×

தூத்துக்குடியில் சாலையில் சுற்றி திரிந்த 27 மாடுகள் பிடிபட்டன

தூத்துக்குடி : தூத்துக்குடி மாநகராட்சி கமிஷனர் தினேஷ்குமார் உத்தரவுப்படி மாநகர சாலையில் விபத்து ஏற்படுத்தும் விதமாக சுற்றித் திரிந்த 27 மாடுகளை மாநகராட்சி பணியாளர்கள் பிடித்து கோசாலையில் ஒப்படைத்தனர். தூத்துக்குடி மாநகரின் முக்கிய சாலைகள் மற்றும் போக்குவரத்து அதிகமுள்ள தெருக்களில் தற்போது கால்நடைகள் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதோடு, விபத்துகளும் அதிகரித்து வருகிறது. இதனால் சில சமயங்களில் உயிர்பலிகளும் ஏற்படுவதால், வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் சாலைகளில் பயணம் செய்ய அச்சப்படும் நிலை உள்ளது. எனவே இதற்கு மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்குமாறு பல்வேறு கட்சியினர், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் கோரிக்கை வைத்தனர்.

இதையடுத்து தூத்துக்குடி மாநகர சாலைகளில் விபத்து ஏற்படுத்தும் விதமாக சுற்றித் திரியும் கால்நடைகளை பிடிக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். அதன்படி தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் பொதுமக்களுக்கும் போக்குவரத்திற்கும் இடையூறு விளைவிக்கும் வகையில் சுற்றி திரிந்த 18 மாடுகள், 9 கன்றுக்குட்டிகள் மாநகராட்சி சார்பில் பிடிக்கப்பட்டு அரசின் அங்கீகாரம் பெற்ற கோசாலையில் தற்போது ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மேலும் மாநகர பகுதிகளில் பொதுமக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் சுற்றி திரியும் கால்நடைகள் பிடிக்கப்படும் நிகழ்வானது தொடர்ச்சியாக நடைபெற உள்ளது. எனவே கால்நடைகளை வளர்ப்போர் முறையாக அதற்கான கொட்டில் அமைத்து வளர்க்க வேண்டும். தவறும் நிலையில் பிடிக்கப்படும் கால்நடைகள் மாநகராட்சியால் பறிமுதல் செய்யப்பட்டு உரிமையாளர்கள் மீது சட்ட ரீதியான குற்றவியல் வழக்கு பதிவு செய்யப்படும் என்று மாநகராட்சி கமிஷனர் தினேஷ்குமார் கால்நடைகளை சாலையில் சுற்றித் திரிய விடுபவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

The post தூத்துக்குடியில் சாலையில் சுற்றி திரிந்த 27 மாடுகள் பிடிபட்டன appeared first on Dinakaran.

Tags : Thoothukudi ,Thoothukudi Corporation ,Dinesh Kumar ,Gosala ,Dinakaran ,
× RELATED இன்ஸ்டாகிராமில் பல ஆண்களுடன் தொடர்பு;...