×

தேசவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டது அம்பலம் நாம் தமிழர் நிர்வாகிகள் மீது கைது நடவடிக்கை: ஒன்றிய அமைச்சர் பரபரப்பு பேட்டி

கோவை: நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளின் செயல்பாடுகளை என்ஐஏ தொடர்ந்து கண்காணித்ததில் நாட்டிற்கு எதிரான செயல்கள் செய்திருப்பதை உறுதிப்படுத்தி உள்ளனர் என ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் கோவையில் பேட்டியளித்தார். இதையடுத்து நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் மீது கைது நடவடிக்கை இருக்கும் என தெரிகிறது. இந்தியாவில் விடுதலை புலிகள் அமைப்பு (எல்டிடிஇ) தடை செய்யப்பட்டுள்ளது. இந்த அமைப்புடன் தொடர்பில் உள்ளவர்களை என்ஐஏ (தேசிய புலனாய்வு முகமை) மற்றும் தமிழ்நாடு காவல் துறை கியூ பிரிவும் ரகசியமாக கண்காணித்து வருகிறது.

இலங்கையில் நடந்த இறுதிகட்ட போரின்போது விடுதலை புலிகள் அமைப்புகளை சேர்ந்த பல்லாயிரக்கணக்கானவர்கள் வெளிநாடுகளில் அகதிகளாக தஞ்சமடைந்தனர். அப்படி தஞ்சமடைந்த தடை செய்யப்பட்ட விடுதலை புலிகள் அமைப்புகளுடன் ரகசியமாக நாம் தமிழர் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் தொடர்பு வைத்திருப்பதாக கூறப்படுகிறது. அதேநேரம், வெளிநாடுகளில் உள்ள விடுதலை புலிகள் அமைப்பு ஒன்று சேர பல்வேறு முயற்சிகள் நடப்பதாகவும், இதற்காக கடந்த சில மாதங்களுக்கு முன்பு கேரளா அருகே போதை பொருட்கள் மற்றும் பயங்கர ஆயுதங்களை இலங்கைக்கு படகு மூலம் கடத்த முயன்றதை இந்திய கடலோர காவல் படையினர் பிடித்து என்ஐஏ அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

இது தொடர்பாக என்ஐஏ அதிகாரிகள் விடுதலை புலிகள் அமைப்பில் உளவுத்துறையில் பணியாற்றிய முக்கிய நிர்வாகியான சற்குணம் (எ) சபேசன் உட்பட 5க்கும் மேற்பட்டோரை கைது செய்து விசாரணை நடத்தினர். இதில் வெளிநாடுகளில் உள்ள விடுதலை புலிகள் அமைப்பு நிர்வாகிகளிடம் இருந்து சட்டவிரோதமாக நன்கொடை என்ற பெயரில் பெற்ற பல நூறு கோடி ரூபாய் நிதி இந்தியாவிற்குள் வந்து இருப்பதாக என்ஐஏவிடம் முக்கிய நிர்வாகி பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் தடை செய்யப்பட்ட அமைப்பிடம் இருந்து நிதி உதவி பெற்ற நபர்கள் குறித்து என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

அதில் தமிழ்நாட்டை சேர்ந்த நாம் தமிழர் கட்சியை சேர்ந்த யூடியூபர் சாட்டை துரைமுருகன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பலர் நிதி உதவி பெற்றது தெரியவந்தது. அதேநேரம், இலங்கை அரசும் விடுதலை புலிகள் அமைப்புகளிடம் இந்தியாவில் அதிகளவில் நிதி உதவி பெறுவதாக ஆதாரங்களை இந்திய அரசிடம் வழங்கியதாக கூறப்படுகிறது. அதன் அடிப்படையில் பணம் பெற்ற நபர்களின் பட்டியலை என்ஐஏ அதிகாரிகள் எடுத்தனர். அதில் நாம் தமிழர் கட்சியின் செய்தி தொடர்பு கொள்கை பரப்பு மாநில செயலாளரும், யூடியூபருமான சாட்டை துரைமுருகன், தொழில்நுட்ப பாசறை பிரிவு முன்னாள் நிர்வாகி ரஞ்சித்குமார் (33), மாநில கொள்கை பரப்பு செயலாளர் இசை மதிவாணன் (40), மாவட்ட தகவல் தொழில் நுட்ப அணி செயலாளர் விஷ்ணு பிரதாப் (25), முன்னாள் நிர்வாகி சென்னை கொளத்தூரைச் சேர்ந்த பொறியாளர் பாலாஜி (33) உள்ளிட்டோர் நிதி பெற்றதாக தெரிய வந்துள்ளது.

