×

குடிநீர் வழங்கல் , கழிவுநீகரற்று வாரியத்தின் சார்பில் ரூ.152.67 கோடி மதிப்பில் 52 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாடினார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

சென்னை: நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நே தலைமையில் இன்று (05.02.2024) நடைபெற்ற நிகழ்ச்சியில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னை மாநகராட்சி மற்றும் சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீகரற்று வாரியத்தின் சார்பில் ரூ.11.98 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற 13 திட்டப்பணிகளை திறந்து வைத்து, ரூ.152.67 கோடி மதிப்பில் 52 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி பணிகளைத் தொடங்கி வைத்தார்.

இன்று (05.02.2024) ரிப்பன் கட்டட வளாகத்தில் நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் நடைபெற்ற விழாவில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீகரற்று வாரியத்தின் சார்பில் ரூ.11.98 கோடி மதிப்பிலான முடிவுற்ற 13 திட்டப் பணிகளைத் திறந்து வைத்து, ரூ.152.67 கோடி மதிப்பிலான 52 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி பணிகளைத் தொடங்கி வைத்து விழாப் பேருரையாற்றினார்.

விழாவில் நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் பேசும்போது தெரிவித்ததாவது: தமிழ்நாடு முதலமைச்சரின் நல்லாட்சியில் தமிழ்நாட்டில் பல்வேறு துறைகளின் வாயிலாக முடிவுற்ற திட்டப்பணிகளைத் திறந்து வைத்து, புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, இன்று பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் வாயிலாக முடிவுற்ற திட்டப்பணிகளைத் திறந்து வைத்து, புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி பணிகள் தொடங்கி வைக்கப்படுகிறது.

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஏற்கனவே விதிக்கப்பட்ட வரிகள் சரியாக இருக்கிறதா, கட்டடத்தின் அளவுகள் சரியாக உள்ளதா, கூடுலாக இருக்கிறதா என ஆய்வு மேற்கொண்டு, பெரிய கட்டடங்களின் உரிமையாளர்களிடம் முதலில் வரிவசூல் செய்யுங்கள், அதற்குப் பிறகு மக்களிடம் சென்று வரிவசூல் செய்யுங்கள் என்று அறிவுறுத்தப்பட்டதன் காரணமாகத் தான் யாருக்கும் சிரமமில்லாமல் மாநகராட்சி வருவாய்த்துறை வரிவசூலித்து வருகிறது.

கடந்த ஆண்டு இதே நாளில் உள்ள வரிவசூலை விட இந்த ஆண்டு கூடுதலாக ரூபாய் 8 முதல் 10 கோடி வரை வரிவசூலிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி நிதித்துறையிலிருந்து நிதி சம்பந்தமான நடவடிக்கைகளை சட்டப்படி எவ்வாறு எப்படி செய்ய வேண்டுமோ, அதனை மாமன்ற உறுப்பினர்கள், நிலைக்குழுத் தலைவர்கள், மாநகராட்சி அலுவலர்கள் சிறப்பாக மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னையில் கழிவுநீர் குழாய்கள் அமைத்தல், மழைநீர் வடிகால்கள், குடிநீர் வழங்கும் பணிகள் ஆகியவை முக்கியமான பணிகள். வடசென்னையில் சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் மூலம் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சென்னை மாநகரமானது பரந்து விரிந்துள்ளது. இதில் வீராணம், செம்பரம்பாக்கம், பூண்டி, புழல், தேர்வாய் கண்டிகை உள்ளிட்ட ஏரிகளிலிருந்தும், நீராதாரங்களிலிருந்தும் வருகின்ற தண்ணீரை சுத்தப்படுத்தி அனுப்புகிறபோது, ஒரு சில இடங்களில் தாமதப்படுத்துதல் ஏற்படும் போது சில பகுதிகளுக்கு தண்ணீர் வராமல் உள்ள சூழ்நிலை ஏற்படுகிறது. அதனால் தான், தமிழ்நாடு முதலமைச்சர் புதிய திட்டத்தினை அறிவித்திருக்கிறார்கள். குடிநீர் வாரியம் மூலம் சென்னையைச் சுற்றி அனைத்து இடங்களுக்கும் தண்ணீர் தங்குதடையின்றி கொண்டு செல்லும் வகையில் ரிங் ரோடு போடுவது போல், ரிங் பைப் லைன் (Ring Pipe line) போடும் திட்டத்தினை செயல்படுத்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது விரைவில் தமிழ்நாடு முதலமைச்சரின் அனுமதி பெற்று நடைமுறைப்படுத்தப்படுமானால், எந்த இடத்திலும் தண்ணீர் சீராக விநியோகிக்கும் பொறுப்பினை சென்னைப் பெருநகர் குடிநீர் வாரியம் மேற்கொள்ளும்.

