×

2023ம் ஆண்டு குற்றங்களுக்கு எதிரான நடவடிக்கை எதிரொலி; சென்னையில் 3,337 சவரன் தங்கம், 50 கிலோ வெள்ளி, ரூ. 3.60 கோடி பணம் பறிமுதல்: மத்திய குற்றப்பிரிவில் ரூ. 265 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் மீட்பு

சென்னை: சென்னை மாநகர காவல்துறையில் குற்றங்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கை காரணமாக 2023ல் 3,337 சவரன் தங்கம், 50 கிலோ வெள்ளி, ரூ.3.60 கோடி பணம் மற்றும் மத்திய குற்றப்பிரிவில் ரூ.265 கோடி மதிப்பிலான சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளதாக கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி சென்னை மாநகர காவல் எல்லையில் கொலை, கொலை முயற்சி, கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்டவை கட்டுப்படுத்தவும், திருட்டு, வழிப்பறி போன்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கைகளை போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் எடுத்து வருகிறார். அந்த வகையில் கடந்த 2023ல் திருட்டு, விழிப்பறி உள்ளிட்ட வழக்குகளில் மீட்கப்பட்ட நகைகள் மற்றும் பொருட்களை உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் நேற்று முன்தினம் நடந்தது. போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் கலந்து கொண்டு மீட்கப்பட்ட நகைகள் மற்றும் சொத்துக்களை உரியவர்களிடம் ஒப்படைத்தார். இந்நிகழ்ச்சியில் சென்னை மாநகர கூடுதல் கமிஷனர்கள் பிரேம் ஆனந்த் சின்கா, அஸ்ரா கார்க், தலைமையிட கூடுதல் கமிஷனர் கபில் குமார் சரத்கர், மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் செந்தில் குமாரி, இணை கமிஷனர்கள், துணை கமிஷனர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

பின்னர்போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் கூறியதாவது: சென்னை மாநகர காவல்துறை எடுத்த நடவடிக்கை காரணமாக கடந்த 2023ல் 12 காவல் மாவட்டங்களில் குற்றங்கள் குறைந்து, நாட்டின் பாதுகாப்பான நகரங்கள் பட்டியலில் சென்னை முதலிடம் பிடித்துள்ளது. அதற்கு உதாரணமாக சென்னையில் 2023ல் 3 ஆதாய கொலைகள், 276 வழிப்பறிகள், 17 திருட்டு, 17 செயின் பறிப்பு, 371 செல்போன் பறிப்பு சம்பவங்கள் மட்டுமே நடந்துள்ளது. இது கடந்து ஆண்டுகளை ஒப்பிட்டு பார்க்கும் போது மிகவும் குறைவு. சென்னையில் கொலை உள்ளிட்ட வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடிகள் உட்பட 70 ரவுடிகள் மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களுக்கு எதிரான நடவடிக்கை மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்ட 78 பேர் என மொத்தம் 2,748 குற்றவாளிகளுக்கு 2023ல் நீதிமன்றத்தால் சிறை தண்டனை பெற்று தரப்பட்டுள்ளது. ரவுடிகளுக்கு எதிரான நடவடிக்கை: பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் செயல்பட்ட ரவுடிகளை பிடிக்க ‘ரவுடிகளுக்கு எதிரான நடவடிக்கை’ என்ற பெயரில் 2023ல் தாதாக்கள், பிரபல ரவுடிகள் என மாநகரில் 1,072 ரவுடிகள் கைது ெசய்யப்பட்டனர். அவர்களில் குறிப்பாக ஏ பிளஸ் கேட்டகிரியில் உள்ள பிரபல ரவுடி சகாயம்(எ)தேவசகாயம், ராபின், ரோஹித் ராஜ் மற்றும் பி பிளஸ் கேட்டகிரியில் உள்ள மணி(எ)நாய் மணிகண்டன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் 346 ரவுடிகள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குற்றங்களுக்கு எதிரான நடவடிக்கை: வீடு உடைத்து திருட்டில் ஈடுபட்டதாக 335 குற்றவாளிகள், வாகன திருட்டில் ஈடுபட்டதாக 450 பேர் என மொத்தம் 1,109 குற்றவாளிகள் கடந்த ஆண்டில் கைது செய்யப்பட்டள்ளனர். 192 திருட்டு வழக்கு குற்றவாளிகள் மீது நன்னடத்தை பிணை ஆவணம் பெறப்பட்டுள்ளது. பிணை பத்திரம் மீறியதாக 33 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 2023ல் சென்னையில் ஜி-20 மாநாடு, ஹீரோ ஆசிய சாம்பியன்ஸ் டிராபி சென்னை-2023 போட்டி, இந்திய குடியரசு தலைவர் சென்னை வருகை, சர்வதேச கலைஞர் நினைவு மாரத்தான் போட்டி, ஐபிஎஸ் கிரிக்கெட் போட்டி, பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி தேவாலய திருவிழா, திருப்பதி திருக்குடை ஊர்வலம், விநாயகர் சதுர்த்தி ஊர்வலம், தேவர் ஜெயந்தி, ஐசிசி ஆண்கள் உலக கோப்பை, புத்தாண்டு கொண்டாட்டம் ஆகிய நாட்களில் சிறப்பான நடவடிக்கை காரணமாக அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டது. போதை பொருட்களுக்கு எதிராக எடுத்த சநடவடிக்கை காரணமாக 2023ல் 2,659 கிலோ கஞ்சா, 11.4 கிலோ மெத்தம்பெட்டமைன், 104.8 கிலோ கஞ்சா சாக்லேட்கள் பறிமுதல் செய்யப்பட்டது மொத்தம் 3,582 கிலோ போதை பொருட்கள் நீதிமன்ற உத்தரவுப்படி அழிக்கப்பட்டது. 894 கஞ்சா உள்ளிட்ட போதை பொருள் குற்றவாளிகளின் வங்கி கணக்குகள்ளில் இருந்த ரூ.43,37,482 ரொக்கம் முடிக்கப்பட்டுள்ளது.