அதைதொடர்ந்து என்ஐஏ அதிகாரிகள் குழுவினர் கடந்த 2ம் தேதி அவர்களின் வீடுகள் உள்ளிட்ட இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர். சென்னையில் கொளத்தூர் பாலாஜி நகர் 2வது குறுக்கு தெருவில் வசிக்கும் பொறியாளர் பாலாஜி (33) வீட்டில் முக்கிய ஆவணங்கள் சில சிக்கியதாக தெரியவந்துள்ளது. அதேபோல தமிழ்நாடு முழுவதும் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த பலரின் வீடுகளில் ஒரே நேரத்தில் என்ஐஏ சோதனை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் சோதனை மீதான நடவடிக்கைக்கு தடை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் நாம் தமிழர் கட்சி வழக்கறிஞர் பாசறை தலைவர் சேவியர் பெலிக்ஸ், மாநில செயலாளர் சங்கர் ஆகியோர் நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன்பு முறையீடு செய்தனர்.

அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும் கூறினர். அதை ஏற்ற நீதிபதி எம்.எஸ்.ரமேஷ், மனுவை பிற்பகலில் விசாரிப்பதாக கூறி அனுமதி அளித்தார்.  இந்நிலையில் துப்பாக்கி தயாரிப்பது குறித்து யூடியூபில் வீடியோ வெளியிட்டதாக நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த இரு பொறியியல் பட்டதாரிகள் மீது, தேசிய புலனாய்வு முகமை வழக்குப்பதிவு செய்திருந்தது. சென்னை பூந்தமல்லியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள இந்த வழக்கின் அடிப்படையில், தேசிய புலனாய்வு முகமை, நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகளுக்கு சம்மன் அனுப்பியுள்ளது. அவர்களின் வீடுகளிலும் சோதனை நடத்தியது.

இந்நிலையில், தேசிய புலனாய்வு முகமை அனுப்பிய சம்மனை ரத்து செய்யக் கோரி இளைஞரணி அமைப்பாளர் இடும்பவனம் கார்த்திக் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். மக்களவை தேர்தலில் கட்சியை முடக்கும் வகையில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. என்ஐஏ விசாரணைக்கு ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்பட அனைவரும் தயாராக இருப்பதாகவும், அதற்கு உரிய கால அவகாசத்தை வழங்க வேண்டும், சம்மனை ரத்து செய்ய வேண்டும் என கோரியுள்ளார்.

இந்த வழக்கு அவசர வழக்காக விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், நீதிபதி சுந்தர் மோகன் ஆகியோரடங்கிய அமர்வு விசாரித்தபோது, கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேஷ், மனுதாரர் திங்கட்கிழமை (இன்று) ஆஜராக அனுமதித்துள்ளோம். கைது நடவடிக்கை ஏதும் இருக்காது, சட்டத்துக்கு உட்பட்டு நடவடிக்கை எடுப்போம் என்று தெரிவித்தார். இதையடுத்து நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்தனர். இந்நிலையில் தேசத்தின் ஒற்றுமை அல்லது தேசத்திற்கு எதிரான செயல்களில் நாம் தமிழர் கட்சியினர் ஈடுபட்டு இருக்கிறார்கள் என்பதை என்ஐஏ (தேசிய புலனாய்வு முகமை) சோதனை காட்டி கொடுத்துள்ளது என ஒன்றிய இணை அமைச்சர் எல். முருகன் பேட்டியளித்து பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.

நீலகிரி மற்றும் கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் கோவை விமான நிலையம் வந்தார். கேரளா மற்றும் தமிழக நாடாளுமன்ற பொறுப்பாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பாஜ தேசிய அமைப்பு பொது செயலாளர் பி.எல். சந்தோசும் கோவை விமான நிலையம் வந்திருந்தார். அப்போது ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் அளித்த பேட்டி: தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் பாஜ கூட்டணியை பொறுத்தவரை தேசிய தலைமை முறையான அறிவிப்பு வெளியிடுவார்கள்.

