×

சதம் விளாசினார் கில் இங்கிலாந்துக்கு 399 ரன் இலக்கு: பரபரப்பான கட்டத்தில் 2வது டெஸ்ட்

விசாகப்பட்டினம்: இந்திய அணியுடனான 2வது டெஸ்டில், 399 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2வது இன்னிங்சை விளையாடும் இங்கிலாந்து 3ம் நாள் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 67 ரன் எடுத்துள்ளது. ஒய்.எஸ்.ஆர் ஸ்டேடியத்தில் நடந்து வரும் இப்போட்டியின் முதல் இன்னிங்சில் இந்தியா 396 ரன், இங்கிலாந்து 253 ரன் எடுத்து ஆட்டமிழந்தன. 143 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை தொடங்கிய இந்தியா, 2ம் நாள் ஆட்ட முடிவில் விக்கெட் இழப்பின்றி 28 ரன் எடுத்திருந்தது. ஜெய்ஸ்வால் 15, ரோகித் 13 ரன்னுடன் நேற்று 3வது நாள் ஆட்டத்தை ஆரம்பித்தனர். ரோகித் மேற்கொண்டு ரன் எடுக்காமலும், ஜெய்ஸ்வால் 2 ரன் மட்டுமே சேர்த்தும் (17 ரன்) ஆண்டர்சன் வேகத்தில் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, இந்தியா பின்னடைவை சந்தித்தது. இந்த நிலையில், ஷுப்மன் கில் – ஷ்ரேயாஸ் இணைந்து 3வது விக்கெட்டுக்கு 81 ரன் சேர்த்தனர். ஷ்ரேயாஸ் 29 ரன்னில் வெளியேற, அடுத்து வந்த ரஜத் பத்திதார் 9 ரன்னில் ஆட்டமிழந்தார்.

அக்சர் படேல் பொறுப்புடன் கம்பெனி கொடுக்க, உறுதியுடன் விளையாடிய கில் சதம் விளாசி அசத்தினார். கில் 104 ரன் (147 பந்து, 11 பவுண்டரி, 2 சிக்சர்), அக்சர் 45 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினர். அடுத்து வந்த வீரர்களில் ஓரளவு தாக்குப்பிடித்த அஷ்வின் 29 ரன் எடுத்தார். பாரத் 6 ரன் எடுக்க, குல்தீப் மற்றும் பும்ரா டக் அவுட்டாகினர். இந்தியா 2வது இன்னிங்சில் 255 ரன்னுக்கு ஆல் அவுட்டானது (78.3 ஓவர்). முகேஷ் (0) ஆட்டமிழக்காமல் இருந்தார். இங்கிலாந்து பந்துவீச்சில் ஹார்ட்லி 4, ரெஹான் 3, ஆண்டர்சன் 2, பஷிர் 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 399 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2வது இன்னிங்சி தொடங்கிய இங்கிலாந்து, 3ம் நாள் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 67 ரன் எடுத்துள்ளது (14 ஓவர்). டக்கெட் 28 ரன் எடுத்து அஷ்வின் சுழலில் பாரத் வசம் பிடிபட்டார். கிராவ்லி 29 ரன், ரெஹான் 9 ரன்னுடன் களத்தில் உள்ளனர். கை வசம் 9 விக்கெட் இருக்க, இங்கிலாந்து வெற்றிக்கு இன்னும் 332 ரன் தேவை என்ற பரபரப்பான நிலையில் இன்று 4வது நாள் ஆட்டம் நடக்கிறது.

 

The post சதம் விளாசினார் கில் இங்கிலாந்துக்கு 399 ரன் இலக்கு: பரபரப்பான கட்டத்தில் 2வது டெஸ்ட் appeared first on Dinakaran.

Tags : Gill ,England ,Visakhapatnam ,Indian ,YSR Stadium ,Dinakaran ,
× RELATED தோல்வியை சந்தித்தது வருத்தம்...