×
Saravana Stores

2 படகுகளுடன் தமிழக மீனவர்கள் 23 பேர் கைது இலங்கை கடற்படை அட்டூழியம்

ராமேஸ்வரம்: பாக் ஜலசந்தி கடலில் நேற்று இரவில் மீன்பிடித்த தமிழக மீனவர்கள் 23 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். இரண்டு படகுகளையும் சிறைபிடித்தனர். ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று காலை 600க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் பாக் ஜலசந்தி கடலில் மீன்பிடிக்க சென்றனர். நேற்று இரவில் வழக்கம் போல் நடுக்கடலில் இவர்கள் மீன்பிடிப்பில் ஈடுபட்டனர். நள்ளிரவில் ரோந்து கப்பலில் அப்பகுதிக்கு வந்த இலங்க கடற்படையினர் ஆர்வத்துடன் மீன்பிடித்து கொண்டு இருந்த மீனவர்களை விரட்டியடித்தனர். ஒருசில படகுகளை ரோந்து கப்பலில் தொடர்ந்து விரட்டி சென்றனர்.

அப்போது தங்கச்சிமடத்தை சேர்ந்த மீனவர்கள் ஜேம்ஸ், சகாயராஜ் ஆகியோருக்கு சொந்தமான இரண்டு விசைப்படகுகளை சிறைபிடித்தனர். இதனை பார்த்த சக மீனவர்கள் அப்பகுதியில் இருந்து தங்களுடைய படகுகளை வேறு பகுதிக்கு ஓட்டி சென்று இரவு முழுவதும் மீன்பிடித்து இன்று காலை கரை திரும்பினர். சிறைபிடிக்கப்பட்ட இரண்டு படகில் இருந்த தமிழக மீனவர்கள் அந்தோணி, இளங்கோ கேவா, அமுல், சுபாஷ் சந்திரபோஸ், சுதாகர், மணி, பெக்கர், சேவியர், ஆரோக்கிய ரஞ்சித் உள்ளிட்ட 23 பேரை கைது செய்த இலங்கை கடற்படையினர் 2 படகுடன் ஊர்காவல்துறை கடற்படை முகாமிற்கு அழைத்து சென்றனர். அங்கு கடற்படை உயர் அதிகாரிகள் விசாரணை செய்தனர்.

இன்று காலை, கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 23 மீனவர்களையும் யாழ்பாணத்தில் உள்ள இலங்கை கடல் தொழில் நீரியல் வளத்துறை அதிகாரிகள் வசம் ஒப்படைத்தனர். அதிகாரிகளின் முழுமையான விசாரணைக்ககுப்பின் இன்று மாலைக்குள் மீனவர்கள் அனைவரும் இலங்கை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர். மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்ட சம்பவம் ராமேஸ்வரம், தங்கச்சிமடம், பாம்பன் பகுதியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே, இரவில் கடலில் மீன்பிடித்து இன்று காலை ராமேஸ்வரம் வந்து சேர்ந்த படகுகளில் ஓரளவிற்கு மீன்பாடு இருந்ததால் தங்களுக்கு நஷ்டம் ஏற்படவில்லை என்று படகு உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

The post 2 படகுகளுடன் தமிழக மீனவர்கள் 23 பேர் கைது இலங்கை கடற்படை அட்டூழியம் appeared first on Dinakaran.

Tags : Nadu ,Sri Lankan Navy ,Rameswaram ,Bagh Strait ,Pak strait ,Sri ,Navy ,
× RELATED ராமேஸ்வரம் மீனவர் 16 பேர் சிறைபிடிப்பு