×

நரிக்குடி அருகே சேதமடைந்த மேல்நிலை குடிநீர் தொட்டியை அகற்ற மக்கள் கோரிக்கை

திருச்சுழி, பிப். 5: திருச்சுழி அருகே சேதமடைந்து இடியும் நிலையில் உள்ள மேல்நிலை தொட்டியை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருச்சுழி அருகே உள்ள ரெகுநாதமடை ஊராட்சிக்குட்பட்டது எஸ். மீனாட்சிபுரம், நெல்லிக்குளம். இக்கிராமத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இக்கிராமத்திற்கு குடிநீர் தேவைக்காக அகத்திக்குளம் பகுதியில் போர்வெல் அமைக்கப்பட்டு பைப்லைன் மூலமாக எஸ்.மீனாட்சிபுரம் கிராமத்தில் நாடக மேடை பகுதியில் உள்ள மேல்நிலை தொட்டியில் ஏற்றப்பட்டு பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது.

இந்நிலையில் நீர்தேக்கத் தொட்டியின் அடித்தளம் மிகவும் மோசமாக சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. மேலும் இக்குடிநீர் தொட்டியின் அருகில் குழந்தைகள் விளையாடுவதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இந்த நிலையில் மாவட்ட நிர்வாகம் இதில் கவனம் செலுத்தி இடியும் நிலையில் உள்ள மேல்நிலை நீர்தேக்கத் தொட்டியை அகற்றி புதிய நீர்தேக்கத் தொட்டி அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த லெட்சுமணன் கூறுகையில்,‘‘அந்த மேல்நிலை குடிநீர் தொட்டி 25 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்டது. தற்போது இடியும் நிலையில் உள்ளதால் அதனை அகற்றிவிட்டு புதிய மேல்நிலைத்தொட்டி கட்டித் தர வேண்டும் என அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்துள்ளோம். விபத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ள மேல்நிலைத்தொட்டியை விரைவில் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

The post நரிக்குடி அருகே சேதமடைந்த மேல்நிலை குடிநீர் தொட்டியை அகற்ற மக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Narikudi ,Thiruchuzhi ,Regunathamadai Panchayat ,Thiruchuzhi S. Meenakshipuram, Nellikulam ,
× RELATED நரிக்குடி அருகே தொழிலாளியை அரிவாளால்...