×

குன்றத்தூர், மாங்காடு பகுதிகளில் கடும் பனி மூட்டத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

 

குன்றத்தூர், பிப்.5: குன்றத்தூர், மாங்காடு பகுதிகளில் காலை வெகுநேரம் வரை நீடிக்கும் பனி மூட்டத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.  காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர், மாங்காடு ஆகிய பகுதிகளில் பருவநிலை மாற்றத்தால் காலை வெகுநேரமாகியும் கூட, கடும் பனி மூட்டமாகவே காணப்படுகிறது. இதில், வழக்கமாக தினமும் காலை 6 மணிக்கே சூரியன் உதித்து, நன்றாக பகல் பொழுது விடியும் நிலையில், தற்போது காலை 7 மணி வரையிலும் இந்த பனி மூட்டம் நீடித்து வருகிறது.

இதனால், சாலைகளில் செல்லும் இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் அனைத்தும் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடியே செல்லுகின்றன. இவ்வாறு பனி மூட்டம் மட்டுமின்றி, அதோடு சேர்ந்து கடும் குளிரும் நிலவுவதால், காலை வேளைகளில் தெருக்கள் மற்றும் சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைந்த அளவே காணப்படுகிறது. இந்த பருவநிலை கால மாற்றத்திற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டநிலையில், கடந்த டிசம்பர் மாதம் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட கனமழையே முக்கிய காரணமாக கருதப்படுகிறது.

மேலும், வழக்கமாக மார்கழி மாதத்தில் தான் பனிமூட்டத்துடன் கடும்குளிர் நிலவுவது வழக்கம். ஆனால், தற்போது தை மாதமே நிறைவடையப்போகும் நிலையிலும் கடும் பனி மூட்டத்துடன், குளிர் வாட்டி வதைக்கிறது. இதனால் தினமும் அதிகாலையில் வேலைக்குச் செல்வோரின் இயல்பு வாழ்க்கை பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. இதில், குறிப்பாக பள்ளி செல்லும் குழந்தைகள் தினமும் சோம்பலுடன் தான் செல்லும் நிலை உள்ளது. இது போன்ற காலநிலை மாற்றத்திற்கு மிக முக்கிய காரணமாக விவசாயம் குறைந்து, மரங்களை அழிப்பதாலேயே என சூழலியல் ஆய்வாளர்கள் கூறி வருகின்றனர்.

தற்போது எந்த அளவிற்கு பனி மூட்டமும், குளிரும் மக்களை வாட்டி வதைக்கிறதோ, அதே அளவிற்கு வரும் கோடை காலத்தில் கடும் வெப்பமான சூழ்நிலை நிலவி, தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படவும் வாய்ப்பு உள்ளது என்றும் கூறி வருகின்றனர். இதற்கெல்லாம் சரியான தீர்வு மரம் வளர்ப்பது ஒன்றே. அதனால் மரங்கள் வளர்ப்பதன் அவசியம் குறித்தும், அதனால் இயற்கைக்கு ஏற்படும் நன்மைகள் குறித்தும் நம் இளம் தலைமுறைகளான வளரும் குழந்தைகளுக்கு பள்ளிப் பருவத்திலேயே எடுத்துரைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

The post குன்றத்தூர், மாங்காடு பகுதிகளில் கடும் பனி மூட்டத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு appeared first on Dinakaran.

Tags : Kunradthur ,Mangadu ,Kanchipuram district ,
× RELATED கடன் பிரச்னை காரணமாக டிராவல்ஸ் அதிபர் தூக்கிட்டு தற்கொலை