×

நெல்லை- பாளை நகரங்களை இணைக்கும் சுலோச்சன முதலியார் பாலத்தில் முறையான பராமரிப்பின்றி வளர்ந்து நிற்கும் மரம், செடிகள் விரைவில் அகற்றப்படுமா?

நெல்லை : நெல்லை- பாளையங்கோட்டை நகரங்களை இணைக்கும் கொக்கிரகுளம் தாமிரபரணி சுலோச்சன முதலியார் பாலத்தில் முறையான பராமரிப்பின்றி வளர்ந்து நிற்கும் மரம், செடி கொடிகள் விரைவாக அகற்றப்படுமா என்ற எதிர்பார்ப்பு பலமாக எழுந்துள்ளது. இரட்டை நகரங்களான நெல்லை மற்றும் பாளையங்கோட்டை ஆகியவற்றை இணைக்க கடந்த 130 ஆண்டுகளுக்கு முன்னர் தாமிரபரணியின் குறுக்கே சுலோச்சன முதலியார் பாலம் கட்டப்பட்டது. இப்பாலம் நூற்றாண்டுகள் கடந்தும் கூட தற்போதும் கம்பீரமாக நிற்கிறது. தாமிரபரணியில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 16, 17, 18 ஆகிய நாட்களில் அதி கன மழை தொடர்ந்து பெய்தது.

இதனால் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் வரலாறு காணாத வகையில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் புதிதாக கட்டப்பட்ட ஏராளமான பாலங்கள் வெள்ளத்தை எதிர்கொள்ள முடியாமல் கடும் பாதிப்புக்கு உள்ளாகின.ஆனால், சுமார் 130 ஆண்டுகளை கடந்து புராதனமான சுலோச்சன முதலியார் பாலம் இந்த வெள்ளத்தை எதிர்கொண்டுள்ளது.

மேலும் சிறிதும் பாதிப்பு ஏற்படாமல் கம்பீரமாக காணப்படுகிறது. ஆனால் இந்த பாலத்தில் தற்போது பக்கவாட்டு சுவர்களில் பெரிய பெரிய அரசமரம் உள்ளிட்டவை மரங்களாகவும், பெரிய செடிகளாகவும் வளர்ந்துள்ளன. தண்ணீர் நன்கு கிடைப்பதால் இவை அனைத்தும் பெரும் விருட்சமாக வளர்ந்து வருகிறது. இவற்றின் வேர்கள் ஆழமாக பாலத்தின் சுவர்களுக்குள் அடியாழம் வரையில் சென்றுள்ளது. இதனால் சுவர்களில் விரிசல் ஏற்பட்டு, பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.

எனவே முறையான பராமரிப்பின்றி பாலத்தில் வளரும் செடி, கொடிகள், மரங்களை உடனடியாக அகற்றுவதோடு அவ்வப்போது முறையாகப் பராமரித்து சுவர்களை சீரமைத்து இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த பாலத்தை மேலும் பல நூற்றாண்டுகளுக்கு பாதுகாக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்வருவார்களா என்ற எதிர்பார்ப்பு பலமாக எழுந்துள்ளது.

The post நெல்லை- பாளை நகரங்களை இணைக்கும் சுலோச்சன முதலியார் பாலத்தில் முறையான பராமரிப்பின்றி வளர்ந்து நிற்கும் மரம், செடிகள் விரைவில் அகற்றப்படுமா? appeared first on Dinakaran.

Tags : Sulochana Mudaliar ,Nellai-Palai ,Nellai ,Kokrakulam Thamirapharani ,Nellai-Palayamgottai ,Palayamgottai ,Sulochana Mudaliar bridge ,Nellai-Palayam ,
× RELATED நெல்லையில் கட்டுக்கடங்காத கூட்டம்;...