சாலை விபத்துக்களில் இறப்பு விகிதம் குறைவு: சென்னையில் அதிகளவில் விபத்துக்கள் நடக்கும் 104 இடங்கள் புவிவியல் தகவல் அமைப்புகள் மூலம் அடையானம் கணப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது. அண்ணாசாலை, நந்தனம், சிபிடி சந்திப்பு, அடையாறு ஆகிய இடங்களில் போக்குவரத்து மாற்றம் மூலம் ஒரு விழி பாதையாக மாற்றப்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் 300 முக்கிய சந்திப்புகளில் கூகுல் எச்சரிக்கை அமைப்பு தொடங்கப்பட்டது. சாலை விபத்துக்களில் உயிரிழப்பு தவிர்க்க பைக் ஓட்டும் நபர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய தனி கவனம் செலுத்தப்பட்டது. இதன் மூலம் சென்னையில் சாலை விபத்துக்களில் இறப்பு விகிதம் குறைக்கப்பட்டது.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக பாலியல் குற்றங்களில் ஈடுபட்டதாக 21 வழக்குகள், கணவர் மற்றும் அவரது உறவினர்களால் கொடுமை தொடர்பாக 86 வழக்குகள், கடத்தல் தொடர்பாக 4 வழக்குகள் என 2023ல் மற்ற ஆண்டுகளை காட்டிலும் மிக குறைவாக 111 வழக்குகள் மட்டும் பதிவு செய்து குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை மாநகர காவல்துறையில் உள்ள 12 காவல் மாவட்டங்களில் 2023ல் திருட்டு, பைக் திருட்டு, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட வழக்குகளில் விரைந்து நடவடிக்கை எடுத்து ரூ.19.21 கோடி மதிப்புள்ள 3,337.41 சவரன் தங்க நகைகள், 50.53 கிலோ வெள்ளி, ரூ.3,60,73,051 ரொக்க பணம், 798 செல்போன்கள், 411 பைக்குகள், 28 ஆட்டோக்கள், 15 இலகுரக வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், மத்திய குற்றப்பிரிவில் 811 வழக்குகளில் ரூ.265 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளது. 2023ல் எடுத்த சிறப்பான நடவடிக்கை போன்று 2024ல் அதை விட சிறப்பாக செயல்பட்டு சென்னை மாநகரில் குற்றங்களை முற்றிலும் கட்டுப்படுத்தும் வகையில் மாநகர காவல்துறை சிறப்பாக செயல்படும். இவ்வாறு போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் தெரிவித்துள்ளார்.

 

The post 2023ம் ஆண்டு குற்றங்களுக்கு எதிரான நடவடிக்கை எதிரொலி; சென்னையில் 3,337 சவரன் தங்கம், 50 கிலோ வெள்ளி, ரூ. 3.60 கோடி பணம் பறிமுதல்: மத்திய குற்றப்பிரிவில் ரூ. 265 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் மீட்பு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Central Crime Branch ,Commissioner ,Sandeep Roy ,Chennai Metropolitan Police ,Dinakaran ,
× RELATED மத்திய குற்றப்பிரிவு ஆய்வாளருக்கு பிடிவாரண்ட்