×

சண்டிகர் மேயர் தேர்தல் விவகாரத்தில் ஜனநாயக படுகொலை நடந்துள்ளது: உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்

புதுடெல்லி: சண்டிகர் மேயர் தேர்தல் விவகாரத்தில் ஜனநாயக படுகொலை நடந்துள்ளது என்று உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பஞ்சாப் மற்றும் அரியானா மாநிலங்களின் தலைநகரான யூனியன் பிரதேசம் சண்டிகரின் மேயர் தேர்தல் கடந்த இரு தினங்களுக்கு முன்னதாக நடந்தது. அதில் பாஜ மேயர் வேட்பாளர் மனோஜ் சோங்கர் 16 வாக்குகள் பெற்று வெற்றி பெற்ற நிலையில், ஆம் ஆத்மி – காங்கிரஸ் கூட்டணியின் மேயர் வேட்பாளர் 12 வாக்குகள் பெற்றதாகவும், எட்டு வாக்குகள் செல்லாது என தேர்தல் அலுவலர் அறிவித்தார். திட்டமிட்டு வாக்குச்சீட்டுகளில் பேனாவால் சில திருத்தம் செய்து வாக்குச்சீட்டு செல்லாது என தேர்தல் நடத்தும் அலுவலர் அறிவித்ததாக கூறி அதற்கான வீடியோவை காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் வெளியிட்டன. இதைத்தொடர்ந்து இந்த விவகாரம் தொடர்பாக ஆம் ஆத்மி-காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் குல்தீப் குமார் தாக்கல் செய்த மனுவை விசாரித்த பஞ்சாப்-அரியானா உயர்நீதிமன்றம், தேர்தல் அதிகாரி பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் மேற்கண்ட விவகாரத்தில் ஆம் ஆத்மி கவுன்சிலர் குல்தீப் குமார் (தோற்கடிக்கப்பட்ட மேயர் வேட்பாளர் ) தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனுவானது உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி.பரிதிவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி,” சண்டிகர் மேயர் தேர்தலில் காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகளின் வாக்கு சீட்டுகளை வேண்டுமென்றே செல்லாதவைகளாக்கி அதிகார துஷ்பிரோயகம் செய்து விட்டனர். அதனால் நடத்தி முடிக்கப்பட்டுள்ள சண்டிகர் மேயர் தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும் என தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட ஒன்றிய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, “இந்த விவகாரத்தில் ஆதாரமாக காண்பிக்கப்படும் வீடியோக்கள் ஒருவருக்கு மட்டும் சாதகமான நிலையில் காண்பிக்கப்படுகிறது. முழு பதிவுகளையும் பார்த்த பின்னர் தான் முடிவெடுக்க முடியும். அதனால் இந்த விவகாரத்தில் ஒரு விரிவான பார்வை தேவைப்படுகிறது என தெரிவித்தார். இதையடுத்து தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் கூறியதில்”சண்டிகர் மேயர் தேர்தல் விவகாரத்தில் நடந்த சம்பவங்கள் உச்ச நீதிமன்றத்தை திகைப்பில் ஆழ்த்தியுள்ளது. தேர்தல் அதிகாரி கேமராவை பார்த்து தப்பித்து ஓடுவதுஏன்? மேலும் தேர்தல் அதிகாரி வாக்கு சீட்டை சிதைத்து அதனை மாற்றம் செய்துள்ளது என்பது வீடியோ ஆதாரங்களில் தெளிவாக தெரிகிறது. உச்ச நீதிமன்றம் இதை கவனத்தில் கொண்டுள்ளது. சண்டிகர் மேயர் தேர்தலில் நடந்தது ஜனநாயக கேலி கூத்தாகும். உண்மையை சொல்ல வேண்டுமென்றால் இது ஜனநாயகத்தை படுகொலை செய்யும் செயல். இப்படியா ஒரு தேர்தலை நடத்துவது?. கண்டிப்பாக அந்த அதிகாரி விசாரிக்கப்பட வேண்டியது மட்டுமில்லாமல், தண்டிக்கப்பட வேண்டியவர் ஆவார். செல்லாத வாக்குகளாகவே இருந்தாலும் அதில் எந்த ஒரு திருத்தத்தையும் தேர்தல் நடத்தும் அதிகாரி மேற்கொள்ளக்கூடாது.

அதுதான் சட்ட விதிமுறையாகும். அதுகூட தெரியாமலா அந்த அதிகாரி மேயர் தேர்தலை நடத்தினார். இவை அனைத்தையும் அடிப்படையாக கொண்டு தான் உயர்நீதிமன்றம் இந்த விவகாரத்தில் சரியான உத்தரவை பிறப்பித்துள்ளது என கடும் கண்டனத்துடன் சரமாரி கேள்வியெழுப்பிய தலைமை நீதிபதி, “சண்டிகர் மேயர் தேர்தல் விவகாரத்தில் முழு வீடியோ பதிவுகளையும் வாக்கு சீட்டுகளையும் பஞ்சாப் மற்றும் அரியானா உயர்நீதிமன்ற பதிவாளர் ஜெனரல் பாதுகாத்து வைத்திருக்க வேண்டும். இதில் தற்போது வீடியோ ஆதாரங்களை வைத்து இருக்கும் சண்டிகர் துணை ஆணையர் அனைத்து விவரங்களையும் இன்று (நேற்று) மாலை 5மணிக்குள் உயர்நீதிமன்ற பதிவாளர் ஜெனரலிடம் அவற்றை ஒப்படைக்க வேண்டும். மேலும் இந்த விவகாரத்தில் எதிர்மனுதாரர் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பிக்கிறது என உத்தரவிட்ட தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்,” வரும் 7ம் தேதி நடைபெற இருந்த சண்டிகர் மாநகராட்சி கூட்டத்துக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.

 

The post சண்டிகர் மேயர் தேர்தல் விவகாரத்தில் ஜனநாயக படுகொலை நடந்துள்ளது: உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் appeared first on Dinakaran.

Tags : Chandigarh mayoral election ,Supreme Court ,New Delhi ,mayoral ,Union Territory of ,Chandigarh ,Punjab ,Haryana ,Dinakaran ,
× RELATED மனைவியின் சீதனம் கணவருக்கு உரிமையில்லை: உச்சநீதிமன்றம் உத்தரவு