×

பண்டம் மாற்றம் முறையில் உடைகளை மாற்றலாம்!

நன்றி குங்குமம் தோழி

‘‘உங்களின் பீரோ அல்லது வார்ட் ரோப்பில் நீங்க அணியாத உடைகள் எத்தனை இருக்கும்?’’என்று நம் முன் கேள்வியினை வைக்கிறார் சென்னையை சேர்ந்த காயத்ரி. இவரின் கேள்விக்கு ஒவ்வொரு பெண்ணின் பதில் குறைந்தபட்சம் 40% அணியாத உடைகள் அவர்களின் பீரோவினை ஆக்கிரமித்துக் கொண்டுள்ளது என்பதுதான். புதிதாக வாங்கிய உடைகளை அவர்கள் ஒன்றிரண்டு முறைதான் அணிந்திருப்பார்கள். அதன் பிறகு அணியாமல் வைத்திருக்க காரணம் ஒன்று அவர்களின் எடை கூடியோ அல்லது குறைந்ேதா இருக்கலாம்.

அல்லது வேறு புதிய உடைகளை வாங்கிவிட்டதால், இந்த உடைகள் ஓல்ட் ஃபேஷனாகி விட்டது என்று நினைத்து அணியாமல் இருக்கலாம். இப்படி பல காரணங்களால்… பீரோவில் அணியாத உடைகள் ஒரு பக்கம் தேங்கி இருக்கும். இதனை ஒரு சிலர் மற்றவர்களுக்கு கொடுத்திடுவார்கள். அல்லது தூர எறிந்திடுவார்கள். அவ்வாறு வேண்டாம் என்று குப்பைக்கு போகும் உடைகளால் நம்முடைய சுற்றுப்புறச்சூழல் பெரிய அளவில் பாதிப்பினை சந்தித்து வருகிறது. காரணம், சாதாரண பருத்தி உடைகள் மண்ணில் மக்க சுமார் 300 ஆண்டுகள் எடுக்கும்.

இதுவே பாலியஸ்டர் மற்றும் இதர சிந்தடிக் உடைகள் மக்க 500 ஆண்டுகளாகுமாம். இந்த நிலை மாற நாம் பயன்படுத்தாத நல்ல நிலையில் உள்ள உடைகளை பண்டம் மாற்றம் முறையில் மாற்றிக் கொள்ளும் முறையினை அறிமுகம் செய்துள்ளார் காயத்ரி. இவரின் ஆன்லைன் ஆப் ‘ஸ்வாப் சைக்கிள்’ மூலம் அவர்கள் பயன்படுத்தாத உடைகளுக்கு வேறு உடைகளோ அல்லது அணிகலன்களோ பெற்றுக் கொள்ளலாம்.

‘‘நான் சென்னை பொண்ணு. கல்லூரிப் படிப்பு முடிச்சிட்டு சுவிட்சர்லாந்தில் மேற்படிப்பு படிக்க போனேன். அதன் பிறகு நான் படித்த துறை சார்ந்த ஆய்வு குறித்த வேலையில் ஈடுபட்டு வந்தேன். அங்கு வேலை பார்த்த போதுதான் நான் இது போன்ற சஸ்டெயினபில் குறித்த ஆய்வில் ஈடுபட்டேன். அதாவது, ஒரு பொருட்களை நாம் எப்படி தயாரிக்க முடியுமோ அதேபோல் ஏற்கனவே தயாரிக்கப்பட்ட பொருட்களைக் கொண்டு மக்கள் தினசரி பயன்படுத்தும் பொருட்களாக மாற்றி அமைக்க முடியும்.

அதை சஸ்டெயினபில் முறையில் செய்யலாம் என்பது புரிந்தது. இது உலகளவில் சுற்றுப்புறச்சூழலில் பெரிய அளவில் மாற்றத்தை கொண்டு வர முடியும் என்று தெரிந்து கொண்டேன். வேலையை ராஜினாமா செய்துவிட்டு முழுக்க முழுக்க இதில் ஈடுபட ஆரம்பித்தேன்’’ என்றவர் அதற்கான ஆய்வில் ஈடுபட்ட போதுதான் நாம் அணியும் உடைகள் தன் பங்கிற்கு இந்த சுற்றுப்புறச்சூழலில் பெரிய அளவில் பாதிப்பினை ஏற்படுத்துகிறது என்பதை தெரிந்து கொண்டார்.