சென்னை மாநகராட்சியைப் பொறுத்தவரை மழை வெள்ளத்தின் போது, இயற்கையாக பெய்திருக்க வேண்டிய மழை பெய்திருந்தால், அனைத்து தண்ணீரும் உடனடியாக மழைநீர் வடிகாலில் வடிந்திருக்கும். ஆனால், திடீரென்று ஒரே நேரத்தில் 70 முதல் 80 செ.மீ. வரை பெய்த காரணத்தினால், மழைநீர் வடிய தாமதமானது.

தற்போது நடைபெற்று வரும் கொசஸ்தலையாறு வடிநிலப் பகுதி திட்டம் சென்னையில் 60% பணிகள் முடிவடைந்துள்ளது. இந்தப் பணிகள் இன்னும் 8 மாத காலத்தில் முடிவடையும். இனிவருங்காலங்களில் சென்னை மாநகரம் முழுமையாக மழைநீரிலிருந்தும், புயல் வந்தாலும் மக்களைப் பாதுகாக்கக்கூடிய பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு முதலமைச்சர் வழங்கியிருக்கிறார்கள் எனத் தெரிவித்தார்.

விழாவில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் பேசும்போது தெரிவித்ததாவது: இந்தச் சிறப்புமிக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு நான் மிகுந்த மகிழ்ச்சியும், பெருமையும் அடைகிறேன். சென்னை இன்றைக்கு முன்னணி மாநகரமாக மட்டுமல்லாமல், உலகளவிலும் முன்னணி மாநகரமாக திகழ்ந்து, வளர்ச்சியடைந்து வருகிறது. அந்தளவிற்கு சென்னைக்குத் தேவையான திட்டங்களை தமிழ்நாடு முதலமைச்சர் செயல்படுத்தி வருகிறார்கள். மேயராக இருந்து சிங்கார சென்னையாக உருவாக்கிய நம்முடைய முதலமைச்சர், இன்று முதலமைச்சராக சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் சென்னையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்கிறார்.

அதற்கு சிறந்த உதாரணம் இன்று நடைபெறும் நிகழ்ச்சி. பெருநகர சென்னை மாநகராட்சி சார்பாக ரூ.12 கோடி மதிப்பிலான 13 திட்டப்பணிகள் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது. ரூ.153 கோடி மதிப்பிலான திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. வேகமாக நகரமயமாகும் மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடம் வகிக்கிறது. குறிப்பாக சென்னையும், சென்னையின் மக்கள் தொகையும் இன்று விரிவடைந்து செல்கிறது. இந்த வளர்ச்சிக்கு ஏற்ப சென்னை மாநகராட்சி மிகச்சிறப்பாக செயல்பட்டு வருகிறது. வாழ்த்துகள்.

அன்றாடம் மக்களுடன் இருந்து மக்களுக்காக சேவை செய்யக்கூடிய ஒரு துறை என்றால் நகராட்சி நிருவாகத்துறைதான். குறிப்பாக மாநகராட்சியுடைய பணிகள் தடைபட்டால் இன்று சென்னையே செயலிழந்து போய்விடும். அப்படிப்பட்ட சிறந்த துறையைத் தான் நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் அவர்கள் சிறப்பாக வழிநடத்திச் செல்கிறார்.

இன்று சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு என்ற பேச்சுக்கே இடம் இல்லாத வகையில் அனைத்து பகுதிகளுக்கும் சிறப்பாக குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. மக்களுடைய தேவைகள் அனைத்தும் நேரடியாகவும், ஆன்லைன் வழியாகவும் உடனடியாக தீர்க்கப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு முதலமைச்சரின் கனவுத் திட்டமான சிங்கார சென்னை 2.0 திட்டத்திற்காக ரூ.500 கோடியினை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஒதுக்கியுள்ளார். இதன் மூலம் சென்னையின் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், மேம்பாலப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. பல்வேறு மேம்பாலப் பணிகள் முடிக்கப்பட்டு மக்களின் பயன்பாட்டிற்குத் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

அடையாறு, கூவம் ஆற்றை தூய்மைப்படுத்தி கரையோரங்களில் பொழுதுபோக்கு பூங்காக்கள் அமைக்கும் பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் இந்தப் பணிகளும் சென்னை மக்களின் பயன்பாட்டிற்குத் திறந்து வைக்கப்பட உள்ளது. மேலும், கழிவுநீர் ஆற்றில் கலப்பதைத் தடுக்கவும், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கவும் நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு வெளியிடப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறான பல்வேறு திட்டங்களை சென்னைக்காக தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் செயல்படுத்தி வருகிறார்கள்.

