×

தாலுகா அலுவலகம் முன்பு விவசாயிகள் போராட்டம்

 

திருச்செங்கோடு, பிப்.4: எலச்சிபாளையம் ஒன்றியம், கோக்கலை எளையம்பாளையம் பகுதியில் கல்குவாரி கிரசர்கள் இயங்கி வருகிறது. இந்த கல்குவாரிகள் சட்டத்திற்கு புறம்பாக இயங்கி வருகிறது எனக்கூறி அப்பகுதி விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வரும் நிலையில், வீடுகளுக்கும், குவாரிகளுக்கும் இடையேயான இடைவெளி குறித்தான அளவீடுகள் செய்து தர வேண்டும் என கிராம மக்கள் தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை வைத்து வந்தனர். இதையடுத்து, சில வாரங்களுக்கு முன்பு நிலம் அளவீடு செய்யப்பட்டது. ஆனால் நீண்ட நாட்கள் ஆகியும் அளவீடு செய்ததற்கான சான்றிதழ்கள் ஏதும் வழங்காமல் அதிகாரிகள் காலதாமதம் செய்து வந்ததாக தெரிகிறது.

இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை, சான்றிதழ் பெறுவதற்காக 20க்கும் மேற்பட்ட விவசாயிகள் தாலுகா அலுவலகத்தில் காத்திருந்தனர். மாலை 4 மணி ஆகியும் சான்றிதழ்கள் வழங்காததால் ஆத்திரமடைந்த விவசாயிகள், போராட்டக்குழு தலைவர் பழனிவேல் மற்றும் சிபிஎம் ஒன்றிய கவுன்சிலர் சுரேஷ் தலைமையில் இரவு 10 மணியளவில் தாலுகா அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, டவுன் இன்ஸ்பெக்டர் மகேந்திரன் தலைமையிலான போலீசார் மற்றும் திருச்செங்கோடு டிஎஸ்பி இமயவரம்பன் உள்ளிட்டோர் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று உடனடியாக அளவீடு விபரங்கள் அவர்களுக்கு கொடுக்கப்பட்டது. இதனால் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.

The post தாலுகா அலுவலகம் முன்பு விவசாயிகள் போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Thiruchengode ,Kalquari ,Elachipalayam Union ,Kokalai Elayampalayam ,Dinakaran ,
× RELATED காரியாபட்டி கல்குவாரியை மூட வலியுறுத்தி கிராம மக்கள் மறியல் போராட்டம்