×

நாடாளுமன்ற தேர்தல் சூடுபிடிக்கிறது திமுகவுடன் சிபிஎம், மதிமுக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை: சுமுகமாக இருந்ததாக நிர்வாகிகள் பேட்டி

சென்னை: நாடாளுமன்ற தேர்தலையொட்டி திமுக தனது கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளது. முதலில் காங்கிரசுடன் கடந்த 28ம் தேதி முதல்கட்ட பேச்சுவார்த்தை நடந்தது. தொடர்ந்து வருகிற 9ம் தேதி காங்கிரசுடன் திமுக 2ம் கட்ட பேச்சுவார்த்தை நடத்த உள்ளது. தொடர்ந்து வருகிற 13ம் தேதி காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே சென்னை வந்து முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசுகிறார். அப்போது இரு கட்சிகளுடனான தொகுதி பங்கீடு இறுதி செய்யப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

தொடர்ந்து திமுக-இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இடையிலான முதல் கட்ட பேச்சுவார்த்தை சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று முன்தினம் நடந்தது. இந்நிலையில் திமுக-மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இடையிலான முதல் கட்ட பேச்சுவார்த்தை சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று காலை நடந்தது. திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு தலைமையில் அமைச்சர்கள் கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், துணை பொது செயலாளர்கள் பொன்முடி, ஆ.ராசா, கொள்கை பரப்பு செயலாளர் திருச்சி சிவா ஆகியோர் அடங்கிய குழுவுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மத்தியக்குழு உறுப்பினர்கள் பி.சம்பத், பெ.சண்முகம், மாநில செயற்குழு உறுப்பினர்கள் என்.குணசேகரன், கனகராஜ் ஆகியோர் பேச்சு வார்த்தை நடத்தினர்.

பின்னர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், “திமுகவுடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சுமுகமான முறையில் நடந்தது. இரு தரப்பினரும் மனம் திறந்து கருத்துகளை பரிமாறிக்கொண்டோம். கடந்த தேர்தலைவிட இந்த முறை கூடுதல் தொகுதிகளை ஒதுக்க கோரிக்கை வைத்துள்ளோம்” என்றனர். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு மதுரை, கோயம்புத்தூர் ஆகிய 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து திமுக-மதிமுகவுடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடந்தது.

திமுக தொகுதி பங்கீட்டு குழுவுடன் மதிமுக அவைத் தலைவர் ஆடிட்டர் ஆ.அர்ஜூன ராஜ், பொருளாளர் செந்திலதிபன், அரசியல் ஆய்வு மைய செயலாளர் ஆவடி அந்திரிதாஸ், தேர்தல் பணிச் செயலாளர் வி.சேஷன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் அர்ஜூன ராஜ் அளித்த பேட்டியில், திமுகவிடம் 2 லோக்சபா, ஒரு ராஜ்ய சபா சீட்டை கேட்டுள்ளோம். எந்தெந்த தொகுதி என்பதை கட்சி தலைமை இறுதி செய்யும். இந்த முறை எங்களுடைய கட்சி சின்னத்தில் தான் போட்டியிடுவோம். இது பற்றிய கோரிக்கையை வைத்துள்ளோம்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை வந்த பிறகு அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை நடக்கும் என்றார். கடந்த முறை நாடாளுமன்ற தேர்தலில் மதிமுகவுக்கு ஈரோடு தொகுதி ஒதுக்கப்பட்டது. அங்கு கணேசமூர்த்தி திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டார். மேலும் வைகோவுக்கு மாநிலங்களவை எம்பி பதவியை திமுக ஒதுக்கியது. வரும் 12ம் தேதி விடுதலைச் சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியுடன் தொகுதிப் பங்கீடு குறித்து திமுக பேச்சுவார்த்தை நடத்துகிறது.

* கமல் கட்சியுடன் பேச்சுவார்த்தையா? அமைச்சர் ஐ.பெரியசாமி விளக்கம்
திமுக தொகுதி பங்கீடு குழுவில் இடம் பெற்றுள்ள அமைச்சர் ஐ.பெரியசாமி அளித்த பேட்டியில், “முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளிநாட்டில் இருந்து திரும்பியதும் கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்படும். கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியை பேச்சுவார்த்தைக்கு அழைப்பது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தான் முடிவெடுப்பார் என்றார்.

The post நாடாளுமன்ற தேர்தல் சூடுபிடிக்கிறது திமுகவுடன் சிபிஎம், மதிமுக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை: சுமுகமாக இருந்ததாக நிர்வாகிகள் பேட்டி appeared first on Dinakaran.

Tags : CPM ,MDMK ,DMK ,Chennai ,Congress ,Dinakaran ,
× RELATED தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி