×

ரூ.7 கோடி சொத்தை கல்வி சேவைக்கு வழங்கிய நிலையில் மேலும் ரூ.3.5 கோடி நிலத்தை பள்ளிக்கு வழங்கிய ஆயி பூரணம்

மதுரை: மகளின் நினைவாக ரூ.7 கோடி மதிப்புள்ள சொத்தை அரசு பள்ளிக்கு தானமாக வழங்கிய ஆயி பூரணம், மேலும் ரூ. 3.5 கோடி நிலத்தை அந்த பள்ளிக்கு வழங்கினார். மதுரை, சர்வேயர் காலனியில் வசித்து வருபவர் ஆயி பூரணம். இவர் மறைந்த தனது மகள் ஜனனி நினைவாக நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார். இவர் மதுரை ஒத்தக்கடை அருகே கொடிக்குளம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியை, அரசு உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்துவதற்காக தனது சொத்தை தானமாக வழங்கினார். பள்ளிக்கு கட்டடம் கட்டிக்கொள்வதற்காக இவர் கொடுத்த ஒரு ஏக்கர் 52 சென்ட் சொத்தின் தற்போதைய சந்தை மதிப்பு ரூ.7 கோடியாகும். இவரை பாராட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின், குடியரசு தின விழாவில் சிறப்பு விருது வழங்கி கவுரவித்தார். அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்டோரும் ஆயி பூரணத்தை சந்தித்து, அவரது செயலுக்கு வாழ்த்து தெரிவித்து மதுரையிலும் பாராட்டு விழா நடத்தப்பட்டது.

இந்நிலையில் அதே பள்ளிக்கு மேலும் 91 சென்ட் நிலத்தை ஆயி பூரணம் தானமாக வழங்கி உள்ளார். இதன் மதிப்பு ரூ.3.5 கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது.பள்ளிக்கு கட்டடம் கட்டும்போது, ‘ஜனனி நினைவு வளாகம்’ என்று பெயர் சூட்ட வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். சொத்தை மகளின் நினைவாக அரசுக்கு பத்திர பதிவு செய்து கொடுத்ததை, முறையாக முதன்மைக்கல்வி அலுவலர் கார்த்திகா முன்னிலையில் ஆயி பூரணம் மற்றும் அவரின் உறவினர்கள் ஒப்படைத்தனர். மகளின் நினைவாக இரு நிலத்தையும் சேர்த்து சுமார் ரூ.10 கோடிக்கு மேல் சொத்தை பள்ளி கட்டடம் கட்டிக்கொள்ளுமாறு தானம் கொடுத்த தாய் ஆயி பூரணம் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து ஆயி பூரணம் கூறும்போது, ‘‘பள்ளிக்கட்டிடத்திற்கு கூடுதல் இடம் அமையும் வகையிலேயே அருகில் இருந்த இந்த இடத்தையும் தந்திருக்கிறேன். என் மகள் படிக்காத படிப்பை எல்லாம் இந்த பள்ளியில் படிப்போர் பெற வேண்டும்’’ என்றார்.

 

The post ரூ.7 கோடி சொத்தை கல்வி சேவைக்கு வழங்கிய நிலையில் மேலும் ரூ.3.5 கோடி நிலத்தை பள்ளிக்கு வழங்கிய ஆயி பூரணம் appeared first on Dinakaran.

Tags : Ai Puranam ,Madurai ,Aai Puranam ,Surveyor ,Dinakaran ,
× RELATED மதுரை நகர் பகுதியில் கஞ்சா விற்ற ஆறு பேர் கைது