‘‘நாம் அணியும் உடைகள் மண்ணில் மக்க சுமார் 500 ஆண்டுகளாகும். அதுவே பருத்தி துணி என்றாலும் அவை மக்க சுமார் 300 ஆண்டுகளாகும். அதனால் அந்த துணிகளை நாம் சஸ்டெயினபில் முறையில் பயன்படுத்துவது குறித்து யோசித்ததில் உருவானதுதான் ஸ்வாப் சைக்கிள். நம்முடைய பீரோவில் பலவித டிசைன்களில் உள்ள உடைகளில் 40% பயன்படுத்தாமல் அப்படியே புதிதாக ஒரு மூலையில் உறங்கிக் கொண்டிருக்கும்.

சொல்லப்போனால், உலகில் மிகப்பெரிய பொல்யூட்டிங் துறை என்றால் அது ஃபேஷன் துறைதான். இதில் பயன்படுத்தப்படும் கார்பன் புட் பிரின்ட்டுகள் ஒரு குறிப்பிட்ட அளவு கார்பனை வெளியேற்றுகிறது. மேலும் உலகம் முழுதும் மக்கள் தங்களின் வருமானத்தில் பெரிய அளவு தொகையினை உடைக்காக செலவு செய்கிறார்கள். அவ்வாறு செலவு செய்து வாங்கும் உடைகளை அவர்கள் முழுதாக பயன்படுத்துவதில்லை. மேலும் நாம் அணியும் உடைகள் முழுக்க முழுக்க பருத்தியால் உருவாக்கப்பட்டது இல்லை. அதில் குறிப்பிட்ட அளவு பாலியஸ்டரும் கலக்கப்படுகிறது. இதனால் இரண்டு விதமான பிரச்னைகளை நாம் சந்திக்க நேரிடும்.

ஒன்று உடைகளில் பயன்படுத்தப்படும் டைகளில் இருந்து வெளியாகும் ரசாயனம் நிலத்தடி நீர் அல்லது மற்ற நீர் வளங்களில் கலக்கும். இதனை லீச்சிங் என்று குறிப்பிடுவோம். அது மட்டுமில்லாமல் பாலியஸ்டர் போன்ற துணிகளில் இருந்து வெளியாகும் மைக்ரோ பிளாஸ்டிக் நம்முடைய தண்ணீர் மற்றும் நிலத்தில் கலந்து நாம் அதை உட்கொள்ள நேரிடும். சொல்லப்
போனால் இந்த மைக்ரோ பிளாஸ்டிக் நம்முடைய சுற்றுப்புறச்சூழலில் பல இடங்களில் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. ஏன் நம்முடைய வயிறு, குடலில் கூட உள்ளது. அண்டார்டிகா போன்ற இடத்திலும் இந்த மைக்ரோ பிளாஸ்டிக் இருப்பதை கண்டறிந்துள்ளனர்.

நாம் தயாரிக்கும் ஒவ்ெவாரு உடையும் பெரிய அளவில் மாசினை ஏற்படுத்துகிறது. ஒரு ஜோடி ஜீன்ஸ் உடை தயாரிக்க 2000 லிட்டர் செலவாகிறது. ஆனாலும் நாம் இந்த உடைகளை விலை கொடுத்து வாங்க தயங்குவதில்லை. மேலும் உடைகளின் தயாரிப்பும் அதிகரித்துக் கொண்டு தான் இருக்கிறது. இதற்கு ஒரு சிறிய அளவில் பிரேக் வேண்டும் என்று நினைத்து ஆரம்பிக்கப்பட்டதுதான் திரிப்ட் கல்ச்சர். அதாவது, ஒருவர் அந்த உடையினை ஓரிரு முறைதான் அணிந்திருப்பார்.

அப்படிப்பட்ட நல்ல நிலையில் உள்ள உடைகளை நாம் மற்றவர் பயன்பாட்டிற்காக விற்பதுதான் திரிப்ட் முறை. இந்த முறை இங்கு இந்தியாவில் பெரிய அளவு வரவேற்கப்படுவதில்லை. ஒருவர் அணிந்த உடையை அணிந்தால் சரும பிரச்னை ஏற்படும் மற்றும் அதில் மற்றவரின் கர்மா இருக்கும் என்ற மூடநம்பிக்கையும் இங்குண்டு. இன்றைய காலக்கட்டத்தில் ரூ.200
மற்றும் ரூ.300க்கு சில ஆப்களில் புதுஉடைகளே கிடைக்கும் போது நான் ஏன் மற்றவர் அணிந்த உடையினை வாங்க வேண்டும் என்ற கேள்வியும் எழுகிறது. அதனால்தான் நாங்க ஸ்வாப் முறை அதாவது, பண்டம் மாற்றம் முறையினை அறிமுகம் செய்தோம். இதன் மூலம் ஒருவர் பயன்படுத்தாத உடையினை மற்றவருக்கு தந்து அதன் மூலம் அந்த உடையின் ஆயுட்காலத்தை நீடிக்க செய்கிறோம்’’ என்றவர் அதன் செயல்பாட்டை பற்றி விவரித்தார்.

‘‘பலரின் மனதில் எழும் கேள்வி ஏற்கனவே ஒருவர் அணிந்த உடையை நான் ஏன் காசு கொடுத்து வாங்கணும் என்பதுதான். அதற்கு பதில் உங்களிடம் இருக்கும் பயன்
படாத உடையை நீங்கள் உங்களுக்கு பிடிச்ச உடையுடன் எக்ஸ்சேஞ்ச் செய்து கொள்ளலாம். நம்மிடம் இருக்கும் உடைக்கான விலைக்கு ஏற்ப வேறு பொருள் கிடைக்கும். அதற்கு நீங்க பணம் செலுத்த வேண்டியது இல்லை என்பதுதான் எங்களின் ேநாக்கம். இதற்கு நீங்க சில வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். முதலில் எங்களின் ஸ்வாப் சைக்கிள் ஆப்பினை உங்களின் செல்போனில் டவுன்லோட் செய்ய வேண்டும். அதன் பிறகு நீங்கள் மாற்ற விரும்பும் உடையின் புகைப்படத்தை பதிவு செய்ய வேண்டும்.

அதனைத் தொடர்ந்து அதன் விலை மற்றும் உடையின் விவரங்களை குறிப்பிட வேண்டும். ஒவ்வொரு துணியின் ரகம் மற்றும் உடைக்கு ஏற்ப நாங்க விலையினை நிர்ணயிப்போம். காரணம், 1000 ரூபாய் மதிப்புள்ள பொருளை 50க்கு மாற்ற முடியாது என்பதால், உங்க உடைக்கான மதிப்பினை நாங்க குறிப்பிடுவோம். அதன் பிறகு உங்களின் விருப்பங்களை நீங்கள் பதிவு செய்ய வேண்டும். அதாவது, உங்களுக்கு என்ன மாதிரியான உடைகளை (புடவை, சுடிதார், வெஸ்டர்ன் டாப்ஸ்…) மாற்றம் செய்ய வேண்டும் என்பதை பட்டியலிட வேண்டும்.

நீங்க பட்டியலிட்டு இருக்கும் உடை மற்றும் விலைக்கு ஏற்ப நாங்க ஒரு உடையினை மேட்சிங் செய்வோம். அந்த உடை பிடித்து இருந்தால், உங்க உடையினை அவருக்கும் அவரின் உடையினை நீங்களும் மாற்றிக் கொள்ளலாம். அவ்வாறு பிடிக்கவில்லை என்றால் நாங்க வேறு ஒரு மேட்சிங் கொடுப்போம். இந்த மேட்சிங் என்பது, உங்களின் உடை அவருக்கும் அவரின் உடை உங்களுக்கும் பிடித்து இருந்தால் மட்டுமே நிகழும். அதன் பிறகு அந்த உடையினை நாங்களே உங்க இல்லம் வந்து பெற்றுக்கொண்டு டெலிவரி செய்திடுவோம். அதேபோல் நீங்க விரும்பிய உடையும் உங்களை வந்து சேரும்படி பார்த்துக் கொள்வோம். இதில் உடைக்கான கட்டணம் என நீங்கள் எதுவுமே செலுத்த வேண்டாம். டெலிவரிக்கான கட்டணம் மட்டும் செலுத்தினால் போதும்.

மேலும் ஒரே மேட்சிங்கில் நீங்க உடையினை தேர்வு செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை. உங்களுக்கு அது பிடிக்கவில்லை என்றால், அடுத்தடுத்த மேட்சிங் நாங்க கொடுப்போம். ஒரு மேட்சிங் 48 மணி நேரம் வரை செல்லுபடியாகும். அதன் பிறகு வேறு மேட்சிங் உங்க போனில் டிஸ்பிளேயாகும். கிட்டத்தட்ட 1000த்துக்கும் மேற்பட்ட மேட்சிங் நாங்க கொடுப்போம்.

அவ்வாறு கொடுக்கும்போது ஒருவருக்கு மற்றொருவரின் உடைகள் கண்டிப்பாக பிடித்து போகும். சிலர் நான்கு மாதம் வரை கூட காத்திருந்து அவர்களுக்கு பிடித்ததை தேர்வு செய்து கொள்கிறார்கள். மேலும் உங்களிடம் ரூ.500 மதிப்புமிக்க பொருள் இருக்கும். மற்றவரிடம் இரண்டு ரூ.250க்கான பொருள் இருக்கும். அப்படி இருக்கும் பட்சத்தில் உங்க இருவருக்குமே அது பிடித்து இருந்தால், நீங்க அதனை மாற்றிக் கொள்ளலாம். ஒரு பொருளின் விலைக்கு ஏற்பதான் மற்ற பொருளை மேட்சிங் செய்வோம். உங்க பணத்திற்கு நியாயமான பொருட்களை நீங்க மாற்றிக் கொள்ள முடியும்’’ என்றவரின் வாடிக்ைகயாளர்கள் பெரும்பாலும் கல்லூரி மற்றும் வேலைக்கு செல்லும் பெண்கள் என்றார்.

‘‘பொதுவாக கல்லூரி பெண்கள்தான் புதிது புதிதாக உடை அணிய விரும்புவார்கள். அவர்களுக்கு இந்த ஸ்வாப்பிங் முறை மிகவும் சிறந்தது. இதன் மூலம் அவர்கள் கப்போர்ட்டில் உடைகளும் சேராது, அதே சமயம் புதிய உடைகள் அணிந்த சந்தோஷம் இருக்கும். சிலர் திருமணத்திற்காக வாங்கிய விலை உயர்ந்த புடவை, லெஹங்கா போன்ற உடைகளையும் இந்த முறையில் மாற்றிக் கொள்கிறார்கள். நான் இப்படி ஒரு ஆப் உள்ளது குறித்து முதலில் கல்லூரி மாணவர்களுக்கு அவர்களின் கல்லூரிக்கு சென்று விவரித்தேன்.

அதன் பிறகு அவர்கள் மூலமாக பலர் வந்தார்கள். அடுத்து சோஷியல் மீடியா எங்களுக்கு பெரிய அளவில் கை கொடுத்தது. தற்போது 50 ஆயிரம் வாடிக்கையாளர்கள் உள்ளனர். அதில் 100க்கும் மேற்பட்ட உடைகளை நாங்க மாற்றிக் கொடுத்திருக்கிறோம். சென்னை மட்டுமில்லாமல் பேன் இந்தியா முழுக்க ஸ்வாப் செய்வதால், மாற்றம் செய்ய நிறைய ஆப்ஷன் எங்களால் வாடிக்கையாளர்களுக்கு கொடுக்க முடிகிறது. தற்போது உடை மற்றும் அணிகலன்கள் மட்டும்தான் ஸ்வாப் செய்கிறோம். இதனைத் தொடர்ந்து மற்ற பொருட்களையும் அறிமுகம் செய்ய இருக்கிறோம். மேலும் இதனை உலகளவில் கொண்டு செல்லும் எண்ணம் உள்ளது’’ என்றார் காயத்ரி

தொகுப்பு: ஷம்ரிதி

The post பண்டம் மாற்றம் முறையில் உடைகளை மாற்றலாம்! appeared first on Dinakaran.

Tags : Gayatri ,Chennai ,
× RELATED மூளையின் முடிச்சுகள் எண்ணங்களின் வீரியம்!