×

கல்பதரு ஸ்ரீ காட்கே மஹராஜ்

நன்றி குங்குமம் ஆன்மிகம்

முடிவற்ற கால இயக்கத்தில் ஸத்குருக்களான ஞானிகள் செய்யும் தவங்களே பூமியை நிலை நிறுத்திக் கொண்டிருக்கின்றன. ஸத்குருவான சீரடி சாயிநாதரிடம் எத்தனையோ ஆத்மாக்கள் தங்களை முழுமையடைந்த நிலைக்கு உயர்த்த வேண்டிக் கொண்டாலும் அவர் சில உயர்ந்த ஆத்மாக்களை தன் பிரதிநிதிகளாகச் செய்தார்-இன்றும் செய்து கொண்டிருக்கிறார். அவ்வகையில் அவரால் ஆசீர்வதிக்கப்பட்ட சில பூரண ஆத்மாக்கள்-மகான்கள்-ஜீவன் முக்தர்கள், நாம் கேள்விப்பட்ட வகையில் ஸ்ரீ உபாஸினி பாபா, ஸ்ரீஸையத் ஜலாலுதீன் பாபா, ஸ்ரீராம மாருதி மஹராஜ், ஸ்ரீ கஜானன் மஹராஜ் மற்றும் பலர். அந்த வரிசையில் ஸ்ரீ காட்கே மஹராஜ் ஸ்ரீ சாயிநாதரால் நிலை நாட்டப்பட்ட கற்பகத் தருவாகவும், நமக்கோர் அற்புத ஆத்மாகவும் விளங்குகிறார்.

ஸ்ரீதத்தாத்ரேயரின் முதல் அவதாரமான ஸ்ரீபாத ஸ்ரீவல்லபருடைய சரிதாம்ருதத்தை எழுதுவதற்கு சங்கரபட் ஸ்ரீபாதரின் ஆணையால் பணிக்கப்பட்டிருந்தார். அதற்கான தெய்வீக ஆணையின் படி அவர் முதலில் உடுப்பியைத் தரிசனம் செய்து பின் கன்னியாகுமரியிலிருந்து தொடங்கி மருந்துவாழ்மலை, மதுரை, சிதம்பரம், திருப்பதி, காணிப்பாக்கம் முதலிய தலங்களைத் தரிசித்து நிறைவாக குருவபுரம் சென்றடையத் திட்டமிட்டார்.

ஒவ்வொரு ஊரிலும் ஸ்ரீபாத ஸ்ரீவல்லபரின் அவதார மகிமையையும் அற்புதத்தையும் நேரடியாகக் கண்டு அனுபவம் அடைந்த மகான்களைத் தரிசித்துக் கொண்டே வந்தார். ஒவ்வொரு ஊரிலும் அவருக்கு அநேக அதிசயங்களை ஸ்ரீபாதர் காட்டிக் கொண்டே வந்தார். அத்தனை அற்புதங்களையும், கண்டு ஆச்சரியப்பட்டுக் கொண்டே ‘‘ஸ்ரீபாத ராஜம் சரணம் ப்ரபத்யே’’ என்ற மஹா மந்திரத்தை உச்சரித்துக் கொண்டே வந்தார்.

ஆந்திராவில் சித்தூருக்கு அருகில் உள்ள காணிப்பாக்கம் வரசித்தி விநாயகரை சங்கரபட் தரிசனம் செய்து வெளியே வந்த போது பெரிய உயரமான நான்கு நாய்கள் அங்கு நின்று கொண்டிருப்பதைக் கண்டு பயந்து மீண்டும் கோயிலுக்குள் சென்று விட்டார். அங்கு வந்த அர்ச்சகர், “இந்த நாய்கள் திருமலாதாஸர் என்ற பெரியவருடைய நாய்கள். அவைகள் யாரையும் தொந்தரவு செய்வதில்லை.

திருமலாதாஸர் ஸ்ரீதத்தரே ஸ்ரீபாதராக அவதரித்து உள்ளார் என்று கூறிக் கொண்டிருப்பவர்” என்று கூறி சங்கரபட்டை வெளியே வரும்படிக் கூறினார். சங்கரபட் வெளியே வந்தவுடன் அந்த நான்கு நாய்களும் அவரைச் சூழ்ந்து கொண்டன. உடனே அர்ச்சகர், ‘இந்த நாய்களின் விருப்பத்திற்கேற்ப அவரின் வீட்டிற்குச் செல்லுங்கள். அங்கே உங்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கும்’ என்றார்.

சங்கரபட் திருமலாதாஸரைச் சந்தித்து ஸ்ரீபாதரின் மகிமைகளைத் தெரிந்து கொண்டார். ‘‘அன்புள்ள சங்கரபட்! ஸ்ரீபாதரின் தெய்வீக வரலாற்றை எழுதக்கூடிய பாக்கியம் உனக்கு மட்டுமே கிடைத்துள்ளது. அவரே உன்னைக் கருவியாகக் கொண்டு எழுதச் செய்து கொள்வார். கவலைப்படாதே’’ என்றார் திருமலாதாஸர்.

அதே நேரத்தில் பூஜைக்கு நிவேதனமாக வைத்திருந்த சுண்டல்கடலைகள் உலோக உருண்டைகளாக மாறி “ஸ்ரீபாதராஜம் சரணம் ப்ரபத்யே” என்ற வார்த்தைகள் வடிவில் அமைந்திருப்பதை சங்கரபட் பார்த்து அதிசயம் அடைந்து திருமலாதாஸரை நோக்கினார். திருமலாதாஸர் தியானத்தில் ஆழ்ந்திருந்தார். பின் திரும்பி பார்த்தபோது உலோக உருண்டைகளாக காட்சியளித்த சுண்டல் கடலைகள் மீண்டும் சுண்டல் கடலைகளாக மாறியிருந்தன. சிறிது நேரத்தில் கண் விழித்த திருமலாதாஸர் ஸ்ரீபாதர் தன்னைப் பற்றிக் கூறிய பிறவியின் ரகசியத்தை சங்கரபட்டிற்கு கூறினார்.

‘‘திருமலாதாஸ் நீ காட்கே மஹராஜ் என்ற பெயரில் மஹாராஷ்டிர மாநிலத்தில் பிறப்பாய் தீசிலா (ஷிர்டி) நகரத்தில் என்னுடைய ஸமர்த்த ஸத்குரு அவதாரத்தின் பொது சாயிநாதராக அவதரிப்பேன். அந்த அவதாரத்தில் என்னுடைய பரிபூரண அருள் உனக்கு கிடைக்கும். உனக்கு பாலகிருஷ்ண வடிவத்தின் மீது அதிக ஆசை உண்டு. ஆகையால் நீ “கோபாலா! கோபாலா! தேவகி நத்தன கோபாலா!” என்ற நாமாவளியைச் சொல்லிக் கொண்டிரு. இந்த உலகின் நன்மைக்காக காட்கே மஹராஜாகப் பிறந்து கஷ்டப்படுவோருக்கும், துயரப்படுவோருக்கும், ஏழைகளுக்கும் தொண்டு செய்து வாழ்வாய்’ என்றுஆசீர்வதித்து அருளினார் ஸ்ரீபாத ஸ்ரீவல்லபர்.

சாயிநாதரின் பக்தராய் இருந்த தாமோதர் ராஸ்னே (தாமு அண்ணா) (ஆம்ரலீலா-மாம்பழ அற்புதம்- ஸ்ரீசாயி ஸத்சரிதம்) என்பவரின் மகன் நாநா ஸாகேப் ராஸ்னேயின் வீட்டிற்கு ஸ்ரீ காட்கே மஹராஜ் விஜயம் செய்த போது நாநா ஸாகேப் ராஸ்னே அவரை வரவேற்று மரியாதை செய்து வணக்கத்துடன், ‘தங்களுக்கு குருவருள் எப்படிக் கிடைத்தது என்று சொல்ல வேண்டும்’ என்று வேண்டிக் கொண்டார்.

அப்போது ஸ்ரீ காட்கே மஹராஜ் ‘எவருக்கும் சொல்ல இயலாத ரகசியம் அது, என்றாலும் தாங்கள் கேட்டுக் கொண்டதால் அதைச் சொல்கிறேன்’ என்று சொல்லத் தொடங்கினார். “ஷேவ்காவ்-பாதர்டீ (மஹாராஷ்டிர கிராமங்கள்) பகுதியில் ஒரு துணிக்கடையில் நான் வேலை செய்து கொண்டிருந்தேன். ஒரு நாள் அங்கு ஒரு முஸ்லீம் பக்கீர் வந்து பிச்சை கேட்டார். அவர் முஸ்லீம் என்பதால் கடைக்காரர் ‘பிச்சை இல்லை போ’ என்று கூறிவிட்டார். எனக்கு அவரைப் பார்த்த அளவிலேயே பிச்சையிட வேண்டும் என்று தோன்றியது. நான் என் வீட்டிற்குச் சென்று ரொட்டியும் கறியும் கொண்டு வந்தேன். அதற்குள் அவர் அந்த இடத்தை விட்டுப் போய்விட்டார். அவரைத் தேடிக் கொண்டு சென்றபோது ஓர் இடத்தில் அமர்ந்து சோளத்தைத் தின்று கொண்டிருந்தார். நான் அவரிடம் சென்றேன்”.

அப்போது என்னைப் பார்த்து, ‘எதற்கு இங்கு வந்தாய்’ என்று கோபமாகக் கேட்டார்.’ உங்களின் பிச்சைக்காக என் வீட்டிலிருந்து ரொட்டி கொண்டு வந்தேன்’ என்றேன். ‘‘ஓஹோ! நான் எது கேட்டாலும் கொடுப்பாயா? உன் உயிரைக் கொடுக்கிறாயா?’’ என்று கேட்டார்.“அது நான் கொடுக்க முடிந்தது அல்ல. நீங்களே எடுத்துக் கொள்ளுங்கள்’ என்று அவர் முன்னால் தரையில் விழுந்து வணங்கினேன். அவர் சிரித்து ‘என் தலைமேல் கை வைத்து’ ஆசீர்வதித்தார். உடனே என் இதயத்தில் ஒரு மாறுதல் ஏற்பட்டது.

அந்த கணத்திலிருந்து அவரைத் தவிர வேறு எதுவும் வேண்டுமென்று தோன்றவில்லை. வீட்டிற்குச் சென்று எனக்கொரு சிறந்த குரு கிடைத்துள்ளார். நான் அவரைத் தேடிப் போகிறேன் என்று சொல்லிவிட்டு அவரிடம் சென்றேன்”.இப்பொழுதும் அவர் கோபமாகவே, ‘துஷ்டா! உனக்கு கொடுத்தது போதாதா? ஏன் என்னைத் தொல்லை செய்கிறாய்’ என்று சொல்லிவிட்டு மயானத்திற்குச் சென்றார். ‘நானும் அவரைப் பின் தொடர்ந்தேன்’. “உங்களை என்னால் மறக்க முடியவில்லை.

உங்களைப் பிரிந்து என்னால் இருக்க இயலாது. நீங்கள் என்னை ஏற்றுக்கொள்ளா விட்டால் நான் உயிர் விடுவேன்” என்று அவரை நோக்கி வணங்கி நின்றேன். மயானத்தில் ஒரு சமாதியருகில் பள்ளம் தோண்டி அதில் இரண்டு பானை தண்ணீர் ஊற்றச் சொன்னார். நான் அப்படியே செய்தேன். அவர் அந்தத் தண்ணீரில் மூன்று முறை உள்ளங்கையளவு எடுத்துப் பருகினார். என்னையும் அதே போல் செய்யச் சொன்னார். நான் அதனை அருந்தியவுடனே எனக்கு நீண்ட நேரம் வெளியுலகத்தைப் பற்றிய உணர்வே இல்லாமல் போயிற்று. எனக்கு உணர்வு திரும்பிய போது அவரைக் காணவில்லை. அவரைத் தேடித் தேடி அழுது புலம்பினேன்.

அவ்வாறு அவரைத் தேடிச் செல்லும் போது சீரடியிலுள்ள மசூதியை அடைந்தேன். மசூதியின் முன் ஒரு திரை போடப்பட்டிருந்தது. அங்கு ஒருவர் குளித்துக் கொண்டிருக்கிறார் என்று தெரிந்திருந்தும் அத்திரையை விலக்கிப் பார்த்தேன். எனக்கு அனுக்ரஹம் செய்தவர் அவரே. நான் தேடிக் கொண்டிருப்பவரும் அவரே. நான் ஆனந்தத்தில் உறைந்து நின்றேன். என்னைப் பார்த்த அவர் “டேய், எனது இரத்தத்தையும் மாமிசத்தையும் முன்னமே பறித்துத் தின்றுவிட்டாய்.

இப்போது எனது எலும்புகளைத் தின்பதற்கு வந்திருக்கிறாயா” என்று கூறி பக்கத்தில் இருந்த செங்கல்லை எடுத்து என்மேல் வீசி எறிந்தார். அது என் நெற்றியில் பட்டு இரத்தம் வழிந்தது. மறுகணமே அவர் என்னை அன்புடன் அரவணைத்து கருணை பொங்கும் முகத்துடன் ‘உன்னை முழுமையாக ஆசீர்வதித்து விட்டேன்’. ஆண்டவனுடைய அருள் உனக்கு எப்பொழுதும் இருக்கும். உன்னை எல்லோரும் தெய்வமாகப் போற்றுவார்கள். இனிமேல் என் பின்னால் திரிய வேண்டாம் என்றார்.இவ்வாறு  காட்கே மஹராஜ் பகவான் பாபா தனக்கு அருள்புரிந்ததை நாநா ராஸ்னேயிடம் சொல்லி முடித்தார்.

ஸ்ரீபாதரின் ஆணைப்படி செல்லுமிடமெல்லாம் நாம சங்கீர்த்தனம் செய்தார். கபீரின் தோஹா பாடல்களைப் பாடினார். அதைக் கேட்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள். “நான் என் ஊருக்குப் போகிறேன்’’ என்று சொல்லிவிட்டு அடிக்கடி சீரடி செல்வார். சீரடியின் தெருக்களை பெருக்கிச் சுத்தம் செய்வார். பின் பாபாவின் சமாதி மந்திருக்கு வடக்குப் பக்கத்தில் நாம சங்கீர்த்தனத்தைத் தொடங்கி விடுவார்.

பசித்தோருக்கு உணவளிப்பது, வறியவர்களுக்கு இடம் கொடுப்பது, சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்துக் கொள்வது என்னும் மூன்று கொள்கைகளை தம் வாழ்நாளில் தலையாய கொள்கைகளாகக் கடைபிடித்து வந்தார். ஓர் உணவுப் பாத்திரத்தை தம் தலையில் கவிழ்த்தும், தூய்மை செய்யும் கருவியை (broom) தம் கையில் ஏந்திக் கொண்டும் திரிந்தார். மக்கள் தரும் காணிக்கைகளைக் கொண்டு கல்விக் கூடங்கள், தர்மஸ்தாபனங்கள், மருத்துவமனைகள், விலங்குகளின் பராமரிப்புக் கூடங்கள் என அறச்செயலுக்குரிய அத்தனை பணிகளையும் செய்தார். இத்தகைய அரும்பணிகள் மூலம் ஆன்மிகச் சேவையைத் தன் வாழ்நாள் முழுதும் செய்து வந்தார் ஸ்ரீ காட்கே மஹராஜ்.

நாம சங்கீர்த்தனம் செய்து கொண்டே பக்தர்களிடம், ‘இதுவே நமது இறுதிச் சந்திப்பு’ என்று சிரித்துக் கொண்டே கூறிய ஸ்ரீ காட்கே மஹராஜ், வல்காவ் என்ற இடத்தில் 20 டிசம்பர் 1956 அன்று மஹாசமாதி அடைந்தார்.அவருடைய அளப்பரிய சேவையைப் பாராட்டி மஹாராஷ்டிர அரசு கிராமப்புற தூய்மைத் திட்டத்திற்கு, ‘ஸந்த் காட்கே பாபா க்ராம் ஸ்வச்சதா அபியான்’ என்று பெயர் சூட்டியது.

அதற்கும் மேலாக மஹாராஷ்டிரத்தில் உள்ள அமராவதி பல்கலைக்கழகத்திற்கு ‘ஸந்த் காட்கே பாபா அமராவதி பல்கலைக்கழகம்’ என்று பெயர் மாற்றம் செய்து பெருமைபடுத்தியது. அவருடைய நாற்பத்திரண்டாவது மஹா சமாதி தினத்தில் (20 டிசம்பர் 1998) மத்திய அரசு அவருக்குத் தபால்தலை வெளியிட்டு பெருமை கொண்டது. ஸ்ரீ சாயிநாதர் அருள்புரிந்த -அருள்புரியும் கல்பதருக்கள் இன்றும் நம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் மூலமாக பகவான் பாபாவின் திருவடிகளை பிரார்த்திப்போமாக.

தொகுப்பு: முனைவர் அ.வே.சாந்திகுமார சுவாமிகள்

The post கல்பதரு ஸ்ரீ காட்கே மஹராஜ் appeared first on Dinakaran.

Tags : Sri Ghatke ,earth ,Sadguru ,Sirdi Sainath ,Ghatke ,
× RELATED நிலவுக்கு விண்கலத்தை ஏவியது சீனா