எத்தனை கட்சிகள் கூட்டணியில் வருகிறார்கள், யாரெல்லாம் வருகிறார்கள் என தேசிய தலைமை தெரிவிக்கும். வேட்பாளர்கள் மற்றும் போட்டியிடும் தொகுதிகள் குறித்து தேசிய தலைமை மற்றும் நாடாளுமன்ற குழு அறிவிப்பார்கள். பாஜ மாநில தலைவர் அண்ணாமலை விரும்பி கோவையில் போட்டியிட்டால் அதற்கான வேலைகளை செய்ய தயாராக உள்ளோம். 2014 தேர்தலில் பாஜ தலைமையிலான கூட்டணி அமைத்து கிட்டத்தட்ட 19 சதவீத வாக்குகள் பெற்றதோடு, கன்னியாகுமரி மற்றும் தர்மபுரியில் வெற்றி பெற்றோம். எனவே 3வது அணி அல்லது திமுக, அதிமுக அல்லாத மற்ற கட்சிகள் வரமுடியாது என்பதை ஏற்கனவே பொய்யாக்கி இருக்கிறோம்.

தேசத்தின் ஒற்றுமை அல்லது தேசத்திற்கு எதிரான செயல்களில் நாம் தமிழர் கட்சியினர் ஈடுபட்டு இருக்கிறார்கள் என்பதை என்ஐஏ (தேசிய புலனாய்வு முகமை) சோதனை காட்டி கொடுத்துள்ளது. என்ஐஏ நாம் தமிழர் கட்சியின் செயல்பாடுகளை தொடர்ந்து கண்காணித்த பிறகு நாட்டிற்கு எதிரான செயல்கள் செய்திருப்பதை உறுதிப்படுத்தி உள்ளனர். என்ஐஏ தேசத்திற்கும், தேச ஒற்றுமைக்கும் எதிராக செயல்படுபவர்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளது. நாம் தமிழர் கட்சி தேசத்திற்கு எதிராக செயல்பட்டு கொண்டிருப்பதை இது காட்டுகிறது.

இந்த நாட்டை பாதுகாக்கும் மிக முக்கியமான அமைப்பு என்ஐஏ. இது நாட்டில் தீவிரவாதம், பயங்கரவாதம், தேச ஒற்றுமையை சீர்குலைப்பவர்களை கண்காணித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் அமைப்பாக உள்ளது. அந்த அமைப்பு அவர்களது வேலையை சிறப்பாக செய்து கொண்டிருக்கின்றனர். தவறு செய்பவர்களிடம் கேள்வி கேட்கும்போது, ‘என்னை மிரட்டுகிறார்கள், என்னை காப்பாற்றுங்கள்’ என அலறுவார்கள். அதைதான் இப்போது தவறு செய்தவர்கள் (நாதக) செய்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார். ஒன்றிய இணை அமைச்சர் இவ்வாறு கூறியிருப்பதன் மூலம் நாம் தமிழர் கட்சியின் சாட்டை துரைமுருகன் உள்ளிட்ட நிர்வாகிகள் மீது விரைவில் கைது நடவடிக்கை இருக்கும் என கூறப்படுகிறது.

* தேசத்திற்கு எதிரான செயல்களில் நாம் தமிழர் கட்சி ஈடுபட்டுள்ளதை என்ஐஏ உறுதி செய்துள்ளது.

* நாட்டை பாதுகாக்கும் மிக முக்கியமான அமைப்பு என்ஐஏ.

* தேச ஒற்றுமையை சீர்குலைப்பவர்களை கண்காணித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்.

The post தேசவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டது அம்பலம் நாம் தமிழர் நிர்வாகிகள் மீது கைது நடவடிக்கை: ஒன்றிய அமைச்சர் பரபரப்பு பேட்டி appeared first on Dinakaran.

Tags : Ambalam Nam ,Union Minister ,Govai ,NIA ,L. Murugan ,Goa ,Stirbharpu ,
× RELATED கடந்த 10 ஆண்டுகளில் கிருஷ்ணகிரி பாஜக...