×

வேலையில்லா திண்டாட்டத்தால் வட மாநில தொழிலாளர்கள் வருகை அதிகரிப்பு

திருப்பூர் : டாலர் சிட்டி, குட்டி ஜப்பான் என்றெல்லாம் அழைக்கப்படும் திருப்பூர் பகுதியில் பின்னலாடை தொழில்கள் மற்றும் அதனை சார்ந்த தொழில்களான டையிங்,நிட்டிங்,காம்பேக்டிங்,வாஷிங், விசைத்தறி உள்ளிட்ட தொழில்களும் மற்றும் உடுமலை பகுதியில் விவசாயமும்,காங்கயத்தில் தேங்காய் களம் உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

மேற்கண்ட தொழில் நிறுவனங்களில் தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களிலிருந்து தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். அதுமட்டுமல்லாமல் வெளி மாநிலங்களான அசாம், ஒடிசா, பீகார், உத்தரபிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களிலிருந்து தொழிலாளர்கள் திருப்பூரில் பல்வேறு பகுதிகளில் பரவலாக வீடுகள் வாடகைக்கு எடுத்து தங்கி இங்குள்ள நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனர். தினசரி வடமாநிலங்களில் இருந்து திருப்பூருக்கு வரும் ரயில்களில் 400 க்கும் மேற்பட்டோர் புதியதாக திருப்பூருக்கு வேலைக்காக வருகின்றார்கள்.

இடைத்தரகர்கள் மூலம் ரயில் நிலையத்திலேயே அவர்களுக்கான பணி இடத்தை தேர்வு செய்து பிரித்து அனுப்புகின்றார்கள். இந்நிலையில் திருப்பூரில் நடைபெறும் தொழில்களில் 60 சதவீதம் வட மாநிலத்தவர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை, உத்திரப்பிரதேசத்தில் பொருளாதார வளர்ச்சி அடைந்திருப்பதால் உத்தரபிரதேசத்தை சேர்ந்த தொழிலாளர்கள் 60 சதவீதம் பேர் திருப்பூரில் இருந்து உத்தரபிரதேசம் சென்று விட்டதாக தகவல் ஒன்றை வெளியிட்டு இருந்தார். அந்த தகவல் முற்றிலும் பொய்யானதாகும்.

திருப்பூரில் பணியாற்றும் வட மாநில தொழிலாளர்கள் பெரும்பாலானோர் பீகார் மற்றும் உத்திர பிரதேச மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். தற்போது வடமாநிலங்களில் உள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் தொழில் வளர்ச்சி இல்லாமல் இருப்பதால் குடும்பத்தோடு திருப்பூருக்கு குடி பெயர்ந்து தங்கள் குழந்தைகளை இங்குள்ள பள்ளிகளில் சேர்த்து படிக்க வைத்துக் கொண்டு வேலைக்கு செல்லும் வட மாநில தொழிலாளர்கள் ஏராளமானோர் உள்ளனர்.

இந்நிலையில் கடந்த 10 ஆண்டுக்கு முன்னால் திருப்பூர் வந்த உத்தர பிரதேசம் மற்றும் பீகாரைச் சேர்ந்த வட மாநிலத் தொழிலாளர்கள் இன்றைக்கு சொந்தமாக தொழில் நிறுவனங்களை தொடங்கி அங்கு நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்களை வைத்து பனியன் தொழில் செய்து வருகின்றனர். அந்த நிறுவனங்களில் ஏராளமான வடமாநில தொழிலாளர்கள பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து உத்தரபிரதேசத்தை சேர்ந்த விஜய் என்பவர் கூறியதாவது: நான் கடந்த ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக திருப்பூரில் பணியாற்றி வந்தேன். அந்த ஏழு ஆண்டுகளிலும் திருப்பூரில் நல்ல வருமானத்தை ஈட்டி எனது குடும்பத்திற்கு அனுப்பி வைத்து அவர்கள் நல்ல நிலையில் இருந்து வருகிறார்கள். இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் எனது திருமணத்திற்காக நான் என் சொந்த மாநிலமான உத்தரபிரதேசத்திற்கு சென்றேன். அங்கு எனக்கு திருமணம் முடிந்து மூன்று மாதங்கள் ஆகிறது. தற்போது மீண்டும் திருப்பூர் வர உள்ளேன். தமிழ்நாட்டில் இருக்கும் அளவிற்கு எங்கள் மாநிலத்தில் வேலை வாய்ப்புகள் அதிகம் இல்லை.

அப்படி வேலை வாய்ப்புகள் இருக்கும் பட்சத்திலும் மிகக் குறைந்த ஊதியத்தில் வேலை செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது. அப்படி இருக்கும் போது அதில் வரும் வருமானத்தை வைத்து எனது குடும்பத்தை நடத்த முடியாத சூழல் ஏற்படுகிறது. அதனால் வரும் வாரத்தில் நான் திருப்பூர் வந்து பணியாற்றுவேன். பின்னர் சிறிது காலம் கழித்து எனது மனைவியையும் திருப்பூர் அழைத்து வந்து இங்கு நாங்கள் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி பணியாற்ற உள்ளோம். இவ்வாறு கூறினார்.

The post வேலையில்லா திண்டாட்டத்தால் வட மாநில தொழிலாளர்கள் வருகை அதிகரிப்பு appeared first on Dinakaran.

Tags : northern states ,Tirupur ,Dollar City ,Little Japan ,Udumalai ,Kangayam ,
× RELATED வட மாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு...