையும் சந்தித்து உரையாடினார். ஸ்பெயின் நாட்டில் இருந்தபடியே நேற்று முன்தினம் தமிழக அரசின் 2024-2025ம் ஆண்டுக்கான பட்ஜெட் தயாரிப்பு பணிகள் குறித்து நிதித்துறை செயலாளர் உதயசந்திரன் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

அதைத்தொடர்ந்து அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்று வரும் கட்சி பணிகள் குறித்தும் அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, உதயநிதி ஸ்டாலின் மற்றும் டி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் அடங்கிய திமுக ஒருங்கிணைப்பு குழு நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். குறிப்பாக, திமுக தேர்தல் ஒருங்கிணைப்பு குழுவிடம் மாவட்ட வாரியாக கட்சி நிர்வாகிகள் தொகுதி நிலவரம் பற்றி கூறிய கருத்துக்களை கேட்டறிந்தார்.
இந்நிலையில் நேற்று ‘ஸ்பெயின் தமிழர்களுடன் முதல்வர்’ என்ற நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். இதில் ஸ்பெயின் நாட்டில் வாழும் தமிழர்கள் திரளாக கலந்துகொண்டனர்.

அப்போது பேசிய முதல்வர் , ‘நீங்கள் பிறந்த உங்களுடைய தாய் மண்ணான தமிழ்நாட்டிற்கு உங்களால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்து கொண்டிருக்கிறீர்கள். செய்யப்போகிறீர்கள், செய்ய வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டார். இதையடுத்து ஸ்பெயின் நாட்டு சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை (7ம் தேதி) சென்னை திரும்புகிறார். நாளை காலை 8.30 மணியளவில் சென்னை விமான நிலையம் வந்தடையும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்க திமுக சார்பில் ஏற்பாடு செய்யப்படுகிறது. அதன்படி, திமுக தலைமை கழக நிர்வாகிகள், மூத்த அமைச்சர்கள், மாவட்ட கழக செயலாளர்கள், எம்பி., எம்எல்ஏக்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் விமான நிலையத்தில் பிரமாண்ட வரவேற்பு அளிக்க முடிவு செய்து உள்ளனர்.

The post தொழில் முதலீடுகளை ஈர்க்க ஸ்பெயின் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை சென்னை திரும்புகிறார்: பிரமாண்ட வரவேற்பு அளிக்க திமுகவினர் ஏற்பாடு appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,MK Stalin ,Spain ,Chennai ,DMK ,CM ,Stalin ,Tamil Nadu ,M.K.Stalin ,Tamilnadu ,
× RELATED முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின்...