வாடிப்பட்டி, பிப். 5: மதுரை மாவட்டம் சமயநல்லூர் அருகே ஓய்வு பெற்ற அரசு அதிகாரி வீட்டில் 32 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மதுரை மாவட்டம் சமயநல்லூர் அருகேயுள்ள பரவை அவுளி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (69). இவர் தமிழ்நாடு அக்ரோ நிறுவனத்தில் மாவட்ட மேலாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். கோவிந்தராஜ் நேற்று முன்தினம் மாலை வீட்டை பூட்டி விட்டு அரசரடியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளார்.
அன்று இரவு அரசரடியில் தங்கி விட்டு நேற்று வீட்டிற்கு வந்த போது முன்புறமுள்ள கிரில் கேட்டு திறந்திருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின் உள்ளே சென்று பார்த்த போது கதவு உடைக்கப்பட்டு படுக்கை அறையில் பீரோவில் இருந்த தங்க செயின்கள், தோடு, மோதிரம், வளையல்கள், சிறிய பெரிய டாலருடன் கூடிய தங்க செயின்கள் உள்ளிட்ட 32 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. அதன் மதிப்பு ரூ.9 லட்சத்து 67 ஆயிரத்து 500 ஆகும். இதுகுறித்து கோவிந்தராஜ் கொடுத்த புகாரின் பேரில் சமயநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன், சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
The post சமயநல்லூர் அருகே ஓய்வு பெற்ற அதிகாரி வீட்டில் 32 பவுன் கொள்ளை appeared first on Dinakaran.