×

கொங்கு மண்டலத்தில் ஜவுளித்தொழில் நலிவடைய ஒன்றிய அரசே காரணம்: மாநாட்டில் ஈஸ்வரன் எம்எல்ஏ குற்றச்சாட்டு

ஈரோடு: கொங்கு மண்டலத்தில் ஜவுளித்தொழில் நலிவடைந்ததற்கு ஒன்றிய அரசின் தவறான கொள்கையே காரணம் என்று பெருந்துறையில் நடைபெற்ற மாநாட்டில் ஈஸ்வரன் எம்எல்ஏ குற்றம் சாட்டினார். கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி மற்றும் கொங்கு வேளாள கவுண்டர்கள் பேரவை சார்பில் பெருந்துறை அடுத்துள்ள விஜயமங்கலம் சரளையில் மாநில மாநாடு நேற்று நடைபெற்றது. மங்கள இசையுடன் மாநாட்டு கொடியினை பொதுச்செயலாளர் ஈஸ்வரன் எம்எல்ஏ ஏற்றி வைத்தார். இதைத்தொடர்ந்து மாநாட்டு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அதில், கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் எம்எல்ஏ தலைமை தாங்கி பேசியதாவது: அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, சிபிஐ என எந்த நெருக்கடியும் இல்லாமல் தாமாக இந்த மாநாட்டிற்கு இவ்வளவு கூட்டம் வந்துள்ளது. இன்றைக்கு வேளாண் தொழில் மிகவும் மோசமடைந்து விட்டது. மரவள்ளி, கரும்பு போன்றவற்றில் இருந்து எத்தனால் தயாரிக்க வேண்டும். கொங்கு மண்டலத்தில் ஜவுளி, லாரி, ரிக் போன்ற அனைத்து தொழில்களும் மோசமடைந்துவிட்டது. கொங்கு மண்டத்தில் ஜவுளி தொழில் நசிவடைந்ததற்கு காரணம் ஒன்றிய அரசின் தவறான ஜவுளி கொள்கைதான்.

பெருந்துறை சிப்காட் வளாகத்தில் உள்ள சாய ஆலைகளில் இருந்து வெளியேறும் கழிவு நீரால் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டுள்ளது. பெருந்துறை பகுதியில் எய்ம்ஸ் மருத்துவமனை கொண்டு வர ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. கொங்கு மண்டலத்தில் புற்றுநோய் தாக்கத்தை குறைக்க ஒன்றிய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். சேலம், கோவை, ஈரோடு ஆகிய மாவட்டங்களை பிரிக்க வேண்டும். தமிழ்நாடு கவர்னரின் நடவடிக்கையால் தமிழ்நாடு மாணவர்களின் எதிர்காலம் வீணாகி வருகின்றது. பல்கலைக்கழகத்தில் துணை வேந்தர் இல்லாததால் செனட் கூட்டம் நடத்த முடியாத நிலை உள்ளது. இவ்வாறு பேசினார். மாநாட்டில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், தமிழக வீட்டுவசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், நாமக்கல் எம்பி சின்ராஜ், ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ ஈவிகேஸ் இளங்கோவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 

The post கொங்கு மண்டலத்தில் ஜவுளித்தொழில் நலிவடைய ஒன்றிய அரசே காரணம்: மாநாட்டில் ஈஸ்வரன் எம்எல்ஏ குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : Union government ,Kongu region ,Iswaran ,MLA ,Erode ,Perundurai ,Iswaran MLA ,Kongunadu People's National Party ,Kongu Velala Counters Association ,Dinakaran ,
× RELATED 2ஜி தீர்ப்பில் தெளிவு தேவை என்ற...