புதுடெல்லி: ஒவ்வொரு சட்டப்பேரவை தேர்தல்களின் போதும் வருமான வரித்துறையால் பறிமுதல் செய்யப்படும் பணம் தொடர்ந்து அதிகரித்து வருவதாக மத்திய நேரடி வரிகள் வாரிய தலைவர் நிதின் குப்தா கூறி உள்ளார். மத்திய நேரடி வரிகள் வாரிய தலைவர் நிதின் குப்தா அளித்த பேட்டியில், ‘‘சட்டப்பேரவை தேர்தல்களைப் பொறுத்த வரையில், 5 ஆண்டுகளுக்கு முன்பு தேர்தல் நடந்த போது பறிமுதல் செய்யப்பட்ட ரொக்கப்பணத்தை விட தற்போது பல மடங்கு அதிகளவில் கணக்கில் வராத பணம் பறிமுதல் ஆகிறது. ஒவ்வொரு சட்டப்பேரவை தேர்தலிலும் இதன் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது’’ என்றார். ஏற்கனவே இதே விஷயத்தை தேர்தல் ஆணையும் குறிப்பிட்டு கூறியுள்ளது.
கடந்த ஆண்டு நவம்பரில் தேர்தல் ஆணையம் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில், மிசோரம், மத்தியப் பிரதேசம், சட்டீஸ்கர், ராஜஸ்தான் மற்றும் தெலங்கானா ஆகிய 5 மாநிலங்களில் நடந்த தேர்தல்களின் போது ரொக்கம், நகைகள், போதைப்பொருள்கள், மதுபானம் உட்பட ரூ.1,760 கோடி மதிப்பிலான இலவசங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுவே இந்த 5 மாநிலங்களில் 2018ல் நடந்த தேர்தலின் போது பறிமுதல் செய்யப்பட்ட மதிப்பை (ரூ.239.15 கோடி) விட 7 மடங்கு அதிகம். 2023ம் ஆண்டு நடந்த அனைத்து சட்டப்பேரவை தேர்தலின்போதும் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தின் மதிப்பு, 2018ம் ஆண்டில் பறிமுதல் செய்யப்பட்டதை விட 2 மடங்கு அதிகமாக இருந்தது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 2017ல் பறிமுதல் செய்யப்பட்டதை விட 2022ல் 6 மடங்கு அதிக ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
The post ஒவ்வொரு தேர்தலின் போதும் பணம் பறிமுதல் அதிகரிப்பு: மத்திய நேரடி வரிகள் வாரியம் தகவல் appeared first on Dinakaran.