×

உரிமம் பெற்ற விற்பனை நிலையங்களில் மட்டுமே விதை வாங்க வேண்டும்: விவசாயிகளுக்கு வேளாண் துறை அறிவுறுத்தல்

 

தேனி, பிப்.5: உரிமம் பெற்ற விதை விற்பனை நிலையங்களில் மட்டுமே விவசாயிகள் விதைகள் வாங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. வேளாண்துறை அலுவலகம் சார்பில் தெரிவித்துள்ளதாவது: மாவட்டத்தில் நெல் அறுவடையை தொடர்ந்து உளுந்து, பச்சைப்பயறு, பருத்தி, எள், காய்கறி சாகுபடிக்கு விவசாயிகள் தயாராகி வருகின்றனர். மேற்கண்ட பயிர்களுக்கு உரிமம் பெற்ற விதை விற்பனை நிலையங்களில் மட்டுமே விதைகளை வாங்க வேண்டும்.

அவ்வாறு வாங்கும் போது விற்பனை பட்டியலை பெற வேண்டும். பட்டியலில் பயிர், ரகம், குவியல் எண், காலாவதி நாள் குறிப்பிடப்பட்டுள்ளதா என பார்க்க வேண்டும். விற்பனை பட்டியல் இல்லாமலும், விதை விவர அட்டை இல்லாமலும் விற்பனை செய்யப்படும் விதைகளை விவசாயிகள் வாங்க வேண்டாம். தனி நபர்பகளிடமோ, வியாபாரிகளிடமோ விதைகளை வாங்க கூடாது. விதைகளை விதைப்பதற்கு முன் மண்ணில் போதுமான ஈரப்பதம் இருப்பதை உறுதி செய்த பிறகே விதைக்க வேண்டும்.

மாவட்டத்தில் விதை விற்பனையாளர்கள் விதைகளை விற்கும் போது விவர அட்டையில் 14 காரணிகள் குறிப்பிடப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும். ஆதார விதை மற்றும் சான்று பெற்ற விதைகளை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். விதைச்சான்று மற்றும் அங்கக சான்றளிப்பு துறையில் பதிவு செய்யப்பட்ட ரகங்களை பணி விதை மாதிரி சோதணை முடிவறிக்கை பெற்ற பின்னரே விற்பனை செய்ய வேண்டும். விதை உரிமம் இல்லாமல் அல்லது காலாவதியான உரிமத்துடன் விதைகள் விற்பனை மற்றும் தரமற்ற விதைகள் விற்பனை செய்வோர் மீது விதைகள் சட்டம் 1966ன் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post உரிமம் பெற்ற விற்பனை நிலையங்களில் மட்டுமே விதை வாங்க வேண்டும்: விவசாயிகளுக்கு வேளாண் துறை அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Theni ,Department of Agriculture Office ,
× RELATED தேனியில் இலவச மருத்துவ முகாம்