சென்னையில் ஏற்பட்ட கனமழை பாதிப்புகளின்போது, களத்தில் இருந்து இரவு பகல் பாராமல் பணியாற்றியவர்கள் மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள், வெள்ளப் பாதிப்புகளிலிருந்து மக்களை மீட்டதில் மாநகராட்சிக்கு மிகப்பெரிய பங்குண்டு. கடந்த 2015ஆம் ஆண்டு இதேபோல் சென்னையில் மிகப்பெரிய வெள்ளம் ஏற்பட்டது. அப்போது கிட்டத்தட்ட 10 முதல் 12 நாட்கள் சென்னை முடங்கிப்போனது.

ஆனால், தற்பொழுது பெய்த கனமழையிலிருந்து இரண்டே நாட்களில் சென்னை இயல்பு நிலைக்குத் திரும்பியது என்றால், அதற்கு சட்டமன்ற உறுப்பினர்கள், மாமன்ற உறுப்பினர்கள், மக்கள் பிரதிநிதிகள், மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள் ஆகியோரின் பங்கு மிகவும் இன்றியமையாதது. மேயர் தொடங்கி, உயர் அலுவலர்கள், பொறியாளர்கள், சுகாதார அலுவலர்கள், சுகாதார ஆய்வாளர்கள், தூய்மைப் பணியார்கள் அனைவரும் களத்தில் நின்று சிறப்பாகப் பணியாற்றியதால்தான் சென்னை நகர் இயல்பு நிலைக்கு உடனடியாக வந்தது.

மழை வெள்ள நேரத்தில் பலர் எவ்வளவு எதிர்மறையான விமர்சனங்கள் மற்றும் கருத்துகளை தெரிவித்தாலும், அதைப் பற்றி கவலை கொள்ளாமல், மக்கள் பணியை கருத்தில் கொண்டு அனைத்துப் பகுதிகளையும் சரிசெய்த பெருமை நம் சென்னை மாநகராட்சிக்கு உண்டு. சென்னையை மீட்ட கையோடு சிறுதும் ஓய்வெடுக்காமல் சாலைப் பணிகள், குடிநீர் இணைப்பு, கழிவுநீர் அடைப்பு, தூய்மைப் பணி உள்ளிட்ட தங்களது பணிகளில் எந்தவொரு எதிர்ப்பார்ப்பும் இல்லாமல் மீண்டும் சிறப்பாக செய்யத் தொடங்கிய அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு எத்தனை முறை நன்றி சொன்னாலும் பத்தாது.

அப்படி மக்களுடன் களத்தில் இருந்து அவர்களுக்குத் தேவையான அனைத்துப் பணிகளையும் மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் செய்து வருகிறீர்கள். சென்னையின் ஒவ்வொரு வளர்ச்சியிலும் உங்களுடைய பெயர் எழுதப்படும். உங்களது பணி சிறக்க இந்த அரசு என்றும் உங்களுக்குத் துணை நிற்கும் எனத் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, மேயர் ஆர்.பிரியா, மதிப்பிற்குரிய துணை மேயர் மு.மகேஷ்குமார், மாமன்ற ஆளுங்கட்சித் தலைவர் ந.இராமலிங்கம், கூடுதல் தலைமைச் செயலாளர்/பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ. ராதாகிருஷ்ணன், நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு முதன்மைச் செயலாளர் முனைவர் தா. கார்த்திகேயன், இசென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் வாரிய மேலாண்மை இயக்குநர் டாக்டர் டி.ஜி.வினய், சட்டமன்ற உறுப்பினர்கள் இ.பரந்தாமன், திரு.எஸ்.சுதர்சனம், ப.தாயகம் கவி, எம்.கே.மோகன், எஸ்.அரவிந்த் ரமேஷ், ஆர்.டி.சேகர், த.வேலு, ஜெ.கருணாநிதி, ஐட்ரீம் ஆர்.மூர்த்தி, ஆ.வெற்றி அழகன், ஜே.ஜே.எபினேசர், ஏ.எம்.வி.பிரபாகர் ராஜா, கே.பி.சங்கர், கா.கணபதி, ஜோசப் சாமுவேல், கூடுதல் ஆணையாளர்கள் சங்கர்லால் குமாவத், (சுகாதாரம்), ஆர்.லலிதா (வருவாய் (ம) நிதி), இணை ஆணையாளர் (பணிகள்) டாக்டர் ஜி.எஸ்.சமீரன், துணை ஆணையாளர்கள் ஷரண்யா அறி, (கல்வி), எம்.பி.அமித், (தெற்கு வட்டாரம்), கே.ஜெ.பிரவீன் குமார், (மத்திய வட்டாரம்), கட்டா ரவி தேஜா, (வடக்கு வட்டாரம்), சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் வாரிய செயல் இயக்குநர் செ.சரவணன், நிலைக்குழுத் தலைவர்கள் நே.சிற்றரசு (பணிகள்), க.தனசேகரன் (கணக்கு), த.விசுவநாதன் (கல்வி), டாக்டர் கோ.சாந்தகுமாரி (பொதுசுகாதாரம்), சர்பஜெயாதாஸ் நரேந்திரன் (வரி விதிப்பு (ம) நிதி), நியமனக் குழு உறுப்பினர்கள் ராஜா அன்பழகன், சொ.வேலு, மண்டலக்குழுத் தலைவர்கள் தி.மு.தனியரசு, ஏ.வி.ஆறுமுகம், எஸ்.நந்தகோபால், நேதாஜி யு. கணேசன்,பி.ஶ்ரீராமுலு, சரிதா மகேஷ்குமார், பி.கே.மூர்த்தி, எஸ்.மதன்மோகன், எம்.கிருஷ்ணமூர்த்தி, நொளம்பூர் வே. ராஜன், என்.சந்திரன், எஸ்.வி.ரவிச்சந்திரன், வி.இ.மதியழகன், மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
திறந்து வைக்கப்பட்ட முடிவுற்ற திட்டப்பணிகள் பெருநகர சென்னை மாநகராட்சி ரூ.4.32 கோடி மதிப்பில் முடிவுற்ற 9 திட்டப்பணிகள் தொடங்கி வைக்கப்பட்டது

சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ், திரு.வி.க.நகர் மண்டலம்- கஸ்தூரிபாய் காலனி, நீரேற்று நிலைய சாலை, பெரம்பூர்-பேரக்ஸ் சாலை, சோழிங்கநல்லூர் மண்டலம், ஜனனி ஹோம்ஸ் லேஅவுட் பேஸ்-1 மற்றும் பேஸ்-2 விரிவு ஆகியவற்றில் ரூ.2.54 கோடி மதிப்பில் 6 புதிய பூங்காக்கள், சோழிங்கநல்லூர் மண்டலம், அண்ணா சாலை மற்றும் பாரதி நகரில் ரூ.78 இலட்சம் மதிப்பில் 2 மழைநீர் உறிஞ்சும் பூங்காக்கள், அண்ணாநகர் மண்டலம், வார்டு-102, வேலங்காடு மயானபூமியில் ரூ.1 கோடி மதிப்பில் நீத்தார் உடல் பாதுகாப்பு குளிர்பதன அறை என மொத்தம் ரூ.4.32 கோடி மதிப்பில் முடிவுற்ற 9 திட்டப்பணிகள் இன்று தொடங்கி வைக்கப்பட்டது.

சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீகரற்று வாரியம் ரூ.7.66 கோடி மதிப்பில் முடிவுற்ற 4 திட்டப்பணிகள் திறந்து வைக்கப்பட்டது. தேனாம்பேட்டை மண்டலம், நடுக்குப்பம் பகுதியில் ரூ.1.24 கோடி மதிப்பில் புதிய கழிவுநீர் உந்து நிலையம், கோடம்பாக்கம் மண்டலம், ஜாபர்கான்பேட்டையில் ரூ.36.06 இலட்சம் மதிப்பில் புதிய பணிமனை அலுவலகக் கட்டடம், அடையாறு மண்டலம், மசூதி காலனியில் ரூ.3.27 கோடி மதிப்பில் கழிவுநீர் உந்து குழாய், சோழிங்கநல்லூர் மண்டலம், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியக் குடியிருப்பு பகுதியில் ரூ.2.79 கோடி மதிப்பில் குடிநீர் வழங்கல் மறுசீரமைப்புத் திட்டம் என மொத்தம் ரூ.7.66 கோடி மதிப்பில் முடிவுற்ற 4 திட்டப்பணிகள் பயன்பாட்டிற்கு இன்று தொடங்கி வைக்கப்பட்டது.
அடிக்கல் நாட்டி தொடங்க வைக்கப்பட்ட திட்டப்பணிகள்

பெருநகர சென்னை மாநகராட்சி ரூ.121.02 கோடி மதிப்பிட்டில் 47 புதிய திட்டப்பணிகள் அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்கப்பட்டது. சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ், திருவொற்றியூர், மணலி, மாதவரம், இராயபுரம், திரு.வி.க.நகர், அம்பத்தூர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம், ஆலந்தூர், அடையாறு, பெருங்குடி, சோழிங்கநல்லூர் ஆகிய மண்டலங்களில் மொத்தம் 37 சென்னை பள்ளிகளில் ரூ.64.15 கோடி மதிப்பில் கூடுதலாக பள்ளிக் கட்டடங்கள், பெருங்குடி மண்டலம், மயிலை பாலாஜி நகரில் ரூ.1.05 கோடி மதிப்பில் 4 புதிய பூங்காக்கள், தேனாம்பேட்டை மண்டலம், வள்ளுவர் கோட்டம் பிரதான சாலை, அடையாறு மண்டலம், வேளச்சேரி, வி.ஜி.பி. செல்வா நகர், 2வது பிரதான சாலை மற்றும் சோழிங்கநல்லூர் மண்டலம், சோழிங்கநல்லூர் ஆகிய பகுதிகளில் மொத்தம் ரூ.17.52 கோடி மதிப்பில் 3 சமுதாய கூடங்கள்,
மாநில உள்கட்டமைப்பு மற்றும் வசதிகள் நிதி மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சியின் மூலதன நிதியின் கீழ், இராயபுரம் மண்டலம், வார்டு-51 மற்றும் 49க்குட்பட்ட எம்.சி. (மோனிகர் சௌல்ட்ரி) சாலையில் ரூ,26.23 கோடி மதிப்பில் 1000 மீ. நீளத்தில் நடைபாதை வளாகம் அமைக்கப்பட உள்ளது.

அம்பத்தூர் மற்றும் கிண்டி தொழிற்பேட்டை ஆகிய இரண்டு இடங்களில் உள்ள சாலைகள் ரூ.12.07 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தும் பணி ஆகியவை அமைச்சர் அவர்களால் இன்று அடிக்கல் நாட்டித் தொடங்கி வைக்கப்பட்டது.

சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீகரற்று வாரியம் ரூ.31.65 கோடி மதிப்பில் புதிய 5 திட்டப்பணிகள் அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்கப்பட்டது. இராயபுரம் மண்டலம், ஈ.வி.கே.சம்பத் சாலையில் ரூ.4.99 கோடி மதிப்பில் உந்து குழாய்கள் பதிக்கும் பணிகள், மு.க.நல்லமுத்து தெரு, மூர்தெரு, அங்கப்பநாயக்கன் தெரு, கிருஷ்ணன் கோவில் தெரு, இரண்டாவது லைன் கடற்கரை சாலை, அர்புட் நாட் லேன் பகுதிகளில் ரூ.4.67 கோடி மதிப்பில் பிரதான கழிவுநீர் குழாய்கள் விரிவாக்கப் பணிகள், வளசரவாக்கம் மண்டலம், மதுரவாயல் பெருமாள் கோவில் தெரு, அம்பேத்கர் நகர் மற்றும் வடக்கு மாடவீதி பகுதிகளில் ரூ.5.40 கோடி மதிப்பில் கழிவுநீர் கட்டமைப்புகள், அடையாறு மண்டலம், சைதாப்பேட்டையில் ரூ-8.43 கோடி மதிப்பில் சேதமடைந்த கழிவுநீர் உந்து குழாய்களை மாற்றியமைக்கும் பணிகள், சோழிங்கநல்லூர் தொகுதி, பெரும்பாக்கம் வடக்கு தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியக் குடியிருப்புகளுக்கு ஃரூ.8.16 கோடி மதிப்பில் பிரத்யேக நெகிழிரும்பு குடிநீர் குழாய் அமைக்கும் பணிகள் என மொத்தம் ரூ.31.65 கோடி மதிப்பில் புதிய 5 திட்டப்பணிகள் அமைச்சரால் இன்று அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்கப்பட்டது.

The post குடிநீர் வழங்கல் , கழிவுநீகரற்று வாரியத்தின் சார்பில் ரூ.152.67 கோடி மதிப்பில் 52 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாடினார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் appeared first on Dinakaran.

Tags : Minister ,Assistant Minister ,Stalin ,Drinking Water Supply and Sewerage Board ,Chennai ,Minister of Municipal Administration ,K. N. ,WELFARE AND ,SPORT DEVELOPMENT ,STALIN STALIN ,CHENNAI MUNICIPALITY ,CHENNAI METROPOLITAN DRINKING WATER SUPPLY AND SEWERAGE BOARD ,Udayaniti Stalin ,Dinakaran ,
× RELATED 24 நாட்களில் 8,465 கி.மீ. பயணித்து 1.24 கோடி...