×

முதல்வர் ரங்கசாமியிடம் சரமாரி கேள்வி புதுவை தொகுதியை பாஜவுக்கு ஒதுக்க என்.ஆர்.காங்கிரஸ் நிர்வாகிகள் எதிர்ப்பு: எந்த கட்சி போட்டி என சொல்லாமல் வெளியேறினார்

புதுச்சேரி: புதுவை மக்களவை தொகுதியில் பாஜ போட்டியிட என்.ஆர்.காங்கிரஸ் நிர்வாகிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமி தலைமையில் பாஜ-என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்குள்ள ஒரே ஒரு மக்களவை தொகுதியில் யார் போட்டியிடுவது என்பதில் குழப்பம் நீடித்தது. பாஜ சார்பில் சிட்டிங் அமைச்சர், முக்கிய பிரமுகர்கள் போட்டியிட தயங்குவதால் என்.ஆர்.காங்கிரசுக்கே தொகுதி ஒதுக்க பாஜ தலைமை முடிவு செய்திருந்ததாக கூறப்படுகிறது. ஆனால், என்.ஆர்.காங்கிரஸ் தலைவர்களோ, நியமன எம்எல்ஏக்கள், மாநிலங்களவை எம்பியை தங்களை கட்சிக்கு வழங்கிவிட்டு, மக்களை சந்திக்கும் தேர்தலில் மட்டும் நம்மிடம் கொடுப்பதா என்று எதிர்ப்பு தெரிவித்தனர். தேர்தல் செலவுக்காக ‘45 சி’ யார் கொடுப்பது என்று கேள்வி எழுப்பி இருந்தனர். இந்நிலையில், கடந்த சனிக்கிழமை பாஜ மேலிட தலைவர்கள், முதல்வர் ரங்கசாமியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதன்பின், புதுச்சேரி மக்களவை தொகுதியில் பாஜ போட்டியிட முதல்வர் ரங்கசாமி சம்மத்தித்து உள்ளதாக தகவல்கள் வெளியானது. இந்நிலையில் நேற்று கட்சியின் தலைமை அலுவலகத்தில் நிர்வாகிகளுடன் கட்சியின் தலைவரும், முதல்வருமான ரங்கசாமி ஆலோசனை நடத்தினார். அப்போது அமைச்சர் லட்சுமிநாராயணன், முன்னாள் சபாநாயகர் சபாபதி, வக்கீல் பக்தவசலம் மற்றும் நிர்வாகிகள், ‘நாடாளுமன்ற தேர்தலில் புதுவை தொகுதியில் என்.ஆர் காங்கிரசே போட்டியிட வேண்டும். ஏன்? பாஜவுக்கு தொகுதியை விட்டுத்தர சம்மதம் தெரிவித்தீர்கள். புதுச்சேரியை பொறுத்தவரை தேஜ கூட்டணிக்கு தலைமை பொறுப்பு ஏற்பது நீங்கள்தான். எனவே, வேட்பாளர் யார் என்பதை நாம்தான் முடிவு செய்ய வேண்டும்.

பாஜ எப்போதும் சுயநலமாகவே நடந்து கொள்கிறது. எதையும் விட்டுத்தருவதில்லை. 3 நியமன எம்எல்ஏக்களையும், மாநிலங்களவை எம்பி பதவியையும் பாஜ பறித்துக்கொண்டது. தற்போது இதனையும் விட்டுக்கொடுத்தால் மக்கள் என்ன? நினைப்பார்கள். வரும் சட்டமன்ற தேர்தலில் என்.ஆர் காங்கிரஸ் போட்டியிடுமா? இல்லையா? கட்சி இருக்குமா? என ஆவேசமாக கேள்வி எழுப்பினர். நீங்கள் எந்த முடிவு எடுத்தாலும் ஏற்கத்தான் போகிறோம்’ என ஆவேசமாக கூறினர். இக்கூட்டம் 45 நிமிடங்கள் நடந்தது. இறுதியாக முதல்வர் ரங்கசாமி பேசும்போது, ‘என்.ஆர் காங்கிரஸ் கட்சி 14ம் ஆண்டு துவக்க விழாவை சிறப்பாக கொண்டாடுவதற்கான ஏற்பாடுகளை செய்யுங்கள். இந்த கட்சி தொடர்ந்து செயல்படும். யாருக்கும் எந்த சந்தேகமும் வேண்டாம். விரைவில் கட்சிக்கு புதிய பொறுப்பாளர்களை நியமிக்க இருக்கிறோம். இன்னும் தேர்தல் தேதியே அறிவிக்கப்படவில்லை. அதற்குள் ஏன் அவசரம். கட்சி விழா முடிந்ததும் மீண்டும் ஒரு வாரத்தில் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடைபெறும். அப்போது விரிவாக பேசுவோம்’ என்றார். கூட்டத்துக்கு பின் வெளியே வந்த ரங்கசாமியிடம் நாடாளுமன்ற தேர்தலில் என்.ஆர் காங்கிரஸ் கட்சி போட்டியிடுமா? என நிருபர்கள் கேட்டபோது, ‘தேசிய ஜனநாயக கூட்டணியில் எந்த கட்சி போட்டியிடும் என்பதை கலந்துபேசி, முடிவு எடுக்கப்படும்’ என்றார்.

வாய்ப்புக்காக ரங்கசாமியை சந்திக்க 2 மணி நேரம் காத்திருந்த தமிழிசை; நாடாளுமன்ற தேர்தலில் புதுச்சேரி அல்லது தென்சென்னை தொகுதிகளில் ஏதேனும் ஒன்றில் போட்டியிட புதுச்சேரி ஆளுநர் தமிழிசை விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகின. இந்த சூழலில் தமிழிசை கடந்த 3ம் தேதி திடீரென டெல்லி சென்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பாஜ கட்சியின் தேசிய நிர்வாகிகள் சிலரை சந்தித்து பேசியுள்ளார். அப்போது, 2 ஆண்டுகளில் தான் செய்த மக்கள் பணிகளை தொகுத்து காண்பித்து நன்றி தெரிவித்ததோடு வரும் நாடாளுமன்ற தேர்தலில் தான் போட்டியிட விரும்புவதையும் எடுத்துக் கூறியதாக தெரிகிறது. அதற்கு அமித்ஷா, புதுச்சேரியில் நீங்கள் போட்டியிட விரும்பினால், புதுச்சேரி தேஜ கூட்டணி கட்சியின் தலைவர் ரங்கசாமி ஒத்துழைப்பு தேவை. அவரை சந்தித்து பேசுமாறு அறிவுறுத்தி உள்ளார். இதையடுத்து நேற்று முன்தினம் புதுச்சேரி திரும்பிய தமிழிசை, நேற்று முதல்வர் ரங்கசாமியிடம் செல்போனில் விபரத்தை கூறி நேரில் பேசலாம் வாங்கள் என்று கூறி உள்ளார். இதனால் முதல்வர் ரங்கசாமி வருவார் என 2 மணி நேரமாக தமிழிசை ராஜ்நிவாஸில் காத்திருந்தாராம். ஆனால் என்ஆர் காங்கிரஸ் ஆண்டுவிழா தொடர்பான கட்சி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க கட்சி அலுவலகத்துக்கு ரங்கசாமி செல்ல இருந்ததால் அங்கு செல்லவில்லை. இதனால் ஏமாற்றமடைந்த தமிழிசை, ஏற்கனவே காரைக்காலில் திட்டமிட்டிருந்த பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்க அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

 

The post முதல்வர் ரங்கசாமியிடம் சரமாரி கேள்வி புதுவை தொகுதியை பாஜவுக்கு ஒதுக்க என்.ஆர்.காங்கிரஸ் நிர்வாகிகள் எதிர்ப்பு: எந்த கட்சி போட்டி என சொல்லாமல் வெளியேறினார் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Rangaswamy ,NR Congress ,Puduwai ,BJP ,Puducherry ,Puduvai Lok Sabha ,Lok Sabha ,Rangasamy ,Dinakaran ,
× RELATED ஹெல்மெட் போடாமல் பைக்கில் வந்து வாக்களித்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி