×

சுற்றுலா சென்ற போது விபத்து இமாச்சல் ஆற்றில் கார் விழுந்து சைதை துரைசாமி மகன் மாயம்: டிரைவர் பலி நண்பர் படுகாயம்

சிம்லா: இமாச்சல பிரதேசத்திற்கு சுற்றுலா சென்ற அதிமுக முன்னாள் எம்எல்ஏ சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமியின் கார் விபத்துக்குள்ளாகி சட்லஜ் ஆற்றில் விழுந்தது. இதில் கார் டிரைவர் பலியானார். வெற்றி துரைசாமியின் நண்பர் படுகாயத்துடன் மீட்கப்பட்டுள்ளார். ஆற்றில் மூழ்கிய வெற்றி துரைசாமியை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. அதிமுகவைச் சேர்ந்தவர் சைதை துரைசாமி. இவர் சென்னை முன்னாள் மேயராகவும் சைதாப்பேட்டை தொகுதி எம்எல்ஏவாகவும் இருந்தவர். இவரது மகன் வெற்றி துரைசாமி. சைதை துரைசாமி ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட போட்டித் தேர்வுக்கு பயிற்சி அளிக்கும் மனித நேய அறக்கட்டளையை நடத்தி வருகிறார். அந்த பயிற்சி மையத்தை வெற்றி துரைசாமியும் சேர்ந்து கவனித்து வந்தார். மேலும், வெற்றி கடந்த 2021ம் ஆண்டு ‘என்றாவது ஒருநாள்’ என்ற படத்தையும் இயக்கி உள்ளார். இந்நிலையில், திருப்பூரைச் சேர்ந்த தனது நண்பர் கோபிநாத்துடன் இமாச்சல பிரதேச மாநிலத்திற்கு வெற்றி சுற்றுலா சென்றுள்ளார். அங்கு கார் ஒன்றை வாடகை எடுத்து கடந்த ஞாயிறு அன்று லாஹல் மற்றும் ஸ்பிதியின் காசா பகுதியிலிருந்து சிம்லாவுக்கு அவர்கள் சென்று கொண்டிருந்தனர்.

கின்னார் மாவட்டம் பங்கி நல்லா பகுதியில் சட்லஜ் ஆற்றின் அருகே கார் சென்ற போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, 200 மீட்டர் ஆழ பள்ளத்தில் விழுந்து ஆற்றில் கவிழ்ந்தது. தகவலறிந்த தேசிய பேரிடர் மீட்பு படையினர் விரைந்து வந்து தேடும் பணியில் ஈடுபட்டனர். இதில், வெற்றியின் நண்பர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டார். காரை ஓட்டிய டிரைவர் சடலமாக மீட்கப்பட்டார். விசாரணையில் அவர் காசா பகுதியைச் சேர்ந்த டென்சின் என்பது தெரியவந்தது. தொடர்ந்து, ஆற்றில் மூழ்கிய வெற்றி துரைசாமியை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. கடும் பனிமூட்டம் காரணமாக மீட்பு பணி மிகவும் கடினமாக இருப்பதாக மீட்புப்படையினர் தெரிவித்துள்ளனர்.
படுகாயமடைந்த நண்பர் கோபிநாத் சிம்லா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் ஆபத்தான நிலையில் உள்ளதால் அவரிடமும் எந்த விசாரணையும் மேற்கொள்ள முடியவில்லை. இதனால் வெற்றி துரைசாமியை ேதடும் பணியை இமாச்சல போலீசாரும், மீட்புப் படையினரும் தீவிரப்படுத்தி உள்ளனர்.

 

The post சுற்றுலா சென்ற போது விபத்து இமாச்சல் ஆற்றில் கார் விழுந்து சைதை துரைசாமி மகன் மாயம்: டிரைவர் பலி நண்பர் படுகாயம் appeared first on Dinakaran.

Tags : Saithai Duraisamy ,Himachal river ,Badugayam ,Shimla ,Former ,AIADMK ,MLA ,Saidai Duraisamy ,Vetri Duraisamy ,Himachal Pradesh ,Sutlej river ,Mayam ,Patugayam ,
× RELATED இரணியல் அருகே அடுத்தடுத்து வாகனங்கள்...