×

‘ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் டிஸார்டர்’ கொண்ட 14 குழந்தைகள் 165 கி.மீ.தூரம் கடலில் நீந்தி சாதனை

சென்னை : ‘ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் டிஸார்டர்’ என்பது நரம்பியல் தொடர்பான வளர்ச்சிக் குறைபாடு. இந்த வகை குழந்தைகளின் பேச்சாற்றலில் சிரமம் காணப்படும். மற்றவர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ள இயலாமை, தன் உணர்வுகளை சரியாக வெளிப்படுத்த இயலாமை போன்றவை இதில் அடங்கும். இந்தகையை ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் டிஸார்டர் கொண்ட 9 வயது முதல் 19 வயதுக்குட்பட்ட 14 குழந்தைகள் கடலில் நீச்சல் பயணம் மூலம் கடலூரில் இருந்து சென்னை வரை 165 கிலோமீட்டர் தூரத்தை 4 நாளில் கடந்து சாதனை செய்துள்ளனர். பிப்ரவரி 1ம் தேதி கடலூரின் சில்வர் பீச்சில் துவங்கிய இந்த நீச்சல் பயணம், கடந்த 4ம் தேதி சென்னை மெரினா கடற்கரையில் வெற்றிகரமாக நிறைவடைந்தது. இதன் நிறைவு விழாவில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலாளர் மேகநாத ரெட்டி, தமிழக முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு மற்றும் பொதுமக்கள் பலரும் பங்கேற்றனர்.

இது தொடர்பாக யாதவி ஸ்போர்ட்ஸ் அகாடமி நிறுவனரும் தலைமை பயிற்சியாளருமான சதீஷ் சிவகுமார் கூறியதாவது: இந்த சாகச நீச்சலில் ஈடுபட்ட ஒவ்வொரு குழந்தையின் வெற்றியை நோக்கிய வேட்கை மற்றும் மனஉறுதி பற்றி நான் மிகவும் பெருமைப்படுகிறேன். ஆட்டிசம் உள்ள 14 குழந்தைகளின் இந்த கடல் நீச்சல் பயணம் வெறும் உடல் சார்ந்த சாதனை கிடையாது – இது சமூகத்தில் பலரிடம் உள்ள ஆட்டிசம் பற்றிய பிற்போக்கான சிந்தனையை உடைத்து, ஒவ்வொருவரின் திறமைகளை வெளிக்கொணர்ந்ததற்கு அடையாளமாகவும் இந்த சாதனை அமைந்துள்ளது. மேலும் இந்த நிகழ்வை ஒரு அற்புதமான வெற்றியாக மாற்ற முன்வந்த எஸ்டிஏடி, அதிகாரிகள், முழு பயண உதவிக் குழுவினர், பயிற்சியாளர்கள், மற்றும் பெற்றோர்கள் என அனைவருக்கும் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான பிரத்யேக விளையாட்டு பயிற்சி மையமான யாதவி ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பாக மனமார்ந்த நன்றி. இவ்வாறு அவர் கூறினார்.

The post ‘ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் டிஸார்டர்’ கொண்ட 14 குழந்தைகள் 165 கி.மீ.தூரம் கடலில் நீந்தி சாதனை appeared first on Dinakaran.

Tags : Chennai ,Dinakaran ,
× RELATED சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க ஏர் டாக்சிகளை இயக்க பேச்சு