×

பாண்டூரில் நடைபெற்ற வேலை வாய்ப்பு முகாமில் 1000 பேருக்கு மஞ்சப்பை: மாசுக்கட்டுப்பாடு வாரியம் வழங்கியது

 

திருவள்ளூர், பிப். 5: சட்டசபையில் ‘பிளாஸ்டிக்கு களுக்கு எதிரான மக்கள் பிரச்சாரம்’ செயல்படுத்தப்பட வேண்டும் என்றும், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மூலம் ஒவ்வொரு மாவட்டத்திலும் பங்குதாரர்களை அழைத்து இது குறித்து பொதுமக்களிடையே பிரசாரம் தொடங்கப்படும் என்றும் அறிவித்தது. இதற்கிடையில் தமிழ்நாடு முதலமைச்சர் கடந்த 23.12.2021 அன்று சென்னை கலைவாணர் அரங்கில் ‘மீண்டும் மஞ்சப்பை’ என்ற மக்கள் பிரச்சாரத்தை தொடங்கி வைத்தார்.

மாநிலம் முழுவதும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மாவட்ட அளவில் ‘மீண்டும் மஞ்சப்பை’ பிரச்சாரத்தை அந்தந்த மாவட்ட அமைச்சர்கள், மாவட்ட கலெக்டர் தலைமையில் உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் பல்வேறு அமைப்புகளுடன் நடத்த மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இதனையடுத்து திருவள்ளூர் மாவட்டத்தில் ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பைகள் நடமாட்டத்தை குறைக்க நகராட்சி, பேரூராட்சி, மாநகராட்சி அதிகாரிகள் கடை, கடையாக சென்று பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்து அபராதமும் விதித்து வருகின்றனர்.

இதனால் பொது மக்கள் வீட்டிலிருந்தே மஞ்சப் பையை கொண்டு வந்து பொருட்களை வாங்கி செல்லும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் திருவள்ளூர் அடுத்த பாண்டூரில் உள்ள இந்திரா மருத்துவக் கல்லூரியில் மாபெரும் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் த.பிரபுசங்கர் உத்தரவின் பேரில் முகாமில் கலந்து கொண்ட வேலை நாடுநர்கள், தொழிற்சாலை நிர்வாகத்தினர் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் சார்பில் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ப.ரவிச்சந்திரன் ஏற்பாட்டில் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை ஒழிக்கும் வகையில் மீண்டும் மஞ்சப்பை என்கிற திட்டத்தின் அடிப்படையில் 1000 மஞ்சப்பைகளை வழங்கப்பட்டது.

மேலும் ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கான தடை மற்றும் மாற்றுப்பொருட்கள் குறித்த விழிப்புணர்வு பிரசுரங்கள் மற்றும் சுற்றுச்சூழலுக்கான வாழ்க்கை முறை குறித்த விழிப்புணர்வு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டது. இதில் உதவி செயற்பொறியாளர் மணிமேகலை, உதவி பொறியாளர்கள் சபரிநாதன், ஸ்ரீலேகா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post பாண்டூரில் நடைபெற்ற வேலை வாய்ப்பு முகாமில் 1000 பேருக்கு மஞ்சப்பை: மாசுக்கட்டுப்பாடு வாரியம் வழங்கியது appeared first on Dinakaran.

Tags : Pollution Control Board ,Pandur ,Thiruvallur ,Tamil Nadu Pollution Control Board ,Tamil Nadu… ,Manjapai ,Dinakaran ,
× RELATED திருமங்கலத்தில் தேர்தல்...