பலியா: உத்தரப்பிரதேசத்தில் முதல்வர் திருமண திட்டத்தில் திருமணம் செய்து கொண்ட 537 ஜோடிகளில் 240 பேர் போலி என்கிற தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் சமூக நலத்துறை சார்பில் முதல்வர் கூட்டு திருமண திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதில் திருமணம் செய்து கொள்ளும் பெண்களுக்கு ரூ.35,000 நிதி உதவி, ரூ.10,000க்கு சீர் வரிசை பொருட்கள், திருமண செலவுக்கு ரூ.6,000 என மொத்தம் ரூ.51 ஆயிரம் வழங்கப்படும். இந்நிலையில், கடந்த மாதம் 25ம் தேதி பல்லியா பகுதியில் 537 ஜோடிகளுக்கு கூட்டு திருமணம் நடந்தது. அப்போது சில பெண்கள் தங்களுக்கு தாங்களே மாலை மாற்றி திருமணம் செய்து கொண்ட வீடியோ காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்தின. மணமகன் ஒருவர் தனக்கு ரூ.2000 தருவதாக புரோக்கர் ஒருவர் அழைத்து வந்ததாகவும், இன்னும் பணம் தராமல் உள்ளார் என்றும் மீடியாக்களுக்கு பேட்டி அளித்தார்.
இதில் ஏற்கனவே சமீபத்தில் திருமணமான பல பெண்கள், ஆண்கள் பங்கேற்று நிதி உதவி பெற மீண்டும் திருமணம் செய்த ஆதாரங்களும் மீடியாக்கள் வெளியிட்டன. இந்த கூட்டு திருமணத்தில் மொத்தம் 240 ஜோடிகள் போலியானவை என கண்டறியப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து உபி அரசு கடும் நடவடிக்கை எடுக்கத் தொடங்கி உள்ளது. 20 தனிப்படை அமைக்கப்பட்டு ஒவ்வொரு திருமண ஜோடியின் வீட்டுக்கு நேரடியாக சென்று விசாரிக்கின்றனர். முறைகேட்டில் ஈடுபட்ட சமூக நலத்துறை அதிகாரிகள், புரோக்கர்கள் உட்பட 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து இனி தவறு நடக்காமல் இருக்க ஆதார் மூலம் மணப்பெண் சரிபார்ப்பு பணிகளை நடத்தவும், திருமணம் முடிந்ததும் ஜோடிகளுக்கு திருமண சான்றிதழ் வழங்கவும் உபி அரசு முடிவெடுத்துள்ளதாக சமூக நலத்துறை அமைச்சர் அசிம் அருண் நேற்று கூறி உள்ளார். மேலும், இந்த விழாவில் பங்கேற்றவர்களுக்கு திருமண நிதி உதவி வழங்கப்படுவது உடனடியாக நிறுத்தப்பட்டுள்ளது.
The post உபியில் நடந்த முறைகேடு அம்பலம் கூட்டு திருமணத்தில் 240 போலி ஜோடிகள்: மணமகன் இல்லாமல் மணப்பெண்களே மாலை மாற்றிக் கொண்டனர் appeared first on Dinakaran.