×

கண்டாச்சிபுரத்தில் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றம் அமைக்கப்படுமா?

*பொதுமக்கள் எதிர்பார்ப்பு

கண்டாச்சிபுரம் : விழுப்புரம் கள்ளக்குறிச்சி ஒருங்கிணைந்த மாவட்டமாக இருந்தபோது திருக்கோவிலூர் தாலுகாவிலிருந்து நிர்வாக வசதிக்காக கடந்த 2016ம் ஆண்டு கண்டாச்சிபுரம் புதிய தாலுகாவாக அறிவிக்கப்பட்டது. இதில் முகையூர் மற்றும் அரகண்டநல்லூர் குறுவட்டங்களை உள்ளடக்கி 62 வருவாய் கிராமங்களை கொண்டு கண்டாச்சிபுரத்தில் வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் அமைத்து கண்டாச்சிபுரம் தாலுகா இதுநாள் வரையில் செயல்பட்டு வருகிறது.

இந்த தாலுகாவில் கண்டாச்சிபுரம் மற்றும் அரகண்டநல்லூர் காவல் நிலையங்கள் உள்ளடங்கி உள்ளது. மேலும் கண்டாச்சிபுரத்திலிருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் அனந்தபுரம் மற்றும் கெடார் காவல் நிலையங்கள் அமைந்துள்ளது. இதில் அரகண்டநல்லூர் மற்றும் அனந்தபுரம் பேரூராட்சிகளாகவும், கண்டாச்சிபுரம் மற்றும் கெடார் ஊராட்சிகளாகவும் செயல்பட்டு வருகிறது.

இருப்பினும் தாலுகா தலைநகரமான கண்டாச்சிபுரத்தில் ஏறத்தாழ சுமார் 15,000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கண்டாச்சிபுரம் தாலுகா அறிவிக்கப்பட்டு 8 ஆண்டு காலம் ஆகியும் இதுவரையில் கண்டாச்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தை தவிர தாலுகா தலைநகரத்துக்கு தேவையான வேறு எந்த அரசு அலுவலகங்களும் அமைக்கப்படவில்லை. இதேபோல் விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 2019ம் ஆண்டு உருவாக்கப்பட்ட திருவெண்ணெய்நல்லூரில் கடந்த ஆண்டு மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றம் அறிவித்து செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் மேலே குறிப்பிட்ட காவல் நிலையங்களில் அரகண்டநல்லூர் காவல் நிலைய ஆய்வாளர் கொண்ட காவல் நிலையமாகவும், இதன் எல்லைக்குட்பட்ட வீரபாண்டி கிராமத்தில் புறக்காவல் நிலையமும் அமைந்துள்ளது. அரகண்டநல்லூர், கண்டாச்சிபுரம், கெடார், அனந்தபுரம் ஆகிய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் புகழ் பெற்ற கோயில்கள், தேசிய நெடுஞ்சாலைகள், ஒழுங்குமுறை விற்பனை கூடம், அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகள், அதிக வணிக வளாகங்கள், காப்புக்காடுகள், மலைப்பகுதிகள் மற்றும் முக்கியமாக விழுப்புரம் மாவட்ட எல்லைக்காவல் நிலையமாகவும் உள்ளது.

மேலும் தினந்தோறும் வாகன விபத்து வழக்குகள், சாராய வழக்குகள், சூதாட்ட வழக்குகள், அடிதடி வழக்குகள், இருசக்கர வாகன திருட்டு மற்றும் வீடுகளில் கொள்ளை சம்பவங்கள், அடிக்கடி வன்கொடுமை தடுப்பு சட்ட வழக்குகள் என பதியப்பட்டு கைது செய்து வருகின்றனர். இதற்காக கைது செய்யப்பட்ட குற்றவாளிகளை கள்ளக்குறிச்சி மாவட்டமான திருக்கோவிலூர் நீதிமன்றத்துக்கும், அரகண்டநல்லூர் காவல் நிலைய குற்றவாளிகளை திருக்கோவிலூர் அல்லது திருவெண்ணைய்நல்லூர் நீதிமன்றத்துக்கும், கெடார் மற்றும் அனந்தபுரம் காவல் நிலைய குற்றவாளிகளை செஞ்சி நீதிமன்றத்துக்கும் அல்லது மாவட்ட தலைநகரமான விழுப்புரம் மாவட்ட நீதிமன்றத்துக்கும் அழைத்து செல்ல வேண்டிய கடினமான நிலை நீடித்து வருகிறது.

மேலும் மாலை நேரத்துக்கு பிறகு கைது செய்யப்படும் குற்றவாளிகளை அழைத்து செல்வதில் காலதாமதம் ஏற்படுவதால், நேரத்தை கருத்தில் கொண்டு சில சமயங்களில் குற்றவாளிகளை பெயிலில் விடும் சூழ்நிலையும் ஏற்பட்டு வருகிறது. இதனை கருத்தில் மாவட்ட நிர்வாகம் மாவட்டத்தில் விக்கிரவாண்டி, திருவெண்ணெய்நல்லூர் தாலுகாவில் உள்ளது போல் தாலுகா தலைநகரமான கண்டாச்சிபுரத்தில் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றம் அமைக்க தமிழ்நாடு அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

கண்டாச்சிபுரத்தில் விரைவில் புதிய நீதிமன்றம்

இதுகுறித்து கண்டாச்சிபுரம் பள்ளியில் படித்த சமூக ஆர்வலரும், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞருமான ஹேமராஜன் சட்டத்துறை அமைச்சர் ரகுபதியிடம் மனு அளித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது: கண்டாச்சிபுரம் தாலுகா அறிவிக்கப்பட்டு 8 ஆண்டுகள் ஆகியும் இன்னும் புதிய நீதிமன்றம் அறிவிக்கப்படவில்லை. ஏற்கனவே விழுப்புரத்திலிருந்து பிரித்து கள்ளக்குறிச்சி தனி மாவட்டமாக அறிவித்ததாலும் அதனை தொடர்ந்து வட்டங்கள் பிரிக்கப்பட்டதாலும் மக்கள் பல்வேறு குழப்பங்களையும், பிரச்னைகளையும் சந்தித்து வருகின்றனர்.

கடந்த 2019ம் ஆண்டு திருவெண்ணெய்நல்லூர் புதிய வட்டமாக அறிவிக்கப்பட்டு உடனடியாக புதிய நீதிமன்றம் அறிவிக்கப்பட்டது. அத்துடன் கடந்த ஆண்டு நீதிமன்றம் திறக்கப்பட்டது. மேலும் நீதிமன்ற கட்டிட பணிகளும் நடைபெற்று கொண்டிருக்கிறது. ஆனால் கண்டாச்சிபுரம் வட்டம் உருவாக்கப்பட்டு சுமார் 8 ஆண்டுகள் ஆகியும் இன்னும் புதிய நீதிமன்றம் அறிவிக்கப்படவில்லை.

எனவே கண்டாச்சிபுரம் வட்டத்துக்கு விரைவில் புதிய நீதிமன்றம் அறிவித்து அதனை தொடர்ந்து மேற்படி நீதிமன்றம் திறக்க வழிவகை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன், இவ்வாறு கூறியிருந்தார். மேலும் இந்த மனுவை சென்ற வாரம் வெள்ளிக்கிழமை தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதியிடம் நேரில் சென்று கொடுத்துள்ளார். அதற்கு அவர் வருகின்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அறிவிப்பதாக தெரிவித்ததாக கூறியுள்ளார். ஆகவே விரைவில் கண்டாச்சிபுரத்தில் புதிய நீதிமன்றம் அறிவிக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

The post கண்டாச்சிபுரத்தில் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றம் அமைக்கப்படுமா? appeared first on Dinakaran.

Tags : District Law and Criminal Court ,Kandachipuram ,Villupuram ,Kallakurichi ,Tirukovilur taluka ,Mukaiyur ,Aragandanallur ,
× RELATED காரில் கடத்திய 146 கிலோ போதை பொருள் பறிமுதல்