×

மக்களுடன் முதல்வர் திட்டம் மூலம் 35 ஆண்டுகளுக்கும் மேலாக முடியாத பட்டா மாற்றம் 3 நாளில் முடித்து வைப்பு: தமிழ்நாடு அரசுக்கு விவசாயி சந்திரசேகரன் நன்றி

சென்னை: 35 ஆண்டுகளுக்கும் மேலாக முடியாமல் இருந்த பட்டா மாற்றத்தை மக்களுடன் முதல்வர் திட்டம் மூலம் மூன்றே நாளில் முடித்து வைத்ததற்கு தமிழ்நாடு அரசுக்கு தஞ்சையை சேர்ந்த விவசாயி சந்திரசேகரன் நன்றி தெரிவித்துள்ளார். தஞ்சை மாவட்டம், கும்பகோணம் வட்டம், வலையப்பேட்டை வருவாய் கிராமம், மாங்குடியில் வசிப்பவர் முத்தையன் மகன் சந்திரசேகரன். விவசாய குடும்பத்தை சேர்ந்த இவர், மாங்குடி கிராமத்தை சேர்ந்த மாரிமுத்து என்பவரிடம் இருந்து கடந்த 1988ம் ஆண்டு 21 சென்ட் நிலத்தை வாங்கி உள்ளார். நிலத்திற்கு பட்டா மாற்றம் செய்ய சந்திரசேகரன் பல ஆண்டுகளாக முயன்றும் பட்டா மாற்றம் நடைபெறவில்லை.

குறிப்பாக அதிமுக ஆட்சியில் மக்கள் நேர்காணல் முகாம் வலையப்பேட்டை வருவாய் கிராமம், மாங்குடியில் நடைபெற்றது. அந்த முகாமில் கலந்து கொண்ட விவசாயி சந்திரசேகரன் இந்த நிலத்திற்குப் பட்டா மாற்றம் கோரி மனு கொடுத்தார். இருப்பினும், நீண்டகாலமாக பட்டா மாற்றம் கிடைக்கப்பெறாமல் இருந்தது. இந்த நிலையில், மக்கள் குறை தீர்க்கும் திட்டமாக விளங்கும் “மக்களுடன் முதல்வர்” எனும் திட்டத்தை தமிழ்நாடு அரசு தற்போது நடைமுறைப்படுத்தி வருகிறது.

குறிப்பாக, ஒவ்வொரு கிராமத்திலும், அந்தந்த வட்டார தாசில்தார் தலைமையில் முகாம் நடத்தி மக்கள் குறைகளைக் கேட்டுத் தீர்வு காணுமாறு அதிகாரிகளுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி, லட்சக் கணக்கான மக்களின் கோரிக்கைகள் நிறைவேறி மக்கள் தமிழக அரசை பாராட்டி வருகின்றனர். அந்தவகையில், மக்களுடன் முதல்வர் திட்டத்தின்படி, கும்பகோணம் தாசில்தார் அலுவலகத்திலிருந்து வலையப்பேட்டை வருவாய் கிராமத்தைச் சேர்ந்த மாங்குடி கிராமத்தில் கடந்த டிச.20ம் தேதி மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடைபெற்றது.

இந்த முகாமிற்கும் உரிய ஆவணங்களுடன் சென்று சந்திரசேகரன் பட்டா மாற்றம் கோரி விண்ணப்பம் செய்துள்ளார். அந்த விண்ணப்பத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு ஜன.2ம் தேதி சந்திரசேகரனுக்கு பட்டா மாற்றம் செய்யப்பட்டு கும்பகோணம் வட்டாட்சியர் அலுவலகத்தின் இணைய சேவை மூலம் வெளியிடப்பட்டது. இதனையடுத்து தனக்கு பட்டா மாற்றம் கிடைத்த செய்தியை இணையத்தின் மூலம் அறிந்து விவசாயி சந்திரசேகரன் அளவிலா ஆனந்தம் அடைந்திருக்கிறார். மேலும், பட்டா மாற்றத்திற்கு காரணமான மக்களுடன் முதல்வர் திட்டத்திற்கும், தமிழ்நாடு அரசுக்கும் நன்றியை தெரிவித்துள்ளார்.

The post மக்களுடன் முதல்வர் திட்டம் மூலம் 35 ஆண்டுகளுக்கும் மேலாக முடியாத பட்டா மாற்றம் 3 நாளில் முடித்து வைப்பு: தமிழ்நாடு அரசுக்கு விவசாயி சந்திரசேகரன் நன்றி appeared first on Dinakaran.

Tags : Chandrasekaran ,Tamil Nadu Government ,CHENNAI ,Tanjore ,Thanjavur district ,Kumbakonam circle ,Velayapet ,Dinakaran ,
× RELATED ஆன்லைன் சூதாட்டம் பற்றி...