×

கோண்டூர்-பண்ருட்டி வரையில் உள்ள நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்

*பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்

கடலூர் : சாலையின் இருபுறமும் நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
சென்னை-கன்னியாகுமரி வரை செல்லும் சாலையில் தொழில் தட திட்டத்தின் கீழ், நெடுஞ்சாலை துறையினர் மூலம் சாலை விரிவாக்க பணி நடந்து வருகிறது. இதில் கடலூர் அருகே கோண்டூரில் இருந்து நெல்லிக்குப்பம், பண்ருட்டி வழியாக மடப்பட்டு வரை ரூ.230 கோடி மதிப்பீட்டில் சாலை விரிவாக்க பணி நடந்து வருகிறது. இதில் நெல்லிக்குப்பம் பகுதியில் நெடுஞ்சாலைத்துறை மூலம் அளவீடு செய்து பாரபட்சமாகவும், முறைகேடாகவும் பணிகள் நடப்பதாக அனைத்து கட்சியினர், சமூக ஆர்வலர்கள், பொதுநல கூட்டமைப்பினர் மற்றும் பொதுமக்கள் குற்றம்சாட்டி வந்தனர்.

சரியான முறையில் பணிகள் செய்ய வேண்டும் என அனைத்து தரப்பினரும் உயர் அதிகாரிகளுக்கு பலமுறை கோரிக்கை வைத்தனர். இருப்பினும் சரியான முறையில் அளவீடு செய்யாமல் சாலை போடப்பட்டுள்ளதாக அனைத்து தரப்பினரும் புகார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், இருபுறங்களிலும் சாலையோரம் மழைநீர் வடிகால் வாய்க்காலின் மேல் பகுதி சிமெண்ட் கான்கிரீட் தளம் மற்றும் இரும்பு தடுப்பு கட்டைகளுடன் போடப்பட்டு நடைபாதையாக பயன்படுத்தப்படுகிறது.

சாலையின் ஓரத்தில் வாகனங்களை நிறுத்திவிட்டு, கடைகளுக்கு சென்று பொருட்கள் வாங்க நடைபாதை ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பாதையை கடை உரிமையாளர்கள் ஆக்கிரமிப்பு செய்து கடையில் விற்பனை செய்யப்படும் பொருட்களை நடைபாதையில் வைத்துள்ளனர். இதனால் நடைபாதையில் நடந்து செல்ல முடியாமல் பாதசாரிகள் சாலையிலேயே நடந்து செல்வதால், போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்து ஏற்படுகிறது. ஒரு சில கடையின் முன் இருந்த இரும்பு கட்டைகளை அகற்றிவிட்டனர்.

சாலை விரிவாக்க பணி முழுமையாக முடிவடையாத நிலையில் அதற்குள்ளாகவே பல இடங்களில் நடைபாதையை கடைக்காரர்கள் முழுமையாக ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். கடலூர் கோண்டூர் பகுதியில் இருந்து பண்ருட்டி வரை நடைபாதைகளில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இதனால் சிறுவர்கள், பெரியவர்கள் இந்த நடைபாதையில் நடந்து செல்ல முடியாமல் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே பொதுமக்கள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதிகளில் ஆய்வு செய்து, நடைபாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும், என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

தெருமுனைகளிலும் ஆக்கிரமிப்பு

கடலூர் கோண்டூர் முதல் பண்ருட்டி வரை உள்ள நெல்லிக்குப்பம், மேல்பட்டாம்பாக்கம் ஆகிய பகுதியில் தெருமுனைகளில் உள்ள கடைக்காரர்கள் சாலையை ஆக்கிரமித்து கடைகளை வைத்துள்ளனர். இதனால் நெரிசல் மிகுந்த காலை மற்றும் மாலை நேரங்களில் வாகனங்கள் தெருக்களில் திரும்பும்போது, கடைக்காரர்களின் ஆக்கிரமிப்புகளால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது.

மேலும் தெருமுனைகளில் இருசக்கர வாகன ஓட்டிகள் சாலையிலேயே வாகனங்களை நிறுத்துவதால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. தெருமுனைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மாலை நேரங்களில் இப்பகுதிகளில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும், என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

The post கோண்டூர்-பண்ருட்டி வரையில் உள்ள நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Kondur-Panrutti ,Cuddalore ,Chennai-Kanyakumari road ,
× RELATED கடலூர் மாவட்டத்தில் 